‘கர்நாடகாவைச் சேர்ந்த நிர்மலா சீதாராமன்’- மோடியின் பிரசார பேச்சால் வலுக்கும் எதிர்ப்பு

'நிர்மலா சீதாராமன், கர்நாடகாவைச் சேர்ந்தவர்' என அங்கு நடந்த பிரசார கூட்டத்தில் மோடி பேசியுள்ளதற்குக் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. 

மோடி

கர்நாடகாவில், வரும் மே 12-ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், ஒட்டுமொத்த கர்நாடகாவும் மிகவும் பரப்பரபாகக் காணப்படுகிறது. காங்கிரஸ், பா.ஜ.க என இரு கட்சிகளும் தங்களின் பலத்தை நிரூபிக்க கடும் போட்டி போட்டு வருகின்றன. அங்கு நடக்கும் பிரசார கூட்டத்தில், இந்த இரு கட்சிகளுக்குமிடையே வார்த்தைப் போர் நடந்துவருகிறது. பா.ஜ.க காங்கிரஸையும், காங்கிரஸ் பா.ஜ.க-வையும் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. பிரதமர் மோடியும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுவருகிறார்கள்.

இதேபோல, கர்நாடகாவின் பெல்லாரியில் நேற்று நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “கர்நாடகாவில் பெண்களுக்கு பாதுகாப்பு மிகவும் குறைந்துள்ளது. பா.ஜ.க அரசு பெண்களுக்கு எப்போதும் முன்னுரிமை வழங்கும். அதனால்தான் கர்நாடகாவைச் சேர்ந்த நிர்மலா சீதாராமனை இந்தியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சராக நியமித்துள்ளது. அதேபோல, கர்நாடகாவின் வெங்கைய நாயுடுவை துணை குடியரசுத் தலைவராக்கி இருக்கிறது”எனக் கூறினார்.

தமிழகத்தைச் சேர்ந்த நிர்மலா சீதாராமனை கர்நாடகாவைச் சேர்ந்தவர் என ஓட்டுக்காக மோடி கூறுவது மிகவும் கண்டனத்துக்குரியது என சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்துவருகின்றனர். மோடியின் இந்தப் பேச்சுக்கு கன்னட அமைப்பினரிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதை வைத்து சமூக வலைதளங்களில் பலரும் மோடியை கலாய்த்துவருகிறார்கள். 

இந்தியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருக்கும் நிர்மலா சீதாராமன் தமிழகத்தில் உள்ள மதுரையில் பிறந்தவர். இவர், ஆந்திராவைச் சேர்ந்த பாராகல பிரபாகர் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். கர்நாடகாவிலிருந்து  மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் நிர்மலா சீதாராமன் என்பது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!