திடீர் மாரடைப்பு! பிரசாரத்தின்போது உயிரிழந்த பா.ஜ.க வேட்பாளர்

கர்நாடகா, ஜெயநகர் பாஜக எம்.எல்.ஏ-வும் வரும் சட்டசபைத் தேர்தலின் வேட்பாளருமான பி.என்.விஜயகுமார் திடீரென மரணமடைந்தார்.

கர்நாடகா தேர்தல்

கர்நாடகாவில் வரும் மே 12-ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற இருப்பதால் அங்கு பிரசார களம் சூடுபிடித்து வருகிறது. காங்கிரஸும் பா.ஜ.க-வும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இரு கட்சிகளின் மூத்த தலைவர்களும் அமைச்சர்களும் கர்நாடகாவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், கர்நாடகாவின் ஜெயநகர் தொகுதியின் பா.ஜ.க எம்.எல்.ஏ-வும் வரும் சட்டசபைத் தேர்தலின் வேட்பாளருமான பி.என்.விஜயகுமார், மாரடைப்பு காரணமாகத் திடீரென உயிரிழந்துள்ளார். இது கர்நாடகத் தேர்தல் களத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று ஜெயநகர் தொகுதியில் விஜயகுமார் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் அதே இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். பிறகு, அவர் உடனடியாக ஜெயதேவா இன்ஸ்டிடியூட் ஆஃப் கார்டியாலஜி கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பிறகு, நேற்று இரவு சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் கர்நாடகாவில் இருக்கும் பா.ஜ.க-வினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இவரின் மறைவுக்குப் பல்வேறு அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பா.ஜ.க தனது ட்விட்டர் பக்கத்தில் விஜயகுமாருக்கு இரங்கல் தெரிவித்து கருத்து பதிவிட்டுள்ளது. அதில், “அவருடைய பணிவு, கட்சி மற்றும் மக்களுக்கான அர்ப்பணிப்பு ஆகியவை மிகவும் பெரியது. இவரின் பிரிவு எங்களுக்கு ஒரு பெரிய இழப்பு. அவர் குடும்பத்தினருக்கு எங்களின் இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்” எனப் பதிவிட்டுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!