தென்காசி மாணவருக்கு ராஜஸ்தானில் நீட் தேர்வு மையம்...! சி.பி.எஸ்.இ-யின் அநீதி | CBSE allotted NEET exam centre to Rajasthan state for Tamil Nadu Students

வெளியிடப்பட்ட நேரம்: 14:32 (04/05/2018)

கடைசி தொடர்பு:14:32 (04/05/2018)

தென்காசி மாணவருக்கு ராஜஸ்தானில் நீட் தேர்வு மையம்...! சி.பி.எஸ்.இ-யின் அநீதி

தென்காசி மாணவருக்கு ராஜஸ்தானில் நீட் தேர்வு மையம்...! சி.பி.எஸ்.இ-யின் அநீதி

தென்காசி மாணவருக்கு ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவிலும், அரியலூர், தஞ்சாவூர், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு கேரளாவிலும் நீட் தேர்வு மையத்தை ஒதுக்கி, கடும் கண்டனத்துக்குள்ளாகியுள்ளது மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. 

நீட் தேர்வு

மருத்துவப் படிப்புக்குரிய தகுதித்தேர்வான நீட் தேர்வு, 06.05.2018 அன்று நடக்கவிருக்கிறது. அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட மாணவர்களுக்கு நீட் தேர்வு எழுதுவதற்கான மையங்களை கேரளாவிலும் ராஜஸ்தானிலும் ஒதுக்கீடு செய்துள்ளது சி.பி.எஸ்.இ. 

வெளிமாநிலங்களில் தேர்வுமையத்தை ஒதுக்கீடு செய்ததை எதிர்த்து, சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த மைலவன், குருசாமி இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். `தமிழக மாணவர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வு மையத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டும். அண்டை மாநிலங்களில் நீட் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டால் மாணவர்கள் மனதளவிலும் பொருளாதாரரீதியிலும் பாதிக்கப்படுவர். எனவே, கூடுதல் தேர்வு மையங்களை ஏற்படுத்தி தமிழக மாணவர்களுக்குத் தமிழகத்துக்குள்ளேயே தேர்வு மையங்களை ஒதுக்க வேண்டும்' என தீர்ப்பு வழங்கியது சென்னை உயர் நீதிமன்றம். 

இதை எதிர்த்து 03.05.2018 அன்று உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது சி.பி.எஸ்.இ. அதில் `தமிழக மாணவர்களுக்கு தமிழகத்திலேயே தற்போது தேர்வு மையங்களை அமைக்க அவகாசம் இல்லை. தேர்வு மைய ஒதுக்கீடு கணினி மூலமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதால், இதில் மாற்றம் செய்ய முடியாது' என்று சி.பி.எஸ்.இ தெரிவித்துள்ளது.

இதை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், இன்று தனது தீர்ப்பில், `ஏற்கெனவே ஒதுக்கிய தேர்வு மையங்களில்தான் நீட் தேர்வு எழுத வேண்டும்' என்று உத்தரவிட்டுள்ளது. 

நீட் தேர்வுஇதுதொடர்பாக, தமிழக மாணவர்களுக்கு தமிழகத்திலேயே நீட் தேர்வு மையங்களை அமைக்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்த வழக்குரைஞர்கள் மைலவன் மற்றும் குருசாமியிடம் பேசினோம். 

``மாணவர்களின் கோரிக்கையைத்தான் சென்னை உயர் நீதிமன்றத்தின் கவனத்துக்கு எடுத்துச் சென்றோம். இதை ஏற்றுக்கொண்டு, உடனே தமிழக மாணவர்களுக்கு தமிழகத்தில் தேர்வு மையத்தை ஒதுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து புதுடெல்லியில் உச்ச நீதிமன்றத்தை நாடியது சி.பி.எஸ்.இ. உச்ச நீதிமன்றத்தில், சி.பி.எஸ்.இ., `மற்ற மாநிலங்களில் அந்தந்த மாநிலத்திலேயே தேர்வு மையத்தை அமைத்திருக்கிறோம். ஆனால், தமிழ்நாட்டு மாணவர்களுக்கு மட்டும்தான் இதர மாநிலத்தில் ஒதுக்கீடு செய்யவேண்டியதாகிவிட்டது' என்று தனது கருத்தைத் தெரிவித்திருந்தது. தமிழ்நாட்டை பாரபட்சம் பார்க்காமல் வஞ்சித்திருக்கிறது சி.பி.எஸ்.இ.

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது, குறிப்பிட்ட மாநிலத்தில் வசிப்பவர்கள் அந்த மாநிலத்தில் மூன்று தேர்வு மையங்களைத் தேர்வுசெய்ய வேண்டும். அதுவும் வசிக்கும் பகுதிக்கு அருகிலேயே தேர்வு செய்ய வேண்டும். `ஒருவேளை விரும்பம் தெரிவித்த மூன்று மையங்களில் ஒதுக்கீடு செய்ய முடியாவிட்டால், மாநிலத்தின் இதர மையத்தில் ஒதுக்கீடு செய்வோம்' எனக் குறிப்பிட்டிருக்கிறது. ஆனால், அவ்வாறு ஒதுக்கீடு செய்யாமல் வேறு மாநிலத்தில் ஒதுக்கீடு செய்திருப்பது தேர்வு விதிமுறைகளின் புறம்பானது. இதை உயர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினோம்.

உயர் நீதிமன்றம், `மூன்று மையங்களில் ஒதுக்கீடு செய்ய முடியாவிட்டால், மாநிலத்தில் வேறு மையத்தில்தான் ஒதுக்கீடு செய்ய வேண்டும்' என்று உத்தரவிட்டது. நேற்று `சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பில் தலையிடுவதில் முகாந்திரம் இல்லை' என்று உச்ச நீதிமன்றம் தெரிவிக்க, சி.பி.எஸ்.இ `நீட் தேர்வுக்கு இன்னும் ஒரு நாள்தான் உள்ளது. ஏற்கெனவே கேள்வித்தாள்களையும் தேர்வு கண்காணிப்பாளர்களையும் சம்பந்தப்பட்ட தேர்வு மையத்துக்கு அனுப்பிவிட்டோம். இதனால் இதைத் திரும்ப மாற்றி அமைப்பது கடினம்' என்று தெரிவித்தது. இதன் அடிப்படையில்தான் குறைந்த காலகட்டத்தில் மாற்றி அமைக்க முடியாது என்ற சி.பி.எஸ்.இ-யின் வாதத்தை ஏற்றுக்கொண்டு, உச்ச நீதிமன்றம் `ஏற்கெனவே ஒதுக்கீடு செய்யப்பட்ட தேர்வுமையங்களில் தேர்வு எழுத அனுமதித்தது.

இந்தப் பிரச்னையில் திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரியைச் சேர்ந்த மாணவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, தென்காசியைச் சேர்ந்த ஒரு மாணவருக்கு ராஜஸ்தானில் தேர்வுமையத்தை ஒதுக்கியிருப்பது அதிர்ச்சியாக இருந்தது" என்றனர். 


டிரெண்டிங் @ விகடன்