வெளியிடப்பட்ட நேரம்: 19:04 (04/05/2018)

கடைசி தொடர்பு:19:04 (04/05/2018)

தொடர்ந்து இரண்டாவது நாளாகச் சந்தையில் இறங்குமுகம் 

சர்வதேச பங்குச் சந்தைகளில் எந்தவித பெரிய முன்னேற்றமோ அல்லது முதலீட்டாளர்களின் மனநிலையை உற்சாகப் படுத்தக்கூடிய வகையிலான நிகழ்வுகளோ இல்லாத நிலையில், இந்திய பங்குச்சந்தை இன்று தொய்வடைந்து காணப்பட்டது.

இன்று இந்திய பங்குச் சந்தையில் நிறுவனங்களின் கடந்த காலாண்டுக்கான செயல்பாடு குறித்த அறிக்கைகளும் மற்ற செய்திகளுமே சந்தையின் போக்கைத் தீர்மானித்தன என்று கூறலாம்.

மும்பை பங்குச் சந்தையின் முக்கியக் குறியீடான சென்செக்ஸ் 187.76 புள்ளிகள் அதாவது 0.53 சதவிகிதம் இறங்கி 34,915.38 என முடிந்தது.
தேசிய பங்குச் சந்தையின் நிஃப்ட்டி 61.40 புள்ளிகள் அதாவது 0.57 சதவிகிதம் சரிந்து 10,618.25-ல் முடிவுற்றது.

அமெரிக்க - சீன நாடுகளுக்கிடையேயான வர்த்தகம் குறித்த பேச்சு வார்த்தைகள் தொடர்ந்து வரும் இந்நிலையில், நேற்று அமெரிக்கச் சந்தையில் குறிப்பிடத்தக்க மாறுதல்கள் ஏற்படவில்லை.

ஆசிய சந்தைகள் இன்று பெரும்பாலும் இறக்கத்தையே கண்டன. இன்று வெளிவரவிருக்கும் அமெரிக்க வேலைவாய்ப்பு மற்றும் ஊதிய மாற்றங்கள் பற்றிய அறிக்கைகளை எதிர்பார்க்கும் நிலையில் முதலீட்டாளர்கள் குறிப்பிடக்கூடிய அளவில் வர்த்தகத்தில் ஈடுபடாததும் இதற்கு ஒரு காரணம்.

ஐரோப்பியச் சந்தைகளில், U.K. மற்றும் ஜெர்மானியச் சந்தைகள் முன்னிலையில் இருந்தாலும், பிரான்ஸ் நாட்டின் சந்தை சற்று தொய்வுடன் இருக்கிறது. 

அந்நியச் செலவாணி சந்தையில் டாலருக்கெதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 66.92 எனச் சரிந்தது இன்றைய பங்குச் சந்தையின் பலவீனத்திற்கு ஒரு காரணம் எனலாம்.

இன்று மார்க்கெட் எகனாமிக்ஸ் வெளியிட்ட அறிக்கையின்படி, இந்திய தனியார் துறை செயல்பாடு கடந்த ஏப்ரல் மாதத்தில் புதிய வணிகங்கள் அதிகரித்திருப்பதால் நல்ல வளர்ச்சி கொண்டிருப்பதாகத் தெரிகிறது. இதன் காரணமாக கடந்த ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நிறுவனங்கள் வேலைவாய்ப்பு அளித்திருக்கின்றன எனத் தெரிகிறது. நிக்கி-IHS மார்க்கெட் சர்வீசஸ் பர்ச்சேஸிங் மேனேஜர்ஸ் குறியீடு மூன்று மாத ஹை-ஆக 51.4 என்ற இலக்கை எட்டியிருக்கிறது என அவ்வறிக்கை தெரிவிக்கிறது.

மெட்டல், டெலிகாம், மருத்துவம் மற்றும் பவர் துறைகளின் பங்குகள் பெரும்பாலும் நஷ்டத்தில் முடிவடைந்தன. 

இன்று விலை உயர்ந்த பங்குகள் :

அதானி போர்ட்ஸ்  2.8%
டெக் மஹிந்திரா  1.5%
கெயில் இந்தியா 2.1%
ஹிந்துஸ்தான் யூனிலீவர் 1% 
லார்சென் & டூப்ரோ பைனான்ஸியல் ஹோல்டிங்ஸ் 3%
ஹாவேல்ஸ் இந்தியா 2.75%
ஐ.சி.இ.சி.ஐ. ப்ரூடன்ஷியல் 2.3%

விலை இறங்கிய பங்குகள் :

சன் பார்மா 3.5%
ஐ.டி.சி  2.8%
பஜாஜ் ஆட்டோ 2.7%
வேதாந்தா 2.3%
யெஸ் பேங்க் 2.3%
எய்ச்சேர் மோட்டார்ஸ் 2.1%
ஆக்ஸிஸ் பேங்க் 2.1%
சிப்லா 2%
என்.டி.பி.சி 1.8%
கோல் இந்தியா 1.7%

இன்று மும்பை பங்குச் சந்தையில் 1115 பங்குகள் விலை உயர்ந்தும், 1580 பங்குகள் விலை குறைந்தும், 130 பங்குகள் முந்தைய விலைகளிலிருந்து மாற்றமில்லாமலும் முடிந்தன.