தமிழக அரசு சி.பி.எஸ்.இ-யிடம் நஷ்டஈடு கேட்க வேண்டும்... கல்வியாளர்கள் கோரிக்கை

தமிழக அரசு சி.பி.எஸ்.இ-யிடம் நஷ்டஈடு கேட்க வேண்டும்... கல்வியாளர்கள் கோரிக்கை

தமிழக மாணவர்கள் வெளி மாநிலங்களுக்குச் சென்று நீட் தேர்வு எழுதவேண்டிய நிலைக்குத் தள்ளியிருக்கிறது, தேர்வை நடத்தும் மத்திய அரசின் இடைநிலைக் கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. இதனால் மாணவர்கள் மிகுந்த மன உளைச்சலில் உள்ளனர்.

நீட் தேர்வு

இந்நிலையில், தமிழக அரசு என்ன மாதிரியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசிடம் முன்வைத்துள்ளனர் கல்வியாளர்கள். 

கல்வியாளரும் பொதுப்பள்ளிக்கான மாநில மேடை பொதுச் செயலாளருமான பிரின்ஸ் கஜேந்திர பாபு, ``சி.பி.எஸ்.இ தேர்வு நடத்த முடிவெடுக்கும்போது, சம்பந்தப்பட்ட மாநில அரசுடன் சி.பி.எஸ்.இ கலந்து பேசவில்லை. இந்த ஆண்டு நீட் தேர்வு எழுத தமிழ்நாட்டிலிருந்து ஒரு லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு இத்தனை சென்டர்கள்தாம் என்பதை முன்னரே தீர்மானித்துவிட்டது சி.பி.எஸ்.இ. எவ்வளவு விண்ணப்பங்கள் வந்திருக்கின்றன என்பதற்குத் தகுந்தாற்போல் தேர்வு மையத்தை அமைக்கவில்லை. இது நூறு பேருக்குச் சமையல் செய்துவிட்டு ஆயிரம் பேரை அழைப்பதுபோல் இருக்கிறது. 

நீட் தேர்வுசி.பி.எஸ்.இ நிர்வாகம் மாநிலத்தில் தேர்வு நடத்தும்போது, அதற்குரிய வசதியை தமிழக அரசிடம் கேட்டுப் பெறுவதில் என்ன தயக்கம்? தமிழக மாணவர்களின் விருப்பம் இல்லாமல் ஏன் அடுத்த மாநிலத்தில் தேர்வு மையத்தை ஒதுக்கீடு செய்தீர்கள்? மாணவர்கள் எளிதில் அணுக முடியாத அளவுக்கு வெளிமாநிலத்தில் தேர்வு மையத்தை அமைத்துள்ளதால், தமிழக மாணவர்கள் பெருமளவில் பாதித்துள்ளனர் என்பதைச் சுட்டிக்காட்டி,  சி.பி.எஸ்.இ நிர்வாகத்திடம் நஷ்டஈட்டை தமிழக அரசு கேட்டுப் பெற வேண்டும். 

சாதாரணக் குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகளும், நீட் தேர்வை எழுத உள்ளனர்; அரசு பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றிருக்கின்றனர். இவர்கள், அடுத்த மாநிலத்துக்குச் சென்று தேர்வு எழுத முடியாத சூழலில் உள்ளனர். இந்த மாணவர்களுக்கு அரசு உடனடியாக ரயில் அல்லது பஸ் வசதியைக் கட்டணமில்லாமல் செய்துகொடுக்க வேண்டும். இதற்கு மாவட்ட ஆட்சித் தலைவரோ அல்லது உயர் அதிகாரிகளோ பொறுப்பேற்று மாணவர்களைத் தேர்வு எழுதவைத்துத் திரும்ப அழைத்துவரும் பணியைச் செய்ய வேண்டும். மாணவர்கள் தங்குவதற்கான செலவை மாநில அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்தச் செலவை சி.பி.எஸ்.இ அமைப்பிடம் கேட்டுப் பெற வேண்டும். 

`தேர்வு எழுதும் மாணவர்கள், 8:30 மணிக்குள் தேர்வு அறைக்குள் வர வேண்டும்' எனக் குறிப்பிட்டுள்ளது சி.பி.எஸ்.இ. சென்னையில் கே.வி பள்ளிக்கு அருகில் வசிப்பவர்கள் எளிதில் தேர்வு மையத்துக்கு வர முடியும். ஆனால், குக்கிராமத்தில் வசிக்கும் மாணவர்கள் சென்னைக்கு எளிதில் வர முடியுமா? முடியாது. இப்போது ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்துக்குப் போய் எழுதச் சொல்வது எந்த வகையில் நியாயம் எனத் தெரியவில்லை. 

விருதுநகரில் உள்ள மாணவர்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தேர்வு மையத்துக்குச் செல்ல 100 கிலோமீட்டர் தூரம் பயணிக்க வேண்டும். விழுப்புரத்தில் உள்ளவர்கள் சேலம் மாவட்டத்துக்குச் செல்ல வேண்டும். மலை மாவட்டங்களில் வசிப்பவர்கள் எப்படி இதர மையங்களுக்குச் செல்வார்கள் எனத் தெரியவில்லை. வெளிமாநிலங்களில் தேர்வு மையத்தை அமைத்திருப்பவர்களுக்கு மட்டுமல்ல, உள்ளூரில் தேர்வு எழுதுபவர்களுக்கும் தமிழக அரசு போக்குவரத்து வசதியைச் செய்துதர வேண்டும். 

தற்போது பள்ளிகளும் கல்லூரிகளும் விடுமுறையில் இருப்பதால், அங்கு மாணவர்களைத் தங்கவைத்து, கட்டணமில்லாப் போக்குவரத்து வசதிக்கு ஏற்பாடு செய்து, அடுத்த நாள் தேர்வுக்கு அனுப்பலாம். இவர்களுக்கு உணவு வசதியும் ஏற்படுத்திக்கொடுக்கலாம். வெளிமாநிலத்துக்கு நிறைய மாணவர்கள் செல்லவேண்டி இருந்தால், அதற்காக ரயிலில் கூடுதல் பெட்டியை இணைக்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்று சொன்னவர், தமிழக அரசு சட்டப்படி செய்யவேண்டிய விஷயங்களையும் பட்டியலிட்டார்.

``இந்திய மருத்துவ கவுன்சில் கொண்டுவந்துள்ள புதிய சட்டத்திருத்தத்தின் அடிப்படையில் நீட் தேர்வு நடத்தப்படுவதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், இந்தப் புதிய சட்டத்திருத்தத்தில் `இந்தியாவில் உள்ள அனைத்து மருத்துவக் கல்வி நிலையங்கள்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் எய்ம்ஸ், ஜிப்மர் போன்ற கல்வி நிறுவனங்களும் அடங்கும். ஆனால், இந்தக் கல்வி நிறுவனங்கள் தனியே தேர்வு நடத்துகின்றன. எப்படி இவர்களை மட்டும் தனியே எழுத அனுமதித்தார்கள் எனத் தெரியவில்லை. இது நீதிமன்றத் தீர்ப்புக்குப் புறம்பாக உள்ளது. `தன்னாட்சி அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனம் என்பது, ஒரு மாநில அரசைவிட வலுவானதா?' என்ற கேள்வி எழுகிறது. ஆனால், மாநில அரசுக் கல்வி நிறுவனங்களில் தேர்வு நடத்தியே தீருவேன் என்று போராடுவது எதற்காக எனத் தெரியவில்லை. ஆகையால், சட்டப்படி ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயமாகவே நீட்  இருக்கிறது.

தமிழக சட்டமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிராக இரண்டு சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவற்றை குடியரசுத் தலைவரின் பார்வைக்கு அனுப்பாமல், மத்திய அரசு அதிகாரிகள் கையில் வைத்துள்ளனர். இந்நிலையில் `சட்ட மசோதாவைவிட அரசு அதிகாரிகள் உயர்வானவர்களா?' என்று கேள்வி எழுகிறது. குடியரசுத் தலைவர், சட்ட மசோதாவை ஏற்றுக் கையெழுத்திட வேண்டும் அல்லது சட்ட மசோதாவை நிராகரித்து அனுப்ப வேண்டும். ஆனால், குடியரசுத் தலைவரின் பார்வைக்கு அனுப்பாமல் மத்திய அரசின் உள்துறை அதிகாரிகள் வைத்துள்ளனர். மாநில அரசு நிறைவேற்றப்படும் சட்ட மசோதாவை அரசு அதிகாரிகள் பிடித்து வைத்துக்கொள்ள சட்டம் இடம் கொடுக்கிறதா எனத் தெரியவில்லை. இது சட்டத்துக்குப் புறம்பானது.  இதையெல்லாம் சுட்டிக்காட்டி உச்ச நீதிமன்றத்தில் நீட் தேர்விலிருந்து விலக்குப் பெற வேண்டும்" என்றார் பிரின்ஸ் கஜேந்திர பாபு. 

நீட் தேர்வு சமூகச் சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், ``இது தமிழக மாணவர்களை வஞ்சிக்கும் செயல். தேர்வு மையத்தை வெளிமாநிலத்தில் அமைக்கும்போது மாணவர்கள் உளவியல்ரீதியாகப் பாதிக்கப்படுவார்கள். வெளிமாநிலங்களுக்குச் சென்று தேர்வு எழுதும்போது எப்படி அவர்கள் எளிதான மனநிலையுடன் சென்று தேர்வு எழுத முடியும்? அச்சமும் பயமும் இருக்கும். இங்கு இருந்து ராஜஸ்தானில் சென்று தேர்வு எழுத 30-40 ஆயிரம் ரூபாய் செலவாகும். இதனால் பின்தங்கிய மாணவர்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

புது இடம், புது சென்டர், அங்கு உள்ள அதிகாரிகள் வேறு மொழியாளர்களாக இருப்பார்கள். ஏதாவது சந்தேகம் என்றால் கேட்க முடியாது. இது கூட்டாட்சிக் கொள்கைக்கு எதிராகவும், தமிழகத்துக்கு எதிரான போக்காகவும் உள்ளது. தமிழகத்தில் நீட்டுக்கு எதிராகப் போராடிவருகிறோம். இதை இன்னும் காதுகொடுத்து கேட்காதவர்களிடம் நீட் தேர்வு மையத்தையாவது தமிழ்நாட்டில் அமையுங்கள் எனக் கேட்கும் அளவுக்கு மறைமுகமான சூழலை உருவாக்கியுள்ளனர். மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு, தமிழ்நாட்டில் கூடுதல் தேர்வு மையங்களை அமைக்க வேண்டும். 

மாணவர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்துத்தருவதற்கு பதிலாக, மாணவர்களுக்கு எதிரியாகச் செயல்படும் அமைப்பாக மாறியிருக்கிறது மத்திய இடைநிலைக் கல்வி வாரியம். இது மிகவும் கொடுமையான விஷயம். மாணவர்களின் கோரிக்கையை நிறைவேற்றாமல் அதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து மாணவர்களின் தேர்வு மையத்தைத் தட்டிப்பறிக்கிறது. தமிழக மாணவர்களுக்கு எதிராகத் திட்டமிட்டுச் செயல்படுவதுபோல் இருக்கிறது" என்றார். 

தமிழக அரசு என்ன மாதிரியான நடவடிக்கையை மேற்கொள்ளப்போகிறது என்பதை உன்னிப்பாகக் கவனித்துவருகின்றனர் பொதுமக்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!