பெற்றோர் வாக்களித்தால் பிள்ளைகளுக்குக் கூடுதல் மதிப்பெண்கள்! | If parents vote in election, then students will get extra marks

வெளியிடப்பட்ட நேரம்: 08:25 (05/05/2018)

கடைசி தொடர்பு:08:25 (05/05/2018)

பெற்றோர் வாக்களித்தால் பிள்ளைகளுக்குக் கூடுதல் மதிப்பெண்கள்!

கர்நாடக மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவருகிறது. பா.ஜ.க, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக்  கட்சியினரும் தீவிரமான பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். கருத்துக் கணிப்பு முடிவுகள் காஞ்கிரஸ் மற்றும் பா.ஜ.க-வுக்கு சம போட்டி இருப்பதாகத்  தெரிவிக்கிறது. இதனால் கட்சிகள், கூடுதல் தொகுதிகளைக் கைப்பற்ற  தீவிர பிரசாரம், தேர்தல் அறிக்கை எனப்  பல விதமான யுத்திகளைக்  கையாண்டு வருகின்றன. 

கர்நாடக சட்டப்பீரவை தேர்தல்

மறுபுறம், பல தன்னார்வ அமைப்புகள், மக்கள் மத்தியில் வாக்களிப்பதன் அவசியம்குறித்து விழிப்பு உணர்வு ஏற்படுத்திவருகின்றன. இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் உள்ள முதன்மை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் கூட்டமைப்பு ஒன்று, மாணவர்களின் பெற்றோர் வாக்களித்தால், மாணவர்களுக்குக் கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

இதுகுறித்து இந்த அமைப்பின் பொதுச் செயலாளர் சாஷி குமார், “கடந்த 2013 -ம் ஆண்டு நடந்த தேர்தலில் இதைச் செய்ய முயன்றோம். ஆனால், ஒரு சில பள்ளிகள் இதற்குச் சம்மதிக்காததால், நிறைவேற்ற முடியவில்லை. இந்த முறை, எங்கள் அமைப்பின் கீழ் இருக்கும் அனைத்துப் பள்ளிகளிலும் இதைச் செயல்படுத்தச் சொல்லியிருக்கிறோம். வாக்குப்பதிவு நாளில் விடுமுறை என்பதால், பெரும்பாலான பெற்றோர்கள் விடுமுறையைக் கொண்டாடச் சென்றுவிடுகின்றனர். இதன்மூலம் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தைப் பெற்றோர்களுடன் மாணவர்களும் தெரிந்துகொள்வார்கள்” என்றார். 

தேர்தலில் வாக்களித்துவிட்டு, தங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கு வந்து கையில் இருக்கும் ‘மை’யை காண்பித்துப் பதிவு செய்துகொள்ளலாம். தாய் மற்றும் தந்தை வாக்களித்தால், அடுத்த ஆண்டில் மாணவர்களுக்குக் கூடுதலாக 4 மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றும், இருவரில் ஒருவர் மட்டும் வாக்களித்தால், இரண்டு மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் மதிப்பெண்களில் மாற்றம் செய்ய முடியாது என்பதால், அவர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.