’எத்தனை பேர் தங்கள் வீட்டில் பட்டியல் இனத்தவரை அழைத்து விருந்து கொடுத்திருக்கிறீர்கள்?’ பா.ஜ.க-வினரை சாடிய பா.ஜ.க எம்.பி!

பா.ஜ.க-வினர், பட்டியல் இனத்தவர் வீட்டில் உணவு உண்பதை பா.ஜ.க எம்.பி., சாவித்திரி பாய் புலே என்பவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

சாவித்திரி பாய் புலே 

உத்தரப்பிரதேச மாநில பா.ஜ.க-வைச் சேர்ந்த எம்.பி., எம்.எல்.ஏ., க்கள், அமைச்சர்கள், முதல்வர் என அனைவரும் பட்டியல் இன மக்களிடம் தங்களை எடுத்துச்செல்ல, அவர்கள் வீட்டில் உணவு உண்பது போன்ற செயல்களில் ஈடுபட்டனர். எனினும், இவை அனைத்தும் அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலை மையமாக வைத்துத்தான் செயல்படுகிறார்கள் எனக்  கடுமையான விமர்சனமும் வைக்கப்பட்டது. அம்மாநில அமைச்சர் சுரேஷ் ரானா, பட்டியல் இனத்தைச்  சேர்ந்த ஒருவரது வீட்டில் வெளியில் இருந்து உணவு ஆர்டர் செய்யப்பட்டு உண்டது பெரும் சர்ச்சையைக்  கிளப்பியது.

இந்நிலையில், 'பா.ஜ.க எம்.பி., சாவித்திரி பாய் புலே, பா.ஜ.க-வினரின் இந்தச்  செயல்கள் போலியானவை' எனக் கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர், “இந்தியாவில்  85 சதவிகிதம் பேர் பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள்தான். அவர்கள் பெரும்பாலும் ஏழைகள். பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் வீட்டில் உணவு உண்பது போன்றவை ஒரு போலியான செயல். இதுபோன்ற செயல்களால் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்களை அவமானம்தான் செய்கிறீர்கள். 

உயர் சாதியினர் செய்யும் உணவு வகைகளை எடுத்துவந்து,  புதிய தட்டுகளில், பாட்டில் தண்ணீரை பட்டியல் இனத்தவர் வீட்டில் வைத்து உண்பதால் என்ன பயன்? இதன்மூலம் நீங்கள் என்ன சொல்லவருகிறீர்கள்? உண்மையிலேயே அவர்கள்மீது அக்கறை இருந்தால் , அவர்கள் சமைத்த , அவர் பரிமாறிய, அவர்கள் தட்டில் அல்லவா உண்ண வேண்டும். எத்தனை பா.ஜ.க தலைவர்கள் தங்கள் வீட்டில் பட்டியல் இனத்தவரை அழைத்து விருந்து கொடுத்திருக்கிறீர்கள். பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு நல்லது செய்வது என்றால், அவர்களுக்குக் கல்வி மற்றும் வேலை வாய்ப்பை உருவாக்குவதுதானே தவிர, அவர்கள் வீட்டில் உணவு உண்பது போன்று சமூக வலைதளங்களில் புகைப்படம் பகிர்வதல்ல” என்றார்.   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!