கர்நாடகத் தேர்தலால் சொந்த மக்களை மறந்துபோன யோகி ஆதித்யநாத்!#duststorm

கர்நாடக பரப்புரை கூட்டத்தில் இருந்து விடுபட்டு, புழுதி புயலால் பாதிக்கப்பட்ட உ.பி. மக்களுக்கு ஆறுதல் அளித்தார் யோகி ஆதித்யநாத்

கர்நாடகத் தேர்தலால் சொந்த மக்களை மறந்துபோன யோகி ஆதித்யநாத்!#duststorm

ர்நாடகத் தேர்தலில் வெற்றிபெற்றே தீர வேண்டுமென்று கங்கணம் கட்டிக்கொண்டு, பாரதிய ஜனதா தலைவர்கள் அங்கே முகாமிட்டுள்ளனர். பிரதமர் மோடி முதல் நம்ம ஊர் மத்திய அமைச்சர் ராதாகிருஷ்ணன் வரை கர்நாடகத்தில்தான் கிடையாகக் கிடக்கிறார்கள். கர்நாடக மக்களை மூளைச் சலவை செய்யும் விதத்தில் பிரசாரத்தில் பா.ஜ.க தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். 'நான் மனதார கன்னடர்' என்று பிரதமர் மோடி பரப்புரை கூட்டங்களில் பேசிவருகிறார்.' அப்படியென்றால், எங்கள்மீது ஏன் இந்தியைத் திணிக்கிறீர்கள்' என்று சித்தராமையா பதிலடி கொடுக்கிறார். தமிழரான நிர்மலா சீதாராமனை கர்நாடகத்தைச் சேர்ந்தவர் என்று பிரதமர் பேசிவைக்க, கன்னடர்கள் கொந்தளித்தனர். இப்படியாக, கர்நாடகத் தேர்தலில் பரப்புரை காமெடியுடன் அனல்பறந்துகொண்டிருக்கிறது. 

யோகி ஆதித்யாநாத்

கர்நாடகத்தில் பாரதிய ஜனதா வெற்றிபெற வேண்டுமென்பதற்காக முகாமிட்டிருந்தவர்களில் மற்றொரு முக்கிய வி.ஐ.பி., உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத். கர்நாடகத்தில், ஆதித்யநாத் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, உத்தரப்பிரதேசத்தில் ஆக்ரா உள்ளிட்ட நகரங்களை வரலாறு  காணாத புழுதிப் புயல் தாக்கியது.  இதில் சிக்கி, 73 உத்தரப்பிரதேச மக்கள் பலியானார்கள். 91 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். சொந்த மாநில மக்கள் புயலில் உயிரிழந்த நிலையிலும், யோகி ஆதித்யநாத் உடனடியாக  உத்தரப்பிரதேசம் செல்லவில்லை.

கர்நாடக முதல்வர் சித்தராமையா,'' உத்தரப்பிரதேச மக்களே உங்கள் முதல்வர் கர்நாடகத்துக்கு தேவைப்படுகிறார்.  விரைவில் உங்கள் மாநிலத்துக்கு திரும்பி, தன் பணிகளைக் கவனிப்பார் என நம்புகிறேன் ' என்று  குத்தலாக ட்வீட்  பதிவிட்டிருந்தார். உ.பி எதிர்க்கட்சிகளும் விமர்சித்தன. இதையடுத்து, நேற்று  உத்தரப்பிரதேசத்துக்குச் சென்ற யோகி ஆதித்யநாத், மருத்துவமனைக்குச் சென்று காயமடைந்தவர்களைச் சந்தித்து ஆறுதல் அளித்தார். 

கடந்த புதன்கிழமை இரவு ஏற்பட்ட புழுதிப் புயலில், ஆக்ரா மாவட்டத்தில் அதிகபட்சமாக 46 பேர் உயிரிழந்தனர். முஷாபார் நகர், உன்னவோ, ரே பரேலி, சரண்பூர் , பிரோஷாபாத் மாவட்டங்களும் கடும் பாதிப்புக்குள்ளாகின. பிரதமர் நிவாரண நிதியில் இருந்து உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் அறிவிக்கப்பட்டுள்ளது. 'விரைவில் மற்றொரு புழுதிப் புயல் தாக்கக்கூடும்' என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!