`தூக்கில் போட வேண்டும்!’ - பாலியல் குற்றங்களுக்கு எதிராகக் கொந்தளிக்கும் சந்திரபாபு நாயுடு

`பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுவோர்களை பொதுமக்கள் முன்னிலையில் தூக்கில் போடவேண்டும்' என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு கருத்துத் தெரிவித்துள்ளார். 

சந்திரபாபு நாயுடு

ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியில் ஒன்பது வயதுச் சிறுமியை 60 வயது முதியவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவரை சுட்டுக் கொல்லப்பட வேண்டும் அல்லது தூக்கில் போடவேண்டும் என்று மக்கள் கொந்தளித்தனர். இந்நிலையில், வாழத் தகுதியற்றவன் என்று மகனிடம் போனில் கூறிய முதியவர், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இந்தநிலையில், குண்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுமியை முதல்வர் சந்திரபாபு நாயுடு, இன்று நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``பாலியல் வன்கொடுமைச் செயல்களில் ஈடுபடுபவர்களைத் தண்டிக்க இன்னும் கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். பயத்தை உண்டாக்கும் வகையில் சட்டம் வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டால், அன்றைய தினத்தை தங்கள் வாழ்க்கையில் கடைசி நாளாக அவர்கள் நினைவில் கொள்ளும்வகையில் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். பொதுமக்கள் முன்னிலையில் அவர்களைத் தூக்கில் போடவேண்டும். 

பாதிக்கப்பட்ட சிறுமியின் கல்விச் செலவுகளை தனிப்பட்ட முறையில் நானே ஏற்றுக்கொள்கிறேன். ஏற்கெனவே ஆந்திர அரசு, அறிவித்தபடி ரூபாய் 5 லட்சத்துடன், கூடுதலாக ரூபாய் 5 லட்சம் சிறுமியின் வங்கி கணக்கில் வைப்பு நிதியாகச் செலுத்தப்படும். மேலும், சிறுமியின் தந்தைக்கு 2 ஏக்கர் விவசாய நிலம், வீடு மற்றும் வேலை வழங்கப்படும். பாலியல் தொந்தரவுகளிலிருந்து தங்களை எப்படி பாதுகாத்து கொள்வது என்று பெண் குழந்தைகளுக்கு அவர்களது பெற்றோர்கள் கற்றுக் கொடுக்க வேண்டும். இதில் பெற்றோர் வெளிப்படையாகப் பேசுங்கள்'’ என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!