வெளியிடப்பட்ட நேரம்: 15:00 (06/05/2018)

கடைசி தொடர்பு:15:00 (06/05/2018)

போஸ்டில் செல்லும் `தேசிய விருது' - புறக்கணிப்பின் எதிரொலி

இந்த ஆண்டிற்கான தேசிய விருது வென்ற 50-க்கும் மேற்பட்ட கலைஞர்கள், குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவை புறக்கணித்தனர். அதனால், தபால் வழியில் அவர்களின் விருதுகளை அனுப்பி வைக்கலாம் என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தேசிய விருது

கலைத்துறையில் சிறந்து விளங்கும் கலைஞர்களை கௌரவப்படுத்தும் விதமாக ஆண்டு தோறும், தேசிய விருது வழங்கப்படுவது வழக்கம். இதேபோல், 2017-ம் ஆண்டுக்கான, 65-வது தேசிய விருதுக்கு தகுதி பெற்றவர்களின் பட்டியல் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. மேலும், சிறந்த படம், சிறந்த இசை, தாதா சாகேப் பால்கே முதலிய விருதுகள் உட்பட 11 விருது பெறுபவர்களுக்கு மட்டுமே குடியரசுத் தலைவர் விருது வழங்குவார் என்றும் மீதம் உள்ளவர்களுக்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் ஸ்மிரிதி இராணி விருதுகளை வழங்குவார் என்ற அறிவிப்பு வெளியாகியது. 

இந்தத் தகவல் விருது பெற்றவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால்,கடந்த மே 3ம் தேதி, டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவை 50-துக்கும் மேற்பட்ட கலைஞர்கள் புறக்கணித்தனர். இந்த விவகாரம் கடும் சர்ச்சையைக் கிளப்பியது. மேலும், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும் தனது அதிருப்தியைப் பிரதமர் அலுவலகத்திடம் தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில், விழாவைப் புறக்கணித்தவர்களுக்கு, பதக்கம், காசோலை மற்றும் சான்றிதழ்களை தபால் மூலம் அவர்கள் முகவரிக்கு அனுப்பி வைக்க மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் முடிவு செய்திருக்கிறது. பல்வேறு காரணங்களால் விருதை பெற நேரில் வர முடியாதவர்களுக்கு, தபால் மூலம் விருது அனுப்பி வைக்கப்படும். இந்த முறையும் அதையே பின்பற்ற முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இது நடைமுறையில் வழக்கமான ஒன்றுதான் என்ற விளக்கமும் அளித்திருக்கிறது.