"பேரிடர் பாதிப்பைக் கவனிக்காமல் கர்நாடகத்தில் யோகி பிரசாரம் செய்தது ஏன்?"- தமிழிசை பதில்! | Opposition parties criticise Yogi Adithyanath; cut short election campaign and returned to UP!

வெளியிடப்பட்ட நேரம்: 16:47 (06/05/2018)

கடைசி தொடர்பு:18:14 (06/05/2018)

"பேரிடர் பாதிப்பைக் கவனிக்காமல் கர்நாடகத்தில் யோகி பிரசாரம் செய்தது ஏன்?"- தமிழிசை பதில்!

யோகி ஆதித்யநாத்

ர்நாடக மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனங்களைத் தொடர்ந்து தன்னுடைய பிரசாரத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டு லக்னோ திரும்பினார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஏற்பட்ட கடுமையான சூறாவளி மற்றும் புயலுக்கு இதுவரை 75-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தன் சொந்த மாநிலத்தில் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறாமலும், மீட்புப் பணிகளை முடுக்கி விடாமலும், கர்நாடக மாநில தேர்தல் பிரசாரத்தில் பி.ஜே.பி. வேட்பாளர்களை ஆதரித்து யோகி ஆதித்யநாத் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்ததை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அனைத்தும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தன. 

ஏற்கெனவே யோகி ஆதித்யநாத், இன்று மதியம் வரை கர்நாடக மாநிலத்தில் பிரசாரம் செய்யத் திட்டமிட்டிருந்தார். ஆனால், நேற்றிரவே உத்தரப்பிரதேசம் திரும்பினார். இன்று புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அவர் பார்வையிட இருப்பதாக உத்தரப்பிரதேச முதன்மைச் செயலாளர் அவனிஷ் அவஸ்தி தெரிவித்துள்ளார்.

கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "உத்தரப்பிரதேச முதல்வர் கர்நாடக மாநிலத்தில் இருப்பதற்காக வருந்துகிறேன். விரைவில் அவர் தன்னுடைய மாநிலத்திற்குத் திரும்பி அவருடைய பணியைத் தொடருவார் என்று நம்புகிறேன்" என குறிப்பிட்டிருந்தார். 

இதேபோல் சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், "யோகி ஆதித்ய நாத் உடனடியாக உத்தரப்பிரதேசத்திற்குத் திரும்ப வேண்டும். அம்மாநில மக்களின் பிரச்னைகளைத் தீர்க்கவே அவர் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், அவர் கர்நாடக மாநிலத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். கர்நாடக தேர்தல் பிரசாரத்திற்காக அவரை மக்கள் தேர்ந்தெடுக்கவில்லை" என்று கூறியுள்ளார்.

யோகி ஆதித்யநாத்

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூறுகையில், "உத்தரப்பிரதேசத்தில் இத்தகைய இயற்கைப் பேரிடர் நிகழ்ந்துள்ள சூழ்நிலையில், பிரதமர் மோடி, முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் தங்களின் அரசியல் சுயலாபத்திற்காக கர்நாடகத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டிருப்பது வேடிக்கையானது. குறுகிய மனம் படைத்த அரசிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்?" என்று விமர்சனம் செய்துள்ளார். 

உத்தரப்பிரதேச காங்கிரஸ் தலைவர் ராஜ் பப்பர் கூறுகையில், "நாட்டில் உள்ள பொறுப்பற்ற முதல்வர்களில் ஒருவராக இருக்கும் யோகி ஆதித்ய நாத், ஒரு பகுதிநேர முதல்வராவார்" என்று குறைகூறினார்.

எதிர்க்கட்சித் தலைவர்களின் கடும் விமர்சனங்களைத் தொடர்ந்து, யோகி ஆதித்ய நாத் தன்னுடைய பிரசாரத்தை பாதியிலேயே நிறுத்திவிட்டு, கர்நாடகத்தில் இருந்து உத்தரப்பிரதேசம் திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

"உத்தரப்பிரதேசத்தில் இயற்கைப் பேரிடர் ஏற்பட்டுள்ள காலகட்டத்தில், அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தன்னுடைய சொந்த மாநிலத்தைப் பற்றிக் கவலைப்படாமல் கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டது சரியா?" என்ற கேள்வியை பி.ஜே.பி. தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜனிடம் எழுப்பினோம்.

தமிழிசை சௌந்தரராஜன்அப்போது அவர், "நிச்சயமாக, ஒரு இயற்கைப் பேரிடர் ஏற்படும் சமயத்தில் எந்த மாநிலமாக இருந்தாலும், அந்த மாநிலத்தின் முதல்வராக இருப்பவர், அதைக் கவனிக்க வேண்டும். அதில் எந்தவித மாற்றுக்கருத்தும் கிடையாது. 
அவர் தற்போது உத்தரப்பிரதேசத்திற்குத் திரும்பியிருக்கிறார். ஆரம்பத்தில் அங்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்த பின்னரே கர்நாடகத்திற்கு பிரசாரத்திற்காக வந்திருக்கலாம். ஆனால், தற்போது பேரிடர் பாதிப்பின் தீவிரம் அதிகம் என்பதை உணர்ந்து, தன் சொந்த மாநிலத்திற்குத் திரும்பியிருக்கக்கூடும். புயல் பாதிப்புகளைக் கவனித்து, அதற்குரிய நிவாரண நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது முதல்வரின் கட்டாயக் கடமைதான்.

அவருடைய மாநிலத்தில் தேவையான மீட்புப் பணிகளை மேற்கொள்ள அதற்குரிய அதிகாரிகளை ஏற்பாடு செய்துவிட்டு வந்திருக்கலாம். அதன்பிறகு, மக்கள் பாதிக்கப்பட்டதன் தீவிரத்தை உணர்ந்து, சொந்த மாநிலத்திற்குத் திரும்பியிருக்கலாம். என்னுடைய கோரிக்கை என்னவென்றால், தேர்தலாக இருந்தாலும், தேர்வாக இருந்தாலும் நேர்மறையான கருத்துகளை முன்னெடுத்து வைக்க வேண்டும் என்பதுதான். ஒரு மாநில முதலமைச்சருக்கு தன்னுடைய மாநிலத்தைப் பற்றிய அக்கறை நிச்சயமாக இருந்திருக்க வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து கிடையாது. அவர் அக்கறையில்லாமல் இருந்தார் என்று சொல்லிவிட முடியாது. அந்த மாநிலத்தின் சூழ்நிலையை யோகி ஆதித்யநாத் நிச்சயமாக அறிந்திருப்பார். ஒரு மாநிலத்தில் வெற்றிபெற்ற முதலமைச்சருக்கு, தான் சார்ந்த மாநிலத்தின் மக்களைப் பாதுகாக்க வேண்டிய கடமை இருக்கிறது. யோகி ஆதித்யநாத்தைப் பொறுத்தவரை, அவருக்கு அந்த அக்கறையும் இருந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக எல்லாவற்றையுமே விமர்சனமாக வைக்கிறார்கள். எல்லாவற்றையும் நாம் குறைசொல்லிக் கொண்டே இருக்க வேண்டுமென்றால், இதுபோன்று குறை சொல்லலாம். எனவே, எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்ததால்தான், அவர் உத்தரப்பிரதேசத்திற்குத் திரும்பினார் என்று அர்த்தமல்ல. எந்த மாநிலமாக இருந்தாலும், மக்கள் பாதிக்கப்படும்போது,  அங்கே நிச்சயமாக பாதுகாப்பு நடவடிக்கைகளும், அதற்கான தனி அக்கறையும் தேவைப்படும் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் கிடையாது" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்