வெளியிடப்பட்ட நேரம்: 12:28 (07/05/2018)

கடைசி தொடர்பு:12:30 (07/05/2018)

''முன்கூட்டியே தேர்தல் வரும்!'' - கணிக்கிறார் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

''முன்கூட்டியே தேர்தல் வரும்!'' - கணிக்கிறார் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

மூன்றாவது அணி அமையுமா... என்ற கேள்வி பரவலாகக் கேட்கப்பட்டுவரும் சூழலில், பி.ஜே.பி-யின் அதிருப்தி தலைவர்களான யஷ்வந்த் சின்ஹா, சத்ருகன் சின்ஹா இருவரும் தி.மு.க செயல் தலைவரைச் சந்தித்துப் பேசியிருப்பது, அரசியல் களத்தில் அனலைக் கிளப்பிவருகிறது. ஏற்கெனவே, 'தேசிய அளவில், மக்கள் விரும்பும் மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக' கருத்து தெரிவித்துள்ள தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ், சமீபத்தில் தி.மு.க தலைவர் கருணாநிதியையும், செயல் தலைவர் ஸ்டாலினையும் சந்தித்துப் பேசியது பல்வேறு யூகங்களை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், பி.ஜே.பி-யின் அதிருப்தி தலைவர்களும் தி.மு.க தலைமையை சந்தித்துச் சென்றிருக்கின்றனர்.

யஷ்வந்த் சின்ஹா, சத்ருகன் சின்ஹா

இந்தச் சந்திப்புகுறித்துப் பேசிய ஸ்டாலின், சந்திரசேகர ராவ் இருவருமே 'மூன்றாவது அணி' அமைப்பதுகுறித்து எந்த இடத்திலும் உறுதியாகக் குறிப்பிடவில்லை. ஆனாலும், தேசிய அளவில் மாற்றங்களைக் கொண்டுவரும் முயற்சியில் தான் ஈடுபட்டிருப்பதாக சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், தமிழகத்தில் தி.மு.க கூட்டணியின் கீழ் இருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், நடைபெறவிருக்கும் தனது கட்சி மாநாட்டுக்காக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆகியோரை  நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''பி.ஜே.பி-க்கு எதிராக மதச்சார்பற்ற கட்சிகள் அனைத்தையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்பதே எங்கள் எண்ணம்'' என்று தனது நிலையை வெளிப்படையாக அறிவித்துள்ளார். 

தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்திவரும் இந்தச் சந்திப்புகள்குறித்துப் பேசும் அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி, ''இன்றைய சூழலில், மூன்றாவது அணி அமைவதற்கான வாய்ப்பு இல்லை. தமிழகத்தைப் பொறுத்தவரை, தி.மு.க வலுவான கட்சியாக இருப்பதால், காங்கிரஸ், பி.ஜே.பி என இரு கட்சிகளுமே ஸ்டாலின் தலைமையில் கூட்டு வைக்க விரும்புகின்றன. அதனால்தான், 'தமிழக முதல்வர் ஸ்டாலின்தான்' என ராகுல்காந்தியும் கூறியிருக்கிறார்'' என்கிறார்.

தமிழகக் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனோ, இந்தக் கூட்டணிச் சிக்கல்களுக்குள் போகாமல், வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல்குறித்த தனது பார்வையை நம்மோடு பகிர்ந்துகொண்டார். அதில், ''நாடு முழுக்க பி.ஜே.பி-யின் ஆதிக்கம் பெருகிவருவதாக இருந்துவந்த தோற்றத்துக்கு முற்றுப்புள்ளி விழுந்துவிட்டது. அதனால், பிரதமர் மோடி முழுமையாக 5 வருடங்கள் பதவியில் இருப்பாரா என்பதே சந்தேகத்துக்கு உரியதாகிவிட்டது. அவர்களது கட்சிக்குள்ளேயே, 'உடனே தேர்தல் நடத்தப்பட வேண்டும்; ஏனெனில், பி.ஜே.பி-யின் செல்வாக்கு நாளுக்கு நாள் மக்களிடையே குறைந்துவருகிறது' என்பதுபோன்ற பேச்சுகள் கேட்கத் தொடங்கிவிட்டன. உரிய நேரத்தில் தேர்தல் வரட்டும் என்று பொறுத்திருக்க மக்களுக்கும் பொறுமை கிடையாது. எனவே, நாடாளுமன்றத் தேர்தல் முன்கூட்டியே வருவதற்கான வாய்ப்பு அதிகமிருக்கிறது.

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

பி.ஜே.பி கட்சிக்குள்ளேயே மோடிக்கு எதிரான எதிர்ப்புகள் வலுத்துவருகின்றன. யஷ்வந்த் சின்ஹா, சத்ருகன் சின்ஹா, அத்வானி போன்ற மூத்த தலைவர்கள், வெளிப்படையாகவே தங்களது எதிர்ப்புகளைப் பதிவுசெய்திருக்கிறார்கள். இந்த எதிர்ப்பு மனநிலை, பி.ஜே.பி கட்சியினரிடையே மட்டுமில்லாது, பரவலாக எல்லா மக்களிடையேயும் தோன்றியிருப்பதுதான் இப்போது அவர்களை யோசிக்க வைத்துள்ளது. எனவே, விரைவில் தேர்தல் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. என்னைப் பொறுத்தவரை, பி.ஜே.பி கட்சி இரண்டு அல்லது மூன்றாக உடையக்கூட வாய்ப்பிருக்கிறது. எனவே, மோடி இத்தோடு காலியாகிவிடுவார்'' என்கிறார், ஈ.வி.கே.எஸ் உறுதியாக.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் நாள்கள் இருக்கும் சூழ்நிலையில், இவர்களது அரசியல் கணக்குகள் எந்த அளவுக்கு பலிக்கப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!


டிரெண்டிங் @ விகடன்