வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (07/05/2018)

கடைசி தொடர்பு:16:00 (07/05/2018)

தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானத்தை மீண்டும் பரிசீலிக்க வேண்டும்! - உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் மனுத்தாக்கல்

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை தகுதிநீக்கம் செய்யக் கோரும் தீர்மானத்தை, துணை குடியரசுத்தலைவர் வெங்கைய நாயுடு மீண்டும் பரிசீலிக்க உத்தரவிடக் கோரி, காங்கிரஸ் எம்.பி-க்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். 

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது ஐந்து குற்றச்சாட்டுகளைக் கூறி, அவரை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்று 60 எம்.பி-க்களிடம் கையெழுத்துப் பெற்று, மாநிலங்களவையில் கடந்த மாதம் காங்கிரஸ் கண்டனத் தீர்மானம் கொண்டுவந்தது. அதை, மாநிலங்களவைத் தலைவர் வெங்கைய நாயுடு நிராகரித்தார். இந்திய அரசின் தூண்களில் ஏதேனும் ஒன்றை வலுவிழக்கச்செய்யும் கருத்துகளையோ, எழுத்துகளையோ அல்லது செயல்களையோ நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இந்தத் தீர்மானம் ஏற்றுக்கொள்வதற்கு உகந்தது அல்ல' என்று தெரிவித்து, மனுவை நிராகரித்தார்.

இதை எதிர்த்து, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களைவை எம்.பி-க்கள் பிரதாப் சிங் பஜ்வா மற்றும் அமீ ஹர்ஸாந்ரே யாஜ்நிக் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். அதில், 'நாங்கள் கொண்டுவந்த கண்டனத் தீர்மானத்தைத் தள்ளுபடிசெய்தது சட்டவிரோதமானது மற்றும் தன்னிச்சையானது. வெங்கைய நாயுடுவுக்கு அந்தத் தீர்மானத்தைத் தள்ளுபடிசெய்ய உரிமை கிடையாது. குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையெழுத்துப் பெற்றுவரும் தீர்மானத்தை நிராகரிக்க உரிமை இல்லை. அந்த மனுவை மீண்டும் பரிசீலனைக்கு எடுக்க உத்தரவிட வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளனர்.