நீட் தேர்வின்போது தமிழக மாணவர்களின் பெற்றோர்களை நெகிழவைத்த கேரள இஸ்லாமியர்கள்! | Kerala muslims arranged good hospitality to Tamilnadu NEET students

வெளியிடப்பட்ட நேரம்: 14:45 (07/05/2018)

கடைசி தொடர்பு:16:34 (07/05/2018)

நீட் தேர்வின்போது தமிழக மாணவர்களின் பெற்றோர்களை நெகிழவைத்த கேரள இஸ்லாமியர்கள்!

நீட் தேர்வு எழுதச் சென்ற தமிழக மாணவர்களுக்குத் தேவையான வசதிகளை கேரள இஸ்லாமியர்கள் செய்துகொடுத்தது, நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நாடு முழுவதும் எம்.பி. பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத்தேர்வு நேற்று நடந்தது. இந்தத் தேர்வை தமிழகத்தில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதினர். தமிழகத்தைச் சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டன. 

மசூதி

(Photo courtesy - Abdul Rahoof Ibn Rahim)

இந்த நிலையில், கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள தொட்டகுளம் என்ற பகுதியில் செயல்பட்டுவரும் சிவகிரி மேல்நிலைப் பள்ளி மற்றும் சலாக்கல் அமல் பப்ளிக் ஸ்கூல் ஆகிய பள்ளிகள், நீட் தேர்வு மையங்களாக ஒதுக்கப்பட்டன. இந்த இரண்டு மையங்களில் மட்டும் சுமார் 1,200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில், தமிழக மாணவர்களே அதிகம். நீட் தேர்வுக்காகத் தங்கள் பிள்ளைகளை கேரளாவுக்கு அழைத்துச்சென்ற தமிழகத்தைச் சேர்ந்த பெற்றோர்கள் கடும் சிரமத்துக்குள்ளாகினர். தெரியாத ஊர், புரியாத மொழி, உணவு மற்றும் தங்குவதற்கு இடம் கிடைக்காமல் தவித்த தமிழர்களுக்கு, அன்போடு ஆதரவுக் கரம் நீட்டினார்கள் கேரள இஸ்லாமியர்கள். மசூதியிலேயே  அவர்களைத் தங்கவைத்து உணவு வழங்கி உபசரித்தனர். பெற்றோர்கள் காத்திருக்கும்போது, தொழுகை நடந்தது. அப்போது, அவர்களும் அங்கேயே அமர்ந்திருந்தனர். 

மசூதி

(Photo courtesy - Abdul Rahoof Ibn Rahim)

 ''நீட் தேர்வுக்காக, வெளி மாநிலங்களிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள், மசூதி அருகே உள்ள பள்ளிகளில் தேர்வு எழுத வந்தனர். சரியான நேரத்தில் தேர்வு மையத்துக்குச் செல்ல வேண்டும் என்பதற்காக, காலையிலேயே மாணவர்களுடன் பெற்றோர்களும் ஆங்காங்கே சாலைகளிலும், பள்ளி நுழைவு வாயில் முன்பாகவும் நின்றுகொண்டிருந்தார்கள். மாணவர்கள் தேர்வு எழுதச் சென்றவுடன், பெற்றோர்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் காத்துக்கொண்டிருந்தனர். 

உடனே, பெற்றோர்களை மசூதியில் வந்து காத்திருக்கும்படி அழைத்தோம். அவர்களுடன் பேசும்போதுதான், பலர் சாப்பிடவில்லை என்று தெரிந்தது. அதன்பிறகு உணவு மற்றும் தண்ணீர் வழங்க ஏற்பாடுசெய்தோம். மசூதிக்குள் மனிதநேயத்துடன் எதை வேண்டுமானாலும் செய்யலாம். இந்தச் சம்பவமே அதற்குச் சாட்சி. இதேபோல, கடந்த ஆண்டு நீட் தேர்வுக்காக வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்களுக்கு இதே உதவியைச் செய்தோம்'' என்றனர் மசூதியின் பொறுப்பாளர்கள்.