Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நீட் தேர்வுக்கு ஏன் இத்தனை கெடுபிடி..?! சி.பி.எஸ்.இ-க்கு ஒரு கேள்வி!

* ரீட்சைக்குச் செல்லும்போது வாசல்வரை உடன் வந்து வழியனுப்பினார் அப்பா. பரீட்சை எழுதி முடித்து வெளியே வந்தால், காவல்துறை அதிகாரிகளும் செய்தியாளர்களும் சூழ்ந்துகொள்கிறார்கள். `எனக்கு என்ன நடக்கிறது... அப்பா எங்கே?’ கேள்விகளோடு தன்னைச் சுற்றியிருப்பவர்களைப் பரிதாபமான முகத்தோடு பார்க்கிறார் மாணவர் கஸ்தூரி மகாலிங்கம். அவருடைய தந்தை கிருஷ்ணசாமி மாரடைப்பில் மரணமடைந்துவிட்டார் என்கிற செய்தியைச் சொல்கிறார்கள். எர்ணாகுளத்தில் தேர்வு நடந்ததால் மகனுக்குத் துணையாகச் சென்றிருந்தார் அப்பா கிருஷ்ணசாமி. வரும்போது உயிரோடிருந்த தந்தை, திரும்பும்போது இல்லை... எப்படித் துடித்திருக்கும் அந்த மாணவனின் மனம்.

நீட்

* தேர்வெழுதிவிட்டு வெளியே வருகிறார் மாணவி ஐஸ்வர்யா. அப்பா முகத்தில் அப்படி ஒரு சோர்வு தெரிகிறது. விசாரித்தால் நெஞ்சுவலிப்பதாகச் சொல்கிறார். பதறிப்போய் அப்பாவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார் ஐஸ்வர்யா. வழியில், மகளின் கண்ணெதிரே மரணமடைகிறார் அப்பா கண்ணன்.

* பயணச் செலவுக்குப் பணமில்லாமல், அம்மாவின் கம்மலை அடகுவைத்துப் பணம் வாங்கி, தேர்வெழுதச் செல்கிறார் அரியலூர் மாணவி ஹேமா.

* பரீட்சை எழுத நேரம் நெருங்குகிறது, மெயின் கேட் திறக்கப்படவில்லை. பக்கவாட்டு கேட்டில் ஏறிக் குதித்து உள்ளே செல்கிறார் ஒரு மாணவி.

* டிரெஸ்கோட், அதற்கான சோதனைகள் என்கிற பெயரில் ஆடைகளைக் களைந்து மாணவிகளுக்கு நெருக்கடிகள்...

* தேர்வெழுதப் போகும் மாணவிகளின் கம்மல், வாட்ச் இதையெல்லாம்கூட பறித்துக்கொள்கிறார்கள்.

நீட்

கடுமையான சோதனைக்குப் பின் நீட் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்ட மாணவர்கள்.... புகைப்படத் தொகுப்பு

* ஒரு மாணவனின் முகத்தில்கூட மலர்ச்சியைக் காண முடியவில்லை. எல்லா முகங்களிலும் சோக இழை அப்பட்டமாகத் தெரிகிறது. தங்கள் எதிர்காலக் கனவு சிதைந்து போகிறதே என்கிற கவலைதான் தெரிகிறது. கவலையோடு இன்னதென்று சொல்ல முடியாத ஓர் அச்சம்; நடுக்கம்; பதற்றம்; பயம்!

எந்தத் தேர்வாக இருந்தாலும், அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் குறித்த செய்திகள், அவர்களுடைய லட்சியம், விருப்பம் இதெல்லாம்தான் ஊடங்களில் வலம் வரும். ஆனால், நீட் தேர்வு நமக்குத் தருவதோ நம்மைப் பதற்றத்துக்குள்ளாக்கும் மரணச் செய்திகள், தேர்வெழுதப் போகும் மாணவர்களை அல்லாடவைத்த சம்பவங்கள், இன்ன பிற...

கடந்தவருடம் மாணவி அனிதா 1,176 மதிப்பெண் பெற்றிருந்தும் மருத்துவக் கனவு நிறைவேறாத கவலையில் தற்கொலை செய்துகொண்டார். கடைசி வரை நீட் தேர்விலிருந்து விலக்குக் கிடைத்துவிடும் என நம்பவைக்கப்பட்டு, கடைசியில் தேர்வு கட்டாயமாக்கப்பட, தேர்வெழுதி, சரியான மதிப்பெண் எடுக்காத மன உளைச்சலில்தான் அவர் தூக்குப் போட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். கடந்த வருடம் தேர்வு இருக்கிறதா, இல்லையா என்பது கடைசி நேரத்தில் சொல்லப்பட்டதுபோல், இந்த வருடம்  அண்டை மாநிலங்களில் சென்றுதான் நீட் தேர்வு எழுத வேண்டும் என்று தேர்வுக்குச் சரியாக மூன்று நாள்களுக்கு முன்பாகச் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி மாணவர்களில் சிலர் கேரளா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களுச் சென்று தேர்வெழுத வேண்டிய சூழல் ஏற்பட்டது. கடைசி நேரத்தில் படித்ததைத் திரும்ப ஒருமுறைப் பார்க்கக்கூட முடியாமல் தேர்வு மையங்களுக்குப் போய்ச் சேருவதற்கே நேரம் சரியாக இருந்தது மாணவர்களுக்கு. சிலரால் சரியான நேரத்துக்குப் போகவும் முடியவில்லை. பலர் இவ்வளவு தூரம் எப்படிப் போவது என்கிற மன உளைச்சலிலேயே தேர்வுக்குச் செல்லாமல் விட்டுவிட்டார்கள். பலருக்குத் தேர்வு மையங்களின் முகவரிகளைக் கண்டடைந்து செல்வதற்கே போதும் போதும் என்றாகிவிட்டது

மாணவி அனிதா

வீட்டிலிருந்து இரண்டு, மூன்று கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் பள்ளிக்குத் தேர்வெழுதச் செல்வதற்கே மாணவர்களுக்குப் பதற்றமாக இருக்கும். அப்படியிருக்க, அவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கக்கூடிய ஒரு தேர்வு, இப்படி முறையில்லாமல் மாணவர்களை, மாணவர்களின் பெற்றோர்களை அலைக்கழிக்கும் நோக்கில் நடத்தப்படலாமா?

``தங்களை சுற்றி அரங்கேறிக்கொண்டிருக்கும் சூழ்ச்சியை பற்றி எந்த புரிதலும் இன்றியே பெரும்பான்மை மாணவர்களும், பெற்றோரும் உள்ளனர். நல்ல மருத்துவர்களை நியாயமான முறையில் தேர்வு செய்ய நீட் தேர்வு அவசியம் தான் போல என்று நம்ப வைக்கப்பட்டுள்ளனர். இதற்கு அடிபணிவதைத் தவிர வேறு வழியில்லை என்னும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இச்சூழல் சற்று வசதி படைத்த, அல்லது வீட்டில் ஏற்கெனவே முதல் தலைமுறை பட்டதாரிகள் உள்ள குடும்பங்களுக்கு பெரிய தடை இல்லை. இவர்கள் அப்படி இப்படி யாரிடமாவது கேட்டுத்தெரிந்து, விசாரித்து, ஆள் பிடித்து சமாளித்து விடுவார்கள். ஆனால் பாதிப்படைவது பெரும்பாலும் ஏழை கிராம மக்களும், குடும்பத்தில் முதல் தலைமுறை பட்டதாரி/ மருத்துவராக பாடுபடுபவர்களே. ஏனென்றால் நீட் வேண்டாம் என்று ஏற்கெனவே மருத்துவர்கள் ஆனவர்கள் போராடிக்கொண்டிருப்பது, நீட் கடினமான தேர்வு என்பதால் அல்ல. அவர்கள் இதை விட கடினமான நுழைவுத்தேர்வு எழுதி தகுதி பெற்றவர்கள். எனக்கு 2 வருடம் ஓட்ட பந்தயத்திற்கு பயிற்சி கொடுத்துவிட்டு, திடீரென்று தேர்வன்று நீச்சல் போட்டியில்  உன் தகுதியை நிரூபி என்று சொல்வதை போன்றது இந்த நீட் தேர்வு. 

இளம் வயதிலிருந்தே தன்னை மருத்துவராக கற்பனை செய்து, அதற்காக பாடுபட்டு படித்து, அதற்கு தன்னை முழுதும் தகுதியுடைவராக தயார் செய்திருக்கும் பிள்ளையை, இது இல்லை என்றால் என்ன வேற படிப்பு இருக்கு அதை படித்துக்கொள் என்பது என்ன மாதிரி உளவியல்.  முள்தரையில் ஷூ அணிந்து ஓடுபவருடன், இன்னொருவரை வெறும் காலுடன் ஓடச் சொல்வது மூர்க்கத்தனம். 

நீட்

இம்மாதிரி அசாதாரண சூழல்களில் மனிதனின் மூளை "தவித்தல்/தப்பித்தல்/தகர்த்தல்" போன்ற யுக்திகளை கையாளும். 
தவித்தல்- இவ்வளவு கஷ்டப்பட்டு படித்தும் கடைசி நேரத்தில் காலை வாரி விட்டார்களே.

தப்பித்தல் - இவ்வளவு இன்னல்களை, பண விரயத்தை காட்டிலும் இந்த தேர்வை எழுதியே ஆக வேண்டுமா, இந்த மருத்துவப் படிப்பு அவசியமா என்று யோசிக்க செய்வது.

தகர்த்தல் - முடிந்த வரை அம்மா கம்மலை அடகு வைத்து, இரவு பகல் பயணித்து, கேட் ஏறி குதித்து முட்டி மோதி பார்ப்போம் என்ற மனநிலை.

எதிர்பாராமல் நடக்கும் விபத்துகளுக்கு முதலுதவி அவசியம் தான், அதை விட முக்கியம் இம்மாதிரி தவிர்க்கக்கூடிய விபத்துக்கள் ஏற்படாமல் தவிர்ப்பது. அதற்கு முழு பொறுப்பு நாமும், நாம் தேர்வு செய்யும் அரசும். சிந்தித்து, பிள்ளைகளின் எதிர்காலத்தை பற்றிய அக்கறையுடன் செயல் படவேண்டிய நேரமிது.’’ என்கிறார் மனநல மருத்துவர் திவ்யா.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
Advertisement