கத்துவா சிறுமி வழக்கு - பஞ்சாப் நீதிமன்றத்துக்கு மாற்றம் | Supreme Court transfers the Kathua case to Punjab Pathankot Court.

வெளியிடப்பட்ட நேரம்: 19:15 (07/05/2018)

கடைசி தொடர்பு:19:15 (07/05/2018)

கத்துவா சிறுமி வழக்கு - பஞ்சாப் நீதிமன்றத்துக்கு மாற்றம்

கத்துவா சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு பஞ்சாப் மாநிலம் பதான்கோட் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. 

உச்சநீதிமன்றம்

காஷ்மீர் மாநிலம் கத்துவா பகுதியில் 8 வயது சிறுமி, ஒரு கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் இந்தியாவையே உலுக்கியது. இதற்குப் பல கண்டனங்களும் எதிர்ப்புகளும் கிளம்பிய நிலையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள்மீது குற்றபத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த வழக்கு, கத்துவா முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 

காஷ்மீரில் இந்த வழக்கு நடைபெற்றால் தங்களுக்கு நீதி கிடைக்காது. எனவே, இதைச் சண்டிகர் நீதிமன்றத்துக்கு மாற்றும்படி சிறுமியின் தந்தை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனு மீதான விசாரணையில் சில காலமாக நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்தது. இன்று நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணையில் காஷ்மீர் அரசு சார்பில் மனு ஒன்றைத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில், வழக்கை காஷ்மீருக்கு மாற்ற வேண்டும். நியாயமாக நடத்த காஷ்மீர் அரசு ஒத்துழைப்பு அளிக்கும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கை பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் உள்ள நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற வேண்டும், வழகின் விசாரணையை வீடியோவாக பதிவு செய்ய வேண்டும். சிறுமியின் பெற்றோர்கள், அவரின் ஆதரவு வழக்கறிஞர் மற்றும் குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனக் கூறி வழக்கை ஜீலை 9-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம்.