வெளியிடப்பட்ட நேரம்: 18:30 (07/05/2018)

கடைசி தொடர்பு:18:30 (07/05/2018)

பங்குச் சந்தையில் இன்று உற்சாகமான வர்த்தகம்;

இந்திய பங்குச் சந்தையில் பங்குகளை வாங்க முதலீட்டாளர்கள் தொடர்ந்து காட்டிய ஆர்வத்தினால் பங்குகளின் விலைகளில் நல்ல முன்னேற்றம் இருந்தது. 

மும்பை பங்குச் சந்தையின் முக்கியக் குறியீடான சென்செக்ஸ் 292.76 புள்ளிகள் அதாவது 0.84 சதவிகிதம் உயர்ந்து 35,208.14 என முடிந்தது.
தேசிய பங்குச் சந்தையின் நிஃப்ட்டி 97.25 புள்ளிகள் அதாவது 0.92 சதவிகிதம் முன்னேறி 10,715.50-ல் முடிவுற்றது.

அமெரிக்காவில் ஏப்ரல் மாதத்தில் எதிர்பார்த்ததை விட சற்று குறைந்த அளவே வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததாக வந்த அறிக்கை அந்நாட்டில் வட்டிவிகித உயர்வு ஏற்படக்கூடிய சாதியத்தை ஓரளவு தள்ளிப் போடக்கூடும் என்ற எண்ணம் காரணமாக கடந்த வெள்ளிக்கிழமையன்று அமெரிக்கப் பங்குச் சந்தையில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது.

ஆனால், இன்று ஆசியச் சந்தைகள் எந்தவித பெரிய முன்னேற்றமும் காணவில்லை. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இரான் நாட்டின் மீது விதிக்கக்கூடிய சில தணிக்கைகள் காரணமாக கச்சா எண்ணெய் விலையில் ஏற்படக்கூடிய மாறுதல் கருதி முதலீட்டாளர்கள் ஒரு நிதானமான போக்கைக் கையாண்டது இதற்கு ஒரு காரணம்.

ஐரோப்பிய சந்தைகளிலும் தற்போதைய வரையில் பெரிதான பாசிட்டிவ் போக்குக் காணப்படவில்லை.

மேலும், அமெரிக்க டாலருக்கெதிராக ரூபாயின் மதிப்பு பதினைந்து மாதத்திலேயே லோ -வாகி 67.17 என்ற நிலையை எட்டியதும், கச்சா எண்ணெய் விலை உயர்வும் தடைகளாக இருந்த போதிலும், அமெரிக்காவில் வட்டி விகிதம் உயராதவரை, இந்தியச் சந்தையில் அந்நிய முதலீடு குறைய சாத்தியம் இல்லை என்ற உணர்வே முதலீட்டாளர்களின் மனநிலையில் ஓர் உற்சாகத்தை ஏற்படுத்தி பங்குகளை வாங்கத் தூண்டியது எனலாம்.

தவிர, ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்கள் கடந்த மாதத்தில் வாகன விற்பனையில் நல்ல வளர்ச்சி கண்டதையொட்டி தொடர்ந்து ஆட்டோமொபைல் பங்குகளை வாங்க ஆரியம் காணப்பட்டதும், பெரிதும் விலையிறங்கியுள்ள வங்கித்துறை பங்குகள் மீண்டும் முதலீட்டாளர்கள் கவனத்தை ஈர்த்ததும் இன்று சந்தையின் முன்னேற்றத்திற்கு உதவியது.

ஆட்டோமொபைல் மற்றும் வங்கித்துறை பங்குகள் மட்டுமன்றி, எப்.எம்.சி.ஜி, கேப்பிடல் கூட்ஸ், ரியல் எஸ்டேட் மற்றும் ஆயில் பங்குகளும் முன்னேறின. மருத்துவம் மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறை பங்குகள் ஒரு தொய்விழந்த நிலையில் காணப்பட்டன.

பி.சி. ஜிவெல்லேர் அதன் ஷேர் buy-back பற்றி தீர்மானிக்க உள்ள தேதியை மே 25-லிருந்து மே 10- ம் தேதிக்கு மாற்றியுள்ளதாக விடுத்த அறிக்கையைத் தொடர்ந்து அப்பங்கு இன்று பெரிய அளவில் வர்த்தகமாகி ஏறக்குறைய 39 சதவிகிதம் உயர்ந்தது.


இன்று விலை உயர்ந்த பங்குகள் :

கெயில் இந்தியா 4.4%
மஹிந்திரா & மஹிந்திரா 3.75%
ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்க் 3.6%
ஆக்ஸிஸ் பேங்க் 3%
ஹிண்டால்கோ 2.8%
டாடா ஸ்டீல் 2.7%
ஜீ டெலி, ஹிந்துஸ்தான் யூனிலீவர், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா,
ஓ.என்.ஜி.சி, யூ.பி.எல், எய்ச்சேர் மோட்டார்ஸ், ஐ.டி.சி. மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 2 முதல் 2.3 சதவிகிதம் வரை உயர்ந்தன.


விலை இறங்கிய பங்குகள் :

லூப்பின் 2.6%
Dr ரெட்டி'ஸ் 1.8%
சிப்லா 1%
சன் பார்மா 1%
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் 1.5%
கோல் இந்தியா 1.4%

இன்று மும்பை பங்குச் சந்தையில் 1405 பங்குகள் விலை உயர்ந்தும், 1260 பங்குகள் விலை குறைந்தும், 176 பங்குகள் முந்தைய விலைகளிலிருந்து மாற்றமில்லாமலும் முடிந்தன.