கல்வீச்சில் சென்னை இளைஞர் பலி -பெற்றோருக்கு காஷ்மீர் முதல்வர் நேரில் ஆறுதல்!

காஷ்மீரில், பாதுகாப்புப் படையினருக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடைபெற்ற கல்வீச்சுத் தாக்குதலில் சிக்கிய சென்னை இளைஞர் பரிதாபமாகப் பலியானார். அம்மாநில முதல்வர் மெஹ்பூபா முஃப்தி மருத்துவமனைக்கு வந்து, தமிழக இளைஞரின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தார். 

சென்னையைச் சேர்ந்த திருமணி என்ற இளைஞர், காஷ்மீர் மாநிலத்துக்கு சுற்றுலா சென்றார். பர்காம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கல்வீச்சுத் தாக்குதல் நடைபெற்றது. இந்த கல்வீச்சுத் தாக்குதலில், அந்த வழியாக காரில் சென்றுகொண்டிருந்த தமிழக இளைஞர் திருமணி மற்றும் அவருடன் பயணித்த சுற்றுலாப் பயணிகள் சிக்கிக்கொண்டனர். இதில், திருமணிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக ஶ்ரீநகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைபெற்றுவந்த அவர், நேற்று சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். 

இதையடுத்து, மருத்துவமனைக்கு வந்த மாநில முதல்வர் மெஹ்பூபா முஃப்தி, திருமணியின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது, ''அமைதியான சுபாவம்கொண்ட என் மகன் அதிர்ந்துகூடப் பேசமாட்டான். யாருக்கும் எந்தவிதத் தொந்தரவும் கொடுக்க மாட்டான். அவனுக்கு இப்படியொரு நிலை ஆகிவிட்டதே...'' என்று திருமணியின் பெற்றோர் கதறியழுதது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. அதேபோன்று,காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவும் தனது தொகுதியில் நடந்த இந்தச் சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். அதேபோன்று, தமிழக இளைஞரின் மறைவுக்கும் அவர் இரங்கல் தெரிவித்துள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!