வெளியிடப்பட்ட நேரம்: 12:30 (08/05/2018)

கடைசி தொடர்பு:13:36 (08/05/2018)

வட மாநிலங்களை கலங்கடிக்கும் புழுதிப் புயல்! இந்திய வானிலை ஆய்வு மையத்தின் 2 நாள் அலெர்ட்

பெரிய அளவிலான இடி, மின்னலுடன்கூடிய புழுதிப்புயல், வட மாநிலங்களைக் கடுமையாகத் தாக்கியுள்ளது.

புழுதி புயல்

வட மாநிலங்களில் வாட்டிவதைக்கும் கோடை வெயிலினால், வானிலை கடுமையாகப் பாதித்துள்ளது. கடந்த மே 2-ம் தேதி, டெல்லி, ராஜஸ்தான், சண்டிகர் போன்ற தலைநகரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெரும் புழுதிப் புயல் வீசியது. இதில் வீட்டுக் கூறைகள், குடிசை வீடுகள் என அனைத்தும் காற்றில் பறந்தன. ஆங்காங்கே மரங்களும் வேரோடு சாய்ந்தன. இதைத்தொடர்ந்து, உடனடியாக இடி மின்னலுடன்கூடிய பலத்த மழையும் கொட்டித்தீர்த்தது. இதனால் ஏற்பட்ட பாதிப்பில், சுமார் 100-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. 

சென்ற வாரம் பெய்த மழையினால் ஏற்பட்ட பாதிப்புகளே இன்னும் அகற்றப்படாத நிலையில், நேற்று இரவு மீண்டும் டெல்லி, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்களில் புழுதிப்புயல் தாக்கியுள்ளது. இதைத் தொடர்ந்து பலத்த மழையும் பெய்துள்ளது. இன்று, புயல் தாக்கிய மாநிலங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பல இடங்களில் விமான சேவையும், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. 

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள  இந்திய வானிலை ஆய்வு மையம்,‘ டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள மாநிலங்களில், இன்னும் 24 மணி நேரத்துக்கு மழை மற்றும் பனிப்பொழிவு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அடுத்த 48 மணி நேரத்தில் மீண்டும் பலத்த இடி, மின்னலுடன் கூடிய புழுதிப்புயல் வீசவும் வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளது.