வெளியிடப்பட்ட நேரம்: 14:45 (08/05/2018)

கடைசி தொடர்பு:14:45 (08/05/2018)

`பாலியல் வன்கொடுமைகளுக்கு உடை காரணம் அல்ல’ - கொதிக்கும் நிர்மலா சீதாராமன்

`பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு, அவர்களின் உடை காரணம் இல்லை' என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

நிர்மலா சீதாராமன்

டெல்லியில், இந்திய வர்த்தக சம்மேளனம் & தொழில் கூட்டமைப்பு  ( FICCI ) சார்ப்பில் நடத்தப்பட்ட பாலின பாகுபாடு ஆய்வறிக்கை குறித்த கருத்தரங்கில், இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டார்.

அப்போது, “பெண்களின் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் பெரும் கண்டனத்துக்குரியது. வெளிப்புறத் தோற்றத்தால் மட்டுமே பெண்களுக்கு இதுபோன்ற கொடுமைகள் ஏற்படவில்லை. இதற்கு, உடைதான் காரணம் எனச் சிலர் கூறிவருகின்றனர். அவர்களைப் பார்த்து ஒரு கேள்வி கேட்கிறேன். இந்தச் சம்பவங்களுக்கு உடை மற்றும் தோற்றம்தான் காரணம் என்றால், வயதானவர்கள் முதல் குழந்தைகள் வரை பலர் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதற்கான காரணம் என்ன? ஒரு பெண்ணுக்கு, தெரிந்தவர்கள் மற்றும் உறவினர்களே பாலியல் வன்கொடுமை செய்தால், அதை வெளியில் இருப்பவர்கள் எவ்வாறு தடுக்க முடியும்?

நடைபெறும் ஒவ்வொரு 10 பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களில், 7 சம்பவங்கள் பாதிக்கப்பட்ட பெண்களுக்குத் தெரிந்தவர்கள், உறவினர்கள், நண்பர்கள் மூலமாகவே நடைபெறுகின்றன. இதுபோன்ற நிகழ்வுகளில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் எந்தவித பாகுபாடும் இல்லாமல், அவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.