52,686 கார்களைத் திரும்பப் பெறும் மாருதி சுஸுகி - என்ன காரணம் தெரியுமா?

மாருதி சுஸுகி நிறுவனம் தயாரித்த பலேனா மற்றும் ஸ்விஃப்ட் மாடல் கார்களைத் திரும்பப் பெறுவதாக அறிவித்திருக்கிறது. 

நியூ ஸ்விஃப்ட்

இந்தியாவின் கார் உற்பத்தி சந்தையில் முன்னணி நிறுவனமாக மாருதி சுஸுகி உள்ளது. இந்த நிறுவனம், மாருதி ஓம்னி, வேகன் ஆர், மாருதி இக்னிஸ், மாருதி செலிரியோ எக்ஸ் உள்ளிட்ட பல ரக கார்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த வரிசையில் பலேனா மற்றும் ஸ்விஃப்ட் ரக மாடல்களும் இணைந்தன. 

இந்த நிலையில், டிசம்பர் 1, 2017 முதல் மார்ச் 16, 2018 வரை உற்பத்தி செய்யப்பட்ட பலேனா மற்றும் ஸ்விஃப்ட் ரக மாடல் கார்களில் பிரேக் வேக்கம் ஹோஸில் (brake vacuum hose) என்ற கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து 52,686 கார்களை ஆய்வு செய்ய அவற்றைத் திரும்பப் பெறுவதாக நிறுவனம் அறிவித்துள்ளது. 

இந்த இரண்டு ரக கார் மாடல்களை வாங்கிய கார் உரிமையாளர்கள், டீலர்களைத் தொடர்புகொண்டு கார்களை டெஸ்ட் செய்துகொள்ளலாம். இதற்குக் கட்டணம் வசூலிக்கப்படாது. இலவசமாகவே இந்தச் சேவை வழங்கப்படும் என்று மாருதி சுஸுகி அறிவித்துள்ளது. மாருதி சுஸுகி நிறுவனத்தின் பலேனா மாடல் கார்கள் திரும்பப் பெறுவது இது முதல் முறையல்ல. ஏற்கெனவே, கடந்த மே 2016-ம் ஆண்டு ஏறத்தாழ 75,419 கார்களை, ஏர்பேக்கில் பிரச்னை இருப்பதாகக் கூறி அவற்றைத் திரும்பப் பெற்றது. இந்த 75,419 பலேனா ரக கார்களில் 15,995 கார்கள், ஆகஸ்ட் 2015 - மார்ச் 2016-ம் ஆண்டின் இடையே தயாரிக்கப்பட்ட டீசல் வகை கார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!