வெளியிடப்பட்ட நேரம்: 19:20 (08/05/2018)

கடைசி தொடர்பு:19:20 (08/05/2018)

ஆம்புலன்ஸ் தர மறுத்த மருத்துவமனை - மனைவியின் சடலத்தைத் தோளில் சுமந்த கணவர்

ஆம்புலன்ஸ் தர மறுத்ததால் மனைவியின் சடலத்தை அவரின் கணவர், தோளில் சுமந்து சென்ற துயரச் சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது. 

மனைவியின் உடலைத் தோளில் சுமந்துசென்ற கணவன்

Photo credit: Twitter/ANI

உத்தரப்பிரதேச மாநிலம் படூன் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பெண் இறந்துவிட்டார். அவரது சடலத்தை வீட்டுக்குக் கொண்டு செல்ல, அவர் கணவர் மற்றும் உறவினர்கள் முயற்சி செய்தனர். இதற்காக மருத்துவமனை நிர்வாகத்திடம் ஆம்புலன்ஸ் கேட்டுள்ளனர். ஆனால், ஆம்புலன்ஸ் கொடுக்கப்படவில்லை. 

இதையடுத்து, என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்த கணவர், மனைவியின் சடலத்தைத் தோளில் சுமந்தவாறு வீட்டை நோக்கி நடந்து சென்றார். அழுதுகொண்டே சடலத்தைத் தூக்கிச் சென்ற அவர், அவ்வழியாகச் சென்ற டெம்போ ஓட்டுநர்களிடம் தன்னை வீட்டில் இறக்கிவிடும்படி கெஞ்சினார். ஆனால், யாரும் அவருக்கு உதவவில்லை. ஒருவழியாக நடந்தே மனைவியின் சடலத்தோடு அவர் வீட்டுக்கு வந்தடைந்தார். இந்தச் சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

 இந்தத் தகவல் சம்பந்தப்பட்ட அரசு மருத்துவமனை நிர்வாகத்துக்குத் தெரியவந்தது. உடனே மருத்துவமனை தலைமை அதிகாரிகள், விசாரணை நடத்திவருகின்றனர். ஆம்புலன்ஸ் தர ஊழியர்கள் மறுத்திருந்தால் நிச்சயம் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கெனவே, கடந்த ஆண்டு காலாஹந்தியில் டானா மாஜி என்ற பழங்குடி மனிதர், தன்னுடைய மனைவியின் சடலத்தைத் தோளில் தூக்கிக்கொண்டு 10 கி.மீ. சுமந்து சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.