வெளியிடப்பட்ட நேரம்: 17:13 (08/05/2018)

கடைசி தொடர்பு:17:13 (08/05/2018)

நல்ல தொடக்கத்துக்குப் பின் சரிந்தது சந்தை 

ஒரு வலுவான தொடக்கத்திற்குப் பிறகு சற்று சரிந்தாலும் உடனடியாகச் சுதாரித்து பாசிட்டிவாகப் பயணித்துக்கொண்டிருந்த இந்திய பங்குச் சந்தை, மதியத்திற்கு மேல் தடுமாற்றம் கண்டு இறுதியில் பலவீனமான நிலையில் இன்று முடிந்தது.

மும்பை பங்குச் சந்தையின் முக்கிய குறியீடான சென்செக்ஸ் ஒரு கட்டத்தில் 175 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்திருந்தாலும், இறுதியில் 
8.18 புள்ளிகள் அதாவது 0.02 சதவிகிதம் லாபம் மட்டுமே ஈட்டி 35,216.32 என முடிவுற்றது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்ட்டி 2.30 புள்ளிகள் அதாவது 0.02 சதவிகிதம் லாபத்துடன் 10,717.80-ல் முடிந்தது.

காலாண்டுச் செயல்பாடு குறித்த அறிக்கைகள் மற்றும் இதர நிறுவன சம்பந்தமான அறிவிப்புகள் மட்டுமன்றி, சர்வதேச சந்தைகளின் போக்கும் இன்றைய சந்தையின் போக்கை நிர்ணயித்தன. தவிர, கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கெதிராக ரூபாயின் மதிப்பும் முதலீட்டாளர்களால் கூர்ந்து கவனிக்கப்பட்டன.

மேலும் நடக்கவிருக்கும் கர்நாடக சட்ட சபைக்கான தேர்தல் போக்கு பற்றிய ஒரு நிதானமான உணர்வு காரணமாகவும் சந்தையில் ஒரு மந்தமான நிலை உருவாகியிருக்கக்கூடும்.

டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 67.28 என்று சரிந்து, பின்னர் சிறிது முன்னேறி 67.07 என வர்த்தகம் ஆகிக் கொண்டிருந்தது.

அமெரிக்காவுடனான வர்த்தகத்தில் கடந்த ஐந்து மாதங்களில் முதல் முறையாக சைனாவின் ட்ரேட் சர்ப்ளஸ் உயர்ந்திருப்பதாக வந்துள்ள அறிக்கை வர்த்தக யுத்தம் பற்றிய கவலையைச் சிறிது கிளப்பி விட்டிருக்கிறது எனலாம்.

இரானுடனான அணு ஒப்பந்தம் பற்றிய அமெரிக்க நாட்டின் அறிவிப்பு வெளிவர இருக்கும் நிலையில் முதலீட்டாளர்களின் மனநிலை ஒரு பாதுகாப்பு உணர்வோடு இருந்ததும் சந்தையில் முன்னேற்றம் இல்லாததற்கு ஒரு காரணம் என்று கூறலாம். 

ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் நிகர லாபம் கடந்த ஜனவரி - மார்ச் 2018 காலாண்டில் ஏறக்குறைய 50 சதவிகிதம் விழுந்தது மட்டுமன்றி வாராக்கடன் எண்ணிக்கை அதிகரித்திருந்தாலும் கூட அவ்வங்கியின் பங்குகள் இன்று நல்ல முன்னேற்றம் கண்டன. இனி வரும் காலாண்டுகளில் அதன் செயல்பாடு நல்லவிதமாக இருக்கும், மற்றும் கடன் வசூலித்தலில் நல்ல வளர்ச்சி காணப்படும் என்று எதிர்பார்ப்பதாக வங்கியின் நிர்வாகம் அறிவித்ததைத் தொடர்ந்து முதலீட்டாளர்கள் இப்பங்குகளை வாங்குவதில் ஆர்வம் செலுத்தினர்.

ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்க் மற்றும் ஸ்டேட் பேங்க் உள்ளிட்ட சில முக்கிய பங்குகளும், ரியல் எஸ்டேட் துறையில் சில பங்குகளும் நல்ல முன்னேற்றம் கண்டன. மற்ற துறைகளைச் சார்ந்த பங்குகளின் செயல்பாட்டில் இன்று பெரிதான முன்னேற்றம் ஏதும் காணப்படவில்லை.

இன்று விலை அதிகரித்த பங்குகள் :

ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்க் 6.8%
ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் 2.85%
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா 1.5%
எய்ச்சேர் மோட்டார்ஸ் 2.2%
பாரத் பெட்ரோலியம் 1.9%
பவர் கிரிட் கார்ப்பொரேஷன் 1.5%
ஆக்ஸிஸ் பேங்க் 1.3%
இந்தியன் ஆயில் 1.25%
க்ராஸிம் இண்டஸ்ட்ரீஸ் 1.2%

விலை குறைந்த பங்குகள் :

மஹிந்திரா & மஹிந்திரா 2.3%
லார்சென் & டூப்ரோ 1.7%
இன்ஃபோசிஸ் 1.3%
ஜீ டெலி, டாடா மோட்டார்ஸ், யெஸ் பேங்க் மற்றும் பஜாஜ் பைனான்ஸ் பங்குகளும் விலை குறைந்தன.

இன்று மும்பை பங்குச்சந்தையில் 1173 பங்குகள் விலை உயர்ந்தும், 1506 பங்குகள் விலை குறைந்தும், 131 பங்குகள் முந்தைய விலைகளிலிருந்து மாற்றமில்லாமலும் முடிந்தன.