`வெற்றுப்பேச்சு பசியைப் போக்காது' - மோடியைச் சாடும் சோனியா காந்தி!

வறட்சியால் விவசாயிகள் பாதிக்கப்பட்டபோது மோடி என்ன செய்தார் எனச் சோனியா காந்தி கேள்வியெழுப்பியுள்ளார். 

photo credit : twitter/INC

வரும் 12-ம் தேதி தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு கர்நாடகாவில் இறுதிக்கட்ட பிரசாரம் தீவிரமடைந்து வருகிறது. பிரதமர் மோடி, யோகி ஆதித்யநாத் எனப் பா.ஜ.க தலைவர்களும் ராகுல் காந்தி, சோனியா காந்தி எனக் காங்கிரஸ் தலைவர்களும் கர்நாடகாவை முற்றுகையிட்டுள்ளனர். அதிலும், சோனியா காந்தி இரண்டு ஆண்டுகளுக்குப் பின்பு, தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்கிறார். அதன்படி, பிஜாப்பூரில் உள்ள சரவாடா கிராமத்தில் பிரசார பொதுக்கூட்டத்தில் சோனியா பேசினார். அப்போது, ``கர்நாடகாவின் வளர்ச்சிக்காகக் காங்கிரஸ் உழைத்து வருகிறது. பல மக்கள் நலத்திட்டங்களால் நாட்டின் முதன்மை மாநிலமாகக் கர்நாடகாவை காங்கிரஸ் மாற்றியுள்ளது. ஏழைகளுக்காகவே காங்கிரஸ் உழைக்கிறது. அவர்களுக்காக மகாத்மா காந்தி வேலைவாய்ப்புத் திட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால், பா.ஜ.க அதற்கு ஆட்சேபனை தெரிவித்தது. 

கர்நாடக விவசாயிகள் வறட்சியால் தவித்தபோது, சித்தராமையா பிரதமரைச் சந்திக்க நேரம் கேட்டார். ஆனால், அவரைச் சந்திக்க மோடி மறுத்துவிட்டார். விவசாயிகளுக்கு மோடி என்ன செய்தார்? விவசாயிகளுக்காக மாநில அரசு கேட்ட நிதியைத் தரவில்லை. இதன்மூலம் விவசாயிகளை மட்டுமல்ல ஒட்டுமொத்த கர்நாடக மக்களையும் அவர் அவமதித்துவிட்டார். மோடி தன்னை ஒரு சொற்பொழிவாளர் என எண்ணிக்கொள்கிறார். நானும் அதை ஏற்றுக்கொள்கிறேன். ஒரு நடிகரைப்போல அவர் பேசி வருகிறார். அவர் பேச்சால் நாட்டுக்கு நன்மை பயக்கும் என்றால் நானும் மகிழ்ச்சி அடைவேன். ஆனால், பேச்சு பசியைப் போக்க உதவாது. வேலைவாய்ப்பைப் பெற்றுத்தராது. ஊழலுக்கு எதிராக மோடி அளித்த வாக்குறுதிகள் என்ன ஆனது? மோடி எங்கே போனாலும் வரலாற்றை மறைக்கும் வகையில் தவறான தகவல்களைத் தருகிறார். அரசியலுக்காகவே அவர் தலைவர்களின் பெயர்களைப் பயன்படுத்துகிறார்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!