வெளியிடப்பட்ட நேரம்: 21:24 (08/05/2018)

கடைசி தொடர்பு:21:24 (08/05/2018)

``தமிழக மாணவர்களை வரவேற்கிறது ராஷ்ட்ரபதி பவன்..!" -ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

``தமிழக மாணவர்களை வரவேற்கிறது ராஷ்ட்ரபதி பவன்..!

சென்னைப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ``தமிழக மாணவர்கள் குடியரசு மாளிகைக்கு வரலாம். குடியரசு மாளிகை உங்களுக்காகத் திறந்தே இருக்கும்'' என்றார். 

ராம்நாத் கோவிந்த்

சென்னைப் பல்கலைக்கழகத்தின் 160-வது பட்டமளிப்பு விழா சமீபத்தில் நடந்தது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ``சென்னைப் பல்கலைக்கழகம், தென்னிந்தியாவில் தாய் பல்கலைக்கழகமாக விளங்குகிறது; தென்மாநில மக்களின் அறிவை மேம்படுத்துவதிலும், புதுமையான அறிவியல் கருத்துகளை உருவாக்குவதிலும் முக்கியப் பங்காற்றிவருகிறது. 

சென்னைப் பல்கலைக்கழகத்தில் படித்த எஸ்.ராதாகிருஷ்ணன், வி.வி.கிரி, நீலம் சஞ்சீவிரெட்டி, ஆர்.வெங்கட்ராமன், கே.ஆர்.நாராயணன், ஏ.பி.ஜே.அப்துல் கலாம் ஆகியோர் குடியரசுத் தலைவர் பதவியை அலங்கரித்துள்ளனர். முதல் கவர்னர் ஜெனரலாகப் பதவிவகித்த ராஜாஜியும் சென்னைப் பல்கலைக்கழக மாணவர் என்பதை இங்கு குறிப்பிடுவதில் மிகுந்த பெருமைகொள்கிறேன். நோபல் பரிசு பெற்ற சர்.சி.வி. ராமன், சுப்பிரமணியன் சந்திரசேகர், உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த கே.சுப்பாராவ், முன்னாள் நீதிபதி எம்.பதஞ்சலி சாஸ்திரி, சரோஜினி நாயுடு, துர்காபாய் தேஷ்முக் மற்றும் பசுமைப் புரட்சிக்குக் காரணமான சி.சுப்பிரமணியம், பிரபல சதுரங்க வீரர் விஸ்வநாதன் ஆனந்த், பெப்சிகோ நிறுவனத்தின் தலைவர் இந்திரா நூயி எனப் பல பிரபலங்கள் சென்னைப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றுள்ளனர். 

தகவல் தொழில்நுட்பத்திலும் டிஜிட்டல் பொருளாதாரத்திலும் தமிழகம் முதன்மையான இடத்தில் உள்ளது. தகுதி படைத்த இளைஞர்களை பொறியாளர்களாகவும், தொழில்முனைவோர்களாகவும் உருவாக்குவதில் தமிழகம் சுறுசுறுப்பாகச் செயல்பட்டுவருகிறது. அதற்கு எனது பாராட்டுகள். உயர்கல்வியை மேம்படுத்தும் வகையில் இந்தியாவில் உள்ள 20 பல்கலைக்கழகங்களைத் தேர்ந்தெடுக்க உள்ளது மத்திய அரசு. இதில் சென்னைப் பல்கலைக்கழகமும் ஒன்று என்பதில் பெருமை. 

சென்னைப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று புதிய உலகில் நுழைகிறீர்கள். நீங்கள் சமுதாயத்துக்குப் பயன்படும் வகையில் சேவை செய்ய வேண்டும். அதுவே நீங்கள் பெற்ற கல்வியின் பயனாக அமையும். டெல்லியில் உள்ள ராஷ்ட்ரபதி பவனுக்கு நீங்கள் எப்போது வேண்டுமானாலும் வரலாம். உங்களை வரவேற்க நான் தயாராக இருக்கிறேன்" என்றார். 

துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், ``குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏழ்மையான நிலையிலிருந்து குடியரசுத் தலைவராக உயர்ந்திருக்கிறார். மாணவர்களுக்கு இவரே சிறந்த எடுத்துக்காட்டு. தமிழக அரசின் வரி வருமானம் 86,000 கோடி ரூபாய். இதில் கல்விக்காக 31,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திருக்கிறோம். நாட்டிலேயே தமிழகத்தில்தான் அதிகமான உயர்கல்வி நிறுவனங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது" என்றார். 

உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், ``மத்திய மனிதவளத் துறை வெளியிடப்பட்ட அறிக்கையில் தமிழகம் முன்னேற்றம் கண்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. புதியதாக 65 அறிவியல், கலைக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. 1,231 பாடப்பிரிவுகள் உள்ளன. 18 வயது முதல் 23 வயது வரை உள்ளவர்கள் கல்வி பெறுவது இந்தியாவில் 25 சதவிகிதம் என்று இருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் 47 சதவிகிதமாக இருக்கிறது. மத்திய அரசு வெளியிட்ட தரவரிசைப் பட்டியலில் தமிழ்நாட்டில் உள்ள 38 கல்லூரிகள் இடம்பிடித்துள்ளன. இதில் பெரும்பாலானவை அரசு உதவி பெறும் கல்லூரிகளும் ஐந்து அரசுக் கல்லூரிகளும் அடங்கும்" என்றார்.


டிரெண்டிங் @ விகடன்