ஆட்டோமொபைல் துறையில் வேலைவாய்ப்பு அதிகரிப்பு... காரணம் என்ன?!

ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அதிகளவில் IT இன்ஜினீயர்களை பணியில் அமர்த்தி வருகிறது.

ஆட்டோமொபைல் துறையில் வேலைவாய்ப்பு அதிகரிப்பு... காரணம் என்ன?!

இந்தியாவில் கடந்த 15 ஆண்டுகளாக இன்ஜினீயரிங் என்றாலே, பெரும்பாலோர் தகவல் தொழில்நுட்பத் துறையைத்தான் (ஐ.டி) தேர்ந்தெடுத்தனர். அதற்குத்தான் அனைவரும் முக்கியத்துவம் அளித்தனர். இன்ஜினீயரிங் கல்லூரிகளில் அந்தப் படிப்புக்கு இடம் கிடைப்பதே குதிரைக்கொம்பாக இருந்தது. படித்து முடித்தவுடன் வேலை, அதிக ஊதியம், வெளிநாடுகளுக்குச் சென்றால் கோடிக்கணக்கில் சம்பளம் போன்ற ஈர்ப்பினால் அந்தப் படிப்பை விரும்பிப் படித்தனர். இந்தப் படிப்புக்கு அதிக வேலைவாய்ப்புகள் இருந்த காரணத்தால், இதை பெரும்பாலானோர் தேர்ந்தெடுத்தனர். எங்கு பார்த்தாலும் IT  இன்ஜினீயர்களே அதிக அளவில் இருக்கின்றனர். தற்போது, ஆட்டோமொபைல் துறை அந்த இடத்தைப் பிடிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

ஆட்டோமொபைல்

இந்த நிலையில், தகவல் தொழில்நுட்பத் துறையில் ஒரு சுணக்கநிலை ஏற்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலைவாய்ப்புகள் மிகவும் குறைந்துள்ளன. இதையடுத்து, ஆட்டோமொபைல் துறை, இன்ஜினீயர்களின் சொர்க்கபுரியாக மாறியுள்ளது. தகவல் தொழில்நுட்பம் படித்த இளைஞர்கள் கார் தயாரிப்பு நிறுவனங்களில் பணியில் இணைந்துள்ளனர். குறிப்பாக, மஹிந்திரா & மஹிந்திரா, அசோக் லேலேண்ட், மாருதி ஆகிய நிறுவனங்களில் பணிக்குச் சேர்ந்துள்ளனர். இது, இந்தியாவில் வேலைவாய்ப்பை அள்ளித் தந்த தகவல் தொழில்நுட்பத் துறை, இன்று இக்கட்டான சூழ்நிலையில் உள்ளதையே காட்டுகிறது. 

தகவல் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சிகுறித்து நாஸ்காம் கூட்டமைப்பு கூறுகையில், ``இந்த ஆண்டும் நாட்டின் தகவல் தொழில்நுட்பத் துறை ஒற்றை இலக்க வளர்ச்சியை எட்ட வாய்ப்புள்ளது. தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக தகவல் தொழில்நுட்பத் துறை குறைந்த வளர்ச்சியை நோக்கியே சென்றுகொண்டிருக்கிறது. சாப்ஃட்வேர் ஏற்றுமதி நிறுவனங்கள் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக போதிய ஆர்டர்கள் கிடைக்காமல் அவதிக்குள்ளாகியுள்ளன. இதனால், இந்தத் துறையில் வேலை இழப்போர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. 

ஆட்டோமொபைல்

சிறப்பான, மின்னல் வேக வளர்ச்சி மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் ஆகியவற்றால் இளைஞர்களின் சொர்க்கபுரியாக தகவல் தொழில்நுட்பத் துறை நீண்டகாலமாக இருந்து வந்தது. ஆனால், தற்போது ஹெச்1 பி விசாவுக்கு அமெரிக்கா அதிகளவில் கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்துள்ளதால், இந்தத் துறையினருக்கு அமெரிக்கா செல்லும் வாய்ப்புகளும் குறைந்துள்ளன. மேலும், பல மகாதேவன் கோபால்நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்களின் எண்ணிக்கையையும் குறைத்துவருகின்றன. இதைத் தொடர்ந்து இளைஞர்களின் பார்வை, உற்பத்தித் துறை மீது திரும்பியுள்ளது. 

ஆட்டோமொபைல் துறை சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது. இதனால், இந்தத் துறையில் வேலைவாய்ப்புகள் அதிகளவில் உருவாகியுள்ளதால், தகவல் தொழில்நுட்ப இன்ஜினீயர்கள் அதிகளவில் இந்த நிறுவனங்களில் பணியமர்த்தப்படுகின்றனர். தொடக்கத்தில் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் முடித்தவர்கள் அதிகளவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்ற விரும்பிச் சென்றனர். தற்போது, அந்த நிலை அப்படியே மாறியுள்ளது. தகவல் தொழில்நுட்ப இன்ஜினீயர்கள் அதிகளவில் ஆட்டோமொபைல் துறைக்கு வருகின்றனர். ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்டுள்ள சிறப்பான வளர்ச்சியே இதற்குக் காரணம்.''

ஆட்டோமொபைல் துறையில் பணியாளர்கள் சேர்க்கை, தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இந்தத் துறை, கடந்த மார்ச் மாதத்தில் 33 சதவிகித வளர்ச்சி கண்டுள்ளது. மேலும், இந்தத் துறை கடந்த 2017-ம் ஆண்டு முழுவதும் சிறப்பான வளர்ச்சியடைந்துள்ளது. வரும் அக்டோபர் மாதம் முதல் ஆட்டோமொபைல் துறை இரட்டை இலக்க வளர்ச்சி அடையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து அசோக் லேலேண்ட் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி மகாதேவன் கோபால் கூறுகையில்... ``தகவல் தொழில்நுட்ப இன்ஜினீயர்கள் ஆட்டோமொபைல் துறைக்கு வருவது திடீரென அதிகரித்துள்ளது. மேலும் ஐ.டி படித்த இன்ஜினீயர்களிடமிருந்து வேலைவேண்டி அதிக விண்ணப்பங்கள் வந்துகொண்டிருக்கின்றன. கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது அதிகளவில் விண்ணப்பங்கள் வந்துகொண்டிருக்கின்றன'' என்று தெரிவித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!