ரூ.1 கோடி சம்பளமாகப் பெறும் இந்தியப் பெண் - கூகுளில் அடித்த ஜாக்பாட் | per annum rs. 1cr Bihar girl got placed in google

வெளியிடப்பட்ட நேரம்: 09:53 (09/05/2018)

கடைசி தொடர்பு:10:18 (09/05/2018)

ரூ.1 கோடி சம்பளமாகப் பெறும் இந்தியப் பெண் - கூகுளில் அடித்த ஜாக்பாட்

பிரபல தொழில்நுட்ப நிறுவனமான கூகுளில், ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் ஊதியத்தில், பீகாரைச் சேர்ந்த மதுமிதா ஷர்மா என்ற பெண்ணுக்கு வேலை கிடைத்துள்ளது. 

மதுமிதா

(PC-Madhumita Sharma facebook page)

பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள சன்பத்ரா என்ற பகுதியில் வசித்துவருகிறார் மதுமிதா ஷர்மா (25). இவர், ஜெய்ப்பூரில் உள்ள ஆர்யா பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில், கணினி பொறியியல் துறையில் பி.டெக் பட்டம் பெற்றார். இந்நிலையில், ஸ்விச்சர்லாந்தில் உள்ள கூகுள் நிறுவன தொழில்நுட்பப் பிரிவில், கடந்த திங்கள்கிழமை பொறியாளராகப் பொறுப்பேற்றார். ஆண்டுக்கு 1 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டிருக்கிறது. அமேசான், மைக்ரோசாஃப்ட், மற்றும் மெர்சிடஸ் உள்ளிட்ட மிகப்பெரிய நிறுவனங்களிலிருந்தும் அழைப்பு விடுக்கப்பட்டது. இருந்தாலும், கூகுள் நேர்காணல் சுற்றில் கவனம் செலுத்திய மதுமிதா, ஏழு சுற்றுகளைக் கடந்து நிறுவனத்தில் சேர்ந்திருக்கிறார். 

மகளுக்குக் கிடைத்த வாய்ப்பைப் பற்றி பகிர்ந்துகொண்ட அவரின் தந்தை சுரேந்திர் குமார் ஷர்மா, `மென்பொருள் துறையில் பல பெண்கள் சாதித்துவருகின்றனர். இருந்தாலும், பெண்களுக்கு ஏற்ற துறை இன்ஜினீயரிங் இல்லை என்று முதலில் மறுத்துவிட்டேன். படித்தால் இன்ஜினீயரிங்தான் படிப்பேன் என்று அடம்பிடித்து பி.டெக் படிப்பில் சேர்ந்தாள். இப்போது அதை நினைக்கையில், மிகப்பெரிய தவறுசெய்ய இருந்தேன். குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாம் எழுதிய புத்தகங்கள், அவரது சுயசரிதைகளை விரும்பிப் படிக்கும் மதுமிதாவுக்கு அவருடைய எண்ணங்கள் தாக்கத்தை ஏற்படுத்தி உத்வேகம் அளித்தன' என்று குறிப்பிட்டு நெகிழ்ந்தார். 

மேலும், கூகுள் நிறுவனத்தின் முதல்நாள் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்ட மதுமிதா, `என்னை மெருகேற்றிக்கொள்ள இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். வாழ்க்கையை மேம்படுத்துவதுக்கான முதல் அடியை எடுத்து வைத்திருக்கிறேன். கூகுள் போன்ற ஒரு பெரிய நிறுவனத்தில் பணியாற்ற வேண்டும் என்ற எனது கனவு தற்போது நிறைவேறியுள்ளது' என்றார்.