வெளியிடப்பட்ட நேரம்: 10:21 (09/05/2018)

கடைசி தொடர்பு:10:43 (09/05/2018)

ரயில் வைஃபையில் படித்து அரசுப் பணிக்கான தேர்வில் வெற்றிபெற்ற கூலித் தொழிலாளி

'ரயில் வைஃபை வசதியில் படித்து அரசுத் தேர்வில் வெற்றிபெற்றேன்' என்று கேரளாவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி தெரிவித்துள்ளார். 

கேரளாவைச் சேர்ந்தவர் ஶ்ரீநாத். 12-ம் வகுப்பு முடித்துள்ள அவர், எர்ணாகுளம் பகுதியில் மூட்டை  தூக்கும் தொழிலாளியாகப் பணி செய்துவருகிறார். அவர், அரசுப் பணிகளுக்காக கேரள அரசு சார்பில் நடத்தப்படும் எழுத்துத் தேர்வில் தற்போது வெற்றிபெற்றுள்ளார். இதுகுறித்து தெரிவித்த அவர், 'மூன்று முறை இந்தத் தேர்வு எழுதியுள்ளேன். இந்தமுறைதான், ரயில் நிலையத்திலுள்ள வை-ஃபை வசதியைப் பயன்படுத்திப் படித்து, தேர்வை சந்தித்தேன்.

மூட்டை தூக்கும்போது,  படிப்பு சார்ந்த பதிவுகளை செல்போனில் ஓடவிட்டு, ஹெட்போனை காதுகளில் மாட்டிக்கொள்வேன். என்னுடைய கவனம், அதைக் கேட்பதில்தான் இருக்கும். இந்த முறையில்தான் வேலை பார்த்துக்கொண்டே படித்தேன். இரவில் ஓய்வாக இருக்கும்போது, படித்ததை நினைவுபடுத்திக்கொள்வேன்' என்று தெரிவித்தார்.