வெளியிடப்பட்ட நேரம்: 12:54 (09/05/2018)

கடைசி தொடர்பு:12:54 (09/05/2018)

சர்ச்சை முதலமைச்சர் பிப்லாப் குமாரும் சகட்டுமேனித் தாக்குதலும்! - திரிபுராவில் என்ன நடக்கிறது?

அடுத்தடுத்த சர்ச்சைகளால் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பைச் சந்தித்துவரும் திரிபுரா மாநில முதலமைச்சரான பா.ஜ.க-வின் பிப்லாப் குமார் தேப், நெருக்கடியை அடுத்து இன்று விளக்கம் அளித்துள்ளார். 

திரிபுரா மாநிலத்தில் 25 ஆண்டுகளாக நடந்துவந்த இடது முன்னணி ஆட்சியை கடந்த சட்டப்பேரவையில் வீழ்த்தி, பா.ஜ.க கூட்டணியின் சார்பில் கடந்த மார்ச் 9 முதல் முதலமைச்சராக இருந்துவருபவர், பிப்லாப் குமார் தேப்.. வடமாநிலங்களின் பல பா.ஜ.க பிரமுகர்களைப் போலவே, இவரும் சர்ச்சைக்குரியவகையில் ஏதாவது பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். 

Biblap kumar deb

கடந்த மாதம் 17-ம் தேதியன்று திரிபுரா மாநிலம் அகர்தலாவில் நடந்த கணினிமயமாக்கல் பயிற்சி தொடக்கவிழாவில் பேசுகையில், ” செயற்கைக்கோள், கணினி இணையம் ஆகியவை இன்று நேற்று வந்தது அல்ல; இவை மகாபாரத காலத்திலேயே இருந்துள்ளன. அப்படி இல்லாமல் எப்படி குருஷேத்திரப் போரில் திருதராஷ்டிரர்களின் சாரதியான சஞ்சயா, அவனுடைய மன்னனுக்கு தகவல்களை விவரித்திருக்கமுடியும்? அதாவது அந்தக் காலத்தில் செயற்கைக்கோள்கள், இணைய நுட்பம் எல்லாம் இருந்திருக்கின்றன என்பதுதான் சங்கதி. ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் இதை தங்களுடைய கண்டுபிடிப்பு எனக் கூறலாம்; ஆனால் உண்மையிலேயே அது இந்தியாவின் தொழில்நுட்பம். லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் இணையமும் செயற்கைக்கோள் வசதியும் இருந்திருக்கின்றன. உயர்ந்த பண்பாடானது நம்முடைய தேசத்துக்கு உரியதாக இருந்துள்ளது. அதை எண்ணிப் பெருமிதப்படுகிறேன். இன்றைக்கும் இணையம் மற்றும் மென்பொருள் நுட்பத்தில் நாம் முன்னேறியநிலையில் இருக்கிறோம். மைக்ரோசாஃப்ட்டை எடுத்துக்கொள்வோமானால், அது அமெரிக்க நிறுவனமாக இருக்கலாம்; ஆனால் அதில் பணியாற்றும் பெரும்பாலான பொறியாளர்கள் நம் நாட்டிலிருந்து சென்றவர்கள். அமெரிக்க நிறுவனங்களில் ஏராளமான இந்தியப் பொறியாளர்கள் முதன்மையான பங்கை ஆற்றுவதன் மூலம் நம்முடைய சாதனை மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது” என்றும் பிப்லாப் குமார் கூறினார். 

முன்னதாக, கடந்த மாதம் 11-ம் தேதியன்று, ”காரல் மார்க்சையும் ஹிட்லரையும் அறிந்துகொண்ட அளவுக்கு திரிபுரா குழந்தைகள் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பற்றித் தெரிந்திருக்கவில்லை” என்று பிப்லாப் குமார் கூறியிருந்தார். 

ஏப்.28 அன்று, ”கட்டுமானப் பொறியாளர்கள்தான் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் போன்ற தேர்வுகளை எழுதுவதற்குத் தகுதியானவர்கள்; இயந்திரவியல் பொறியாளர்கள் அதற்குத் தகுதி இல்லாதவர்கள்” என்றும் பிப்லாப் குமார் கூற, அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதையடுத்து, தான் அவ்வாறு கூறவில்லை என ஒரு நாள் கழித்து மறுப்பு வெளியிட்டார். 

அதற்கு முன்னதாக, 26-ம் தேதியன்று நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, பிப்லாப் குமாரின் வார்த்தைகளில் சிக்கியது, அழகிப் போட்டி. உலக அழகிப் போட்டிகளைப் பற்றிய விமர்சனத்தை முன்வைத்த அவர், “ நாம் பெண்களை லட்சுமி, சரஸ்வதி ஆகிய தெய்வங்களைப் போலப் பார்க்கிறோம். ஐஸ்வர்யாராய் இந்தியப் பெண்களில் ஒருவராக இருக்கிறார். அவர் உலக அழகியாகவும் ஆனார்; அது சரி. ஆனால், (1997-ல் உலக அழகியாக ஆன இந்தியாவின்) டயானா ஹைடனின் அழகை என்னால் புரிந்துகொள்ளமுடியவில்லை” என்று ஏடாகூடமாகப் பேச, அதற்கு டயானா மட்டுமல்ல, பெண்கள் உரிமைத் தளத்தில் கடுமையான எதிர்ப்பு எழுந்தது. 

பல முனைகளிலிருந்தும் கிளம்பிய எதிர்ப்பால், மறுநாளே அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகக் கூறினார். கட்டுமானப் பொறியாளர்களைப் பற்றிய சர்ச்சை முடியாதநிலையில், அதைப் பேசிய அடுத்த நாளன்றே, ” திரிபுரா இளைஞர்கள் எல்லாம் அரசுப் பணிகளுக்காக அரசியல்வாதிகளின் பின்னால் அலையக்கூடாது; அதற்குப் பதிலாக பால்மாடுகளை வாங்கி வளர்க்கலாம் அல்லது பீடா கடை போடலாம்; குறிப்பாக படித்த இளைஞர்கள் முத்ரா திட்டத்தின் கீழ் சுயதொழில்களைத் தொடங்கலாம்” எனக்கூறி, இன்னுமொரு பஞ்சாயத்தைக் கூட்டினார்.

அவருக்கு நல்வாய்ப்பாக, இந்தப் பேச்சு பெரிதாக எந்தப் பிரச்னையையும் கொண்டுவந்து விடவில்லை, இதுவரை!

இதற்கிடையில், திரிபுரா மாநில பூர்வகுடி மக்களின் தாய்மொழியான ’காக்போரக்’ மொழியில், உள்ளூர் தொலைக்காட்சி செய்திகளை வெளியிடக்கூடாது; இந்தியில் செய்திகளை வெளியிடவேண்டும் என செய்தித்துறை கூட்டத்தில் உத்தேசிக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. உடனே அம்மாநிலம் முழுக்கப் பெருந்தீயாய்ப் பற்றிக்கொண்டது, இந்த விவகாரம். முந்தைய ஆளும் கட்சியான சி.பி.எம் மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் உட்பட பூர்வகுடிகளின் அமைப்புகளும் அப்படியொரு முடிவு எடுக்கப்பட்டால் விளைவுகள் கடுமையாக இருக்கும் என எதிர்ப்பைத் தெரிவித்தன. அரசுத் தரப்பில் அப்படியொரு முடிவெல்லாம் இல்லை என அதிகாரிகள் மட்டுமே விளக்கம் அளித்தனர். 

சர்ச்சைகளுக்கு அடுத்தபடியாக, மே முதல் தேதியன்று உதய்ப்பூரில் சி.பி.ஐ - எம்.எல். கட்சி நடத்திய தொழிலாளர் தின ஊர்வலத்தின்போது, பி.ஜே.பி - யினர் தடுக்கமுயன்றுள்ளனர். 'விவேகானந்தர் போன்றவர்களின் படங்களை விட்டுவிட்டு வெளிநாட்டுத் தலைவர்களின் படங்களை வைத்திருப்பதா' என ஊர்வலத்தினரைத் தாக்கவும்செய்தனர். அதில் எம்.எல்.கட்சியின் 6 நிர்வாகிகள் காயமடைந்தனர். ஆனாலும் அதையடுத்து, அதே ஊரிலுள்ள சி.பி.எம் கட்சியின் அலுவலகத்துக்குச் சென்ற பா.ஜ.க-வினர், அங்கு உள்ளே நுழைய முயன்றுள்ளனர். உதய்ப்பூர் எம்.எல்.ஏ-வும் சி.பி.எம் கட்சியின் மாவட்டச்செயலாளருமான ரத்தன் பௌமிக் உடனே தலையிட்டதால், அங்கு வன்முறைகள் நிகழாமல் தடுக்கப்பட்டது. 

ஒரு மாநில முதலமைச்சரின் சர்ச்சையான பேச்சுகளும் சில மன்னிப்புகளும் சாதாரணமாகத் தொடரும்நிலையில், மாற்றுக்கருத்தை உடையவர்கள் என்பதற்காக அவர்களைத் தாக்குவது திரிபுரா மாநில அரசியலில் வேறு திசையிலான பயணத்தைத் தொடங்கிவைக்கிறது. இதன் அடுத்தகட்டம் எப்படி இருக்கப்போகிறதோ என ஜனநாயகவிரும்பிகள் அச்சத்தின் உச்சத்தில் உறைந்துபோய் இருக்கிறார்கள்!


டிரெண்டிங் @ விகடன்