வெளியிடப்பட்ட நேரம்: 11:45 (09/05/2018)

கடைசி தொடர்பு:11:45 (09/05/2018)

காங்கிரஸ் தேர்தல் அறிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

கர்நாடக மாநில காங்கிரஸ் தேர்தல் அறிக்கைக்கு எதிராக பிரமோத் முத்தலிக் என்பவர் தொடர்ந்த வழக்கு நாளை விசாரிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

கர்நாடக மாநிலத்தில் மே 12-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. அந்த மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. இரண்டு கட்சியினரும் தீவிரமான பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் பிரசாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில், ஶ்ரீராம் சேனா என்ற அமைப்பின் தலைவர் பிரமோத் முத்தலிக் என்பவர், கர்நாடக மாநில காங்கிரஸ் அறிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், 'காங்கிரஸ் தேர்தல் அறிக்கை மதத்தின் பெயரால் வாக்கு கேட்பதுபோன்று அமைந்துள்ளது. எனவே, அதிலுள்ள மதம் சார்ந்த வாக்குறுதிகளை நீக்க வேண்டும். காங்கிரஸ் வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த மனுவை அவசர வழக்காகக் கருதி நாளை விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.