வெளியிடப்பட்ட நேரம்: 15:10 (09/05/2018)

கடைசி தொடர்பு:15:10 (09/05/2018)

மாற்றமில்லா பெட்ரோல், டீசல் விலை..! தீர்மானிப்பது யார்... கர்நாடகத் தேர்தல் காரணமா?

இந்தியா முழுவதும் கடந்த 15 நாள்களாகப் பெட்ரோல், டீசல் விலையில் உயராமல் உள்ளது. கர்நாடகா தேர்தல் காரணமாகத்தான் விலை உயர்வு இல்லை என்று கூறப்படுகிறது. 

இந்தியா முழுவதும் கடந்த ஒரு வருட காலமாகப் பெட்ரோல், டீசல் விலை தினமும் மாற்றியமைக்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலையேற்ற இறக்கத்தைப் பொறுத்து பெட்ரோலிய நிறுவனங்கள் விலையை மாற்றியமைப்பதாகக் கூறப்படுகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் அம்மாநில வரியைப் பொறுத்து பெட்ரோல், டீசல் விலையில் வேறுபாடுகள் இருந்தாலும் விலை உயர்வு சமமாக இருந்துவந்தன.

கடந்த சில மாதங்களாகப் பெட்ரோல், டீசல் விலை பைசா அளவுகளில் பெரும்பாலும் உயர்வடைந்தே வந்தன. இந்தநிலையில், கடந்த 15 நாள்களாகப் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்துவருகிறது. கர்நாடக மாநிலத்தில் தேர்தல் நடைபெறவுள்ளதால், பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாமல் உள்ளது என்று கருத்து நிலவுகிறது. கர்நாடகத் தேர்தல் காரணமாகத்தான் பெட்ரோல், டீசல் விலை மாற்றப்படவில்லையென்றால், இந்த விலையேற்றத்தை தீர்மானிப்பது யார் என்றும் கேள்வி எழுகிறது. பெட்ரோல், டீசல் விலை மாற்ற விவகாரம் தற்போது புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.