'ஆண்டுக்கு ஒன்றரை கோடி வருமானம்!' - பிளாஸ்டிக் மறுசுழற்சியில் கலக்கும் மணிப்பூர் குடும்பம்

பிளாஸ்டிக் மறுசுழற்சியில் சாதித்துள்ளனர் மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த தந்தையும் மகனும். `பிளாஸ்டிக் பொருள்களை மறுசுழற்சி செய்து, வீட்டுப் பொருள்கள், பூந்தொட்டிகள், தண்ணீர்த் தொட்டிகளை உருவாக்கலாம்' என்கின்றனர் அவர்கள்.   

பிளாஸ்டிக்

பிளாஸ்டிக் பொருள்களால் சுற்றுப்புறச் சூழல் பாதிக்கப்படுவதால், அதனைத் தடை செய்ய வேண்டும் எனச் சூழல் ஆர்வலர்கள் தொடர்ச்சியாகப் போராடி வருகின்றனர். அதேநேரம், `பிளாஸ்டிக் பொருள்களை மறுசுழற்சி செய்வதால் சுற்றுப்புறச் சூழலுக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படாது' என்கின்றனர் மணிப்பூர் மாநிலம் இம்பாலைச் சேர்ந்த குணகந்தாவும் அவருடைய மகனும்.

கடந்த 1990-ம் ஆண்டில் பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை மறுசுழற்சி செய்யும் தொழிற்சாலையைச் சிறிய அளவில் தொடங்கினார் குணகந்தா (Sadokpam Gunakanta). அப்போது, பள்ளியில் படித்துக் கொண்டிருந்த அவரது மகன் இடோம்பி சிங் ( Sadokpam Itombi Singh) விடுமுறை நாள்களில் தந்தைக்கு உறுதுணையாகத் தொழிற்சாலைப் பணிகளைக் கவனித்து வந்தார். அந்த நாள்களில், அருகில் இருந்தவர்கள் பயன்படுத்திய பாட்டில்களை சேகரித்து டெல்லி, கவுகாத்தி ஆகிய மாநிலங்களில் இயங்கிவந்த பிளாஸ்டிக் மறுசுழற்சி மையத்துக்கு அனுப்பி வந்தனர்.

இந்நிலையில், அரசு பாலிடெக்னிக்கில் கணினியல் துறையில் பட்டப்படிப்பை முடித்த பிறகு, தொழில்தொடங்க விரும்பினார் இடோம்பி. ஒன்றரை லட்ச ரூபாய் முதலீட்டில் தந்தையுடன் சேர்ந்து எஸ்.ஜே. பிளாஸ்டிக் தொழிற்சாலையை தொடங்கினார். தற்போது இந்த ஆலையின் ஆண்டு வருமானம் ஒன்றரை கோடி ரூபாயைத் தாண்டிவிட்டது. தொழிற்சாலையில் 35 பேர் பணிபுரிந்து வருகின்றனர்.

இதுகுறித்துப் பேசிய குனகந்தா, " பிளாஸ்டிக் பொருட்கள் மறுசுழற்சி செய்யப்படக்கூடியவை. அவற்றை வெளியில் வீசுவதன் மூலம் நீர் ஆதாரங்கள், மண் ஆகியவை மாசுபடுகின்றன. அதனால் பிளாஸ்டிக் பொருள்களை மறுசுழற்சி செய்து, வீட்டுக்குத் தேவையான பொருள்கள், பூந்தொட்டிகள், தண்ணீர் தொட்டிகளையும் உருவாக்கலாம்'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!