தீவிரவாத அமைப்பில் சேர்ந்த 36 மணிநேரத்தில் இறந்த காஷ்மீர் பேராசிரியர்!

தீவிரவாத அமைப்பில் சேர்ந்த 36 மணிநேரத்தில் இறந்த காஷ்மீர் பேராசிரியர்!

தீவிரவாத இயக்கத்தில் இணைந்த பேராசிரியர், 36 மணிநேரத்திலேயே உயிரிழந்த சம்பவம் ஜம்மு - காஷ்மீரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஷ்மீர் மாநிலம் ஷோபியான் நகரில், பாதுகாப்புப் படையினருக்கும் `ஹிஸ்புல் முஜாஹிதீன்' என்ற தீவிரவாத இயக்கத்தினருக்கும் இடையில் நேற்று ஏற்பட்ட மோதலில் பொதுமக்கள் ஐந்து பேர் உள்பட 10 பேர் உயிரிழந்தனர். மேலும், இந்தத் தாக்குதலில் 80-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். 

உயிரிழந்த தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்களுள் முஹம்மது ரபி பட் என்ற 33 வயதான பேராசிரியரும் ஒருவர். இவர், கடந்த வெள்ளிக்கிழமைதான் தீவிரவாத இயக்கத்தில் இணைந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், அந்த இயக்கத்தைச் சேர்ந்த முக்கியப் புள்ளிகள் நான்கு பேரும் உயிரிழந்ததாகப் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

காஷ்மீர்

தீவிரவாத இயக்கத்தில் இணைந்து பேராசிரியர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் பேராசிரியரின் குடும்பத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வழக்கம்போல் வெள்ளிக்கிழமை பல்கலைக்கழகத்துக்குச் சென்றுவந்த பேராசிரியர் ரபி, பிற்பகல் 3.30 மணிக்கு தனது இடத்திலிருந்து சென்று இயக்கத்தில் இணைந்ததாகக் கூறப்படுகிறது. அவர் காணாமல் போனதை சனிக்கிழமை உணர்ந்த அவரது குடும்பத்தினர், கல்லூரி நிர்வாகத்திடம் இதனைத் தெரிவித்தனர். பின்னர் காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. அவரது செல்போனை ட்ராக் செய்த காவல் துறையினர், அவர் தீவிரவாத இயக்கத்தில் இணைந்ததை உறுதி செய்தனர். பின்னர், பேராசிரியர் ரபியின் தந்தையிடம் பேசிய காவல் துறையினர், ``உங்கள் மகனை போலீஸில் சரணடையச் செய்யுங்கள்'' என்று கோரிக்கை வைத்தனர். அதற்கு தன் தந்தையிடம் மறுப்பு தெரிவித்து பதிலளித்த பேராசிரியர் ரபி, ``நான் உங்களைப் புண்படுத்தியிருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள். தங்களிடம் பேசுவது இதுவே கடைசி முறை. நான் கடவுளிடம் செல்கிறேன்" என்றார்.

இதனையறிந்து ஞாயிறு காலை ரபியைச் சந்திக்க அவரது குடும்பத்தினர் சென்றனர். ஆனால், தங்கள் வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்திலேயே அவர் உயிரிழந்துவிட்டார் என்ற செய்தி வந்தது. எனவே, இறுதிச்சடங்குக்கான பணிகளை மேற்கொள்ள அவரது குடும்பத்தினர் மீண்டும் வீட்டுக்குக் கண்ணீர் மல்கத்  திரும்பினர்.

பேராசிரியர் உயிரிழந்த சம்பவத்தை அறிந்த மாணவர்களும் பொதுமக்களும் அதிர்ச்சியில் உறைந்தனர். அவரது இறப்பைப் பற்றிப் பேசிய மாணவர்கள் சிலர், ``அவர், ஓர் ஆசிரியர் என்பதைவிட  நல்ல நண்பராகவும் வழிகாட்டியாகவும் திகழ்ந்தார். மேலும், அவர் கல்லூரியிலிருந்து விடைபெற்று ஹைதராபாத் செல்லவுள்ளதாகக் கூறினார்" என்றனர்.

தனது 18-ஆவது வயதில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் பகுதிக்குச் செல்ல பேராசிரியர் முயற்சி செய்ததாகவும், அப்போது அவர் காவல் துறையினரால் பிடிக்கப்பட்டு மீண்டும் வீட்டில் சேர்க்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.

காஷ்மீர்

இச்சம்பவம் குறித்து பேசிய ஜம்மு - காஷ்மீர் முதலமைச்சர் மெஹபூபா முக்தி, ``இளம் வயதினர் இதுபோல் தீவிரவாதத்தில் ஈடுபட்டு உயிரிழப்பது ஆழ்ந்த துக்கத்தை அளிக்கிறது'' என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர், ``இருபுறமும் துப்பாக்கி ஏந்துவதால் நாட்டில் அமைதி நிலவாது எனவும் இரக்கம் காட்டுவதால் மட்டுமே அது சாத்தியம்'' எனவும் கூறியுள்ளார்.

இச்சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த பல்கலைக்கழக நிர்வாகம் இரண்டு நாள்களுக்குக் கல்லூரிக்கு விடுமுறை அளித்தது. மேலும், தேர்வுகளை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளது. தெற்கு காஷ்மீர் மற்றும் மத்திய காஷ்மீர் பகுதிகளில் இன்டர்நெட் சேவையும் முடக்கப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!