'ஜெய் உயிருடன் இருப்பதற்கு சாத்தியமில்லை'- மிகப்பெரிய இந்திய புலிக்காக கண்கலங்கிய வனத்துறையினர் | india has lost biggest tiger

வெளியிடப்பட்ட நேரம்: 12:20 (10/05/2018)

கடைசி தொடர்பு:12:20 (10/05/2018)

'ஜெய் உயிருடன் இருப்பதற்கு சாத்தியமில்லை'- மிகப்பெரிய இந்திய புலிக்காக கண்கலங்கிய வனத்துறையினர்

இந்தியாவின் மிகப் பெரிய புலியான ஜெய், உயிருடன் இருப்பதற்கு சாத்தியமில்லை என நாக்பூர் வன ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர். இரண்டாண்டு தேடுதலுக்குப் பிறகு இந்தத் தகவலை அவர்கள் தெரிவித்துள்ளனர். 

ஜெய் புலி

(PC -NDtv) 

மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் இருக்கிறது உம்ரெட் கர்ஹன்ட்லா வன விலங்கு சரணாலயம். 2013-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தச் சரணாலயம், 182 கி.மீட்டர் சுற்றளவுகொண்டது. இங்கு, ஜெய் எனப் பெயர் சூட்டப்பட்ட மிகப் பெரிய புலி ஒன்று வாழ்ந்துவந்தது. 250 கிலோ எடையுடன் நீளத்திலும் அகலத்திலும் பிரமாண்ட தோற்றத்துடன் பவனி வந்தது ஜெய். கடந்த 2016-ம் ஆண்டில் ஏழு வயதைக் கடந்த இந்தப் புலியை, பிரத்யேகமாகக் கவனித்துவந்தனர் வனத்துறை அதிகாரிகள்.

புலி உலவும் இடம், எந்த இடத்தில் இருக்கிறது என்பதைக் கண்காணிக்க, `ரேடியோ காலர் சிக்னல்' கருவியை ஜெய்யின் கழுத்தில் மாட்டிவிட்டிருந்தனர். இந்நிலையில், கடந்த 2016-ம் ஆண்டு ஜெய் காணாமல்போனது. ரேடியோ காலர் சிக்னல் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. காணாமல் போன நான்கு மாதங்களுக்குப் பிறகு, கடைசியாக ஜெய் சுற்றித் திரிந்த பகுதியில், சில வேட்டைக்காரர்கள் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து வெளியான தகவலில், ' ஜெய்யை பணத்துக்காகக் கொலைசெய்துவிட்டனர்' எனப் பொதுமக்கள் மத்தியில் தகவல் பரவியது.

இதை மறுத்த வன அதிகாரிகள், ஜெய் உயிருடன் இருப்பதாகவே தெரிவித்துவந்தனர். கடைசியாக, 2016-ம் ஆண்டு ஏப்ரல் 18-ம் தேதி, பயோனி (paoni) பகுதியில், ஜெய்யிடமிருந்து சிக்னல் கிடைத்தது. அதன்பின், எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இந்த நிலையில், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ' ஜெய் உயிரிழந்திருக்கலாம்; அதற்கான வாய்ப்புகள் அதிகம்' என வன ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தத் தகவல், சூழல் ஆய்வாளர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.