வெளியிடப்பட்ட நேரம்: 12:40 (10/05/2018)

கடைசி தொடர்பு:12:40 (10/05/2018)

‘சீருடையில் பிச்சை எடுக்க அனுமதியுங்கள்’ - முதல்வரை பதறவைத்த காவலரின் கடிதம்

தன்னை, சீருடையுடன் பிச்சையெடுக்க அனுமதிக்கும்படி மும்பை காவலர் ஒருவர் அம்மாநில முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

pooliiS

மகாராஷ்டிராவில் பா.ஜ.க-வின் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்றுவருகிறது. மும்பையில் காவலராக  இருப்பவர், த்யானேஸ்வர் அஹிரோ. இவர், சிவசேனா தலைவர் உத்தவ் தக்ரே இல்லத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளார். இரண்டு மாதமாக தனக்குச் சம்பளம் வழங்கப்படாததால், தன்னை சீருடையில் பிச்சையெடுக்க அனுமதிக்கும்படி அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், ஆளுநர் வித்யாசாஹர் ராவ் மற்றும் போலீஸ் கமிஷனர் தத்தா பட்சல்கிகார் ஆகியோருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக த்யானேஸ்வர் எழுதியுள்ள கடிதத்தில், “கடந்த மார்ச் மாதம் எனது மனைவிக்கு காலில் அடிப்பட்டதால், 20 முதல் 22-ம் தேதி வரை அவசர விடுப்பு எடுத்தேன். எனது விடுப்பை நான் தொலைபேசியில் அதிகாரிகளுக்குத் தெரிவித்தேன். இரண்டு நாள்களுக்குப் பிறகு வேலையில் சேர்ந்துவிட்டேன். அது முதல் கடந்த இரண்டு மாதங்களாக எனக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. நான் வயது முதிர்ந்த பெற்றோர், மனைவி மற்றும் குழந்தைகளை கவனித்துக்கொள்ள வேண்டும். வங்கியில் கடன் வாங்கியதால், அதையும் மாதா மாதம் செலுத்திவருகிறேன். தற்போது இரண்டு மாதங்களாகியும் சம்பளம் வராததால், குடும்பத்தை நடத்துவது மிகவும் சிரமமாக உள்ளது. எனவே, என்னை சீருடையுடன் பிச்சையெடுக்க அனுமதிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்” என குறிப்பிட்டிருந்தார். இந்தக் கடிதம், மும்பை காவல்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.