வெளியிடப்பட்ட நேரம்: 17:26 (10/05/2018)

கடைசி தொடர்பு:18:58 (11/05/2018)

`ரோல்மாடலாக இருக்க விரும்புகிறோம்!' - திருமண பந்தத்தில் இணைந்த மாற்றுப் பாலினத்தவர்

திருநங்கைகள் திருமணம்

தங்களுடைய திருமணத்தை மிகக் கோலாகலமாக நடத்தி முடித்துள்ளனர் கேரள திருநங்கைகள். 'எங்களுடைய நீண்டநாள் காதலுக்கு பெற்றோர்களும் பச்சைக்கொடி காட்டிவிட்டனர். அந்த உற்சாகத்தில்தான் திருமணத்தைச் சிறப்பாக நடத்தி முடித்தோம்' என்கின்றனர் புதுமணத் தம்பதிகள். 

திருமணம்

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் இஷான். பெண்ணாகப் பிறந்த இவர் தனக்குள் ஆண் தன்மை இருப்பதை அறிந்தார். இதையடுத்து, சில ஆண்டுகளிலேயே திருநம்பியாக மாறினார். இவரது வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த சூர்யா என்பவர் திருநங்கையாக மாறினார். இருவருக்குள்ளும் புரிதல் ஏற்பட்டுவிடவே, நீண்டநாள்களாகக் காதலித்து வந்தனர். கேரளாவில் உள்ள பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் துணை நடிகையாகவும் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார் சூர்யா.

இவர்களின் காதலுக்கு உறவினர்கள் மத்தியில் எதிர்ப்புக் கிளம்பியது. ஒருகட்டத்தில் இவர்களின் உணர்வை பெற்றோர்களும் புரிந்து கொண்டனர். இதையடுத்து, திருமண பத்திரிகை அடித்து உறவினர்களுக்கும் அழைப்பு விடுத்தனர். இன்று நடந்த இவர்களது திருமணத்தில் விருந்து வைத்து அசத்தியுள்ளனர்.

திருமணம்

தங்களது திருமணம் குறித்துப் பேசும் இஷானும் சூர்யாவும், "நாங்கள் இருவரும் நீண்ட காலமாகக் காதலித்து வந்தோம். திருமணம் செய்ய முடிவு செய்ததும் பெற்றோர்களிடம் கூறினோம். ஒருகட்டத்தில் அவர்களும் எங்கள் திருமணத்தை அங்கீகரித்தனர். எனவே, பெரியவர்களின் ஆசீர்வாதத்தோடு திருமணம் செய்துகொண்டோம். இது எங்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணம். மற்றவர்களுக்கு ஒரு ரோல்மாடலாக இருக்க வேண்டும் என விரும்புகிறோம்" என்றனர்.