வெளியிடப்பட்ட நேரம்: 21:40 (10/05/2018)

கடைசி தொடர்பு:21:40 (10/05/2018)

38 நாள்கள் நீண்ட விசாரணை! ஆதார் வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம்

ஆதார் அட்டைக்கு எதிரான வழக்கில் 38 நாள்கள் விசாரணைக்குப் பின்னர் வழக்கின் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. 

உச்ச நீதிமன்றம்

தேசிய தனிநபர் அடையாள ஆணையம் மூலம் வழங்கப்படும் ஆதார் அட்டைக்காக, கைரேகை, கருவிழிப் பதிவுகள் முதல் செல்போன் எண், வீட்டு முகவரி உள்ளிட்ட தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. இது தனிநபர் உரிமைக்கு எதிரானது என்று கூறி ஆதார் அட்டைக்கு எதிராகப் பல்வேறு அமைப்புகள் தனிநபர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதனால், வங்கிக் கணக்கு, செல்போன் எண் உள்ளிட்டவையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டிய காலக்கெடுவை காலவரையின்றி நீட்டித்து உச்ச நீதிமன்றம் கடந்த மார்ச் மாதத்தில் உத்தரவிட்டது. ஆதார் அட்டைக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தும், உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.  

இந்த வழக்கின் விசாரணை கடந்த 38 நாள்களாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கேசவ் நாப்டா பார்தி வழக்குக்குப் பின்னர் அதிக நாள்கள் தொடர்ந்து விசாரிக்கப்பட்ட வழக்கு இதுதான் என மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் தெரிவித்தார். அந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து 68 நாள்கள் நடந்தது. இறுதி விசாரணைக்குப் பின்னர், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர். முன்னதாக, ஆதார் தகவல்கள் சரிபார்ப்பின் போது ஏற்படும் பிழை, உரிய நேரத்தில் உதவிகள் கிடைக்க வேண்டியவருக்கு அது கிடைக்காமல் செய்துவிட வாய்ப்பு உண்டு என நீதிபதிகள் கருத்துத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.