வெளியிடப்பட்ட நேரம்: 20:38 (10/05/2018)

கடைசி தொடர்பு:20:38 (10/05/2018)

சந்தையில் மீண்டும் இறங்குமுகம் 

தொடக்கம் வலுவாக இருந்தாலும், உயர் நிலையில் தொடர்ந்து ஆதரவு பெற முடியாததால், பங்குகளின் விலை மெதுவாகச் சரிந்து கொண்டே வந்து இறுதியில் இந்தியப் பங்குச் சந்தை இன்று நஷ்டத்தில் முடிவுற்றது.

மும்பை பங்குச்சந்தையின் முக்கியக் குறியீடான சென்செக்ஸ் ஒரு கட்டத்தில் 180 புள்ளிகள் உயர்ந்திருந்தாலும், இறுதியில் 73.08 புள்ளிகள் அதாவது 021 சதவிகிதம் நஷ்டத்துடன் 35,246.27 என முடிவுற்றது. தேசியப் பங்குச் சந்தையின் நிஃப்ட்டி 25.15 புள்ளிகள் அதாவது 0.23 சதவிகிதம் குறைந்து 10,716.55-ல் முடிந்தது.

கச்சா எண்ணெய் விலை உயர்வினால் எனர்ஜி பங்குகள் முன்னேற்றம் கண்டதால் ஆசியச் சந்தைகள் இன்று பெரும்பாலும் பாசிட்டிவாக முடிந்தன.

இங்கிலாந்தின் மத்திய வங்கி இன்று தனது மானிட்டரி பாலிசியை அறிவிக்கவுள்ள நிலையில், ஐரோப்பிய பங்குச்சந்தைகள் நிதானமான தொடக்கத்தைக் கண்டு தற்போது நேற்றைய நிலையிலிருந்து பெரிய மாறுதல் ஏதுமின்றி பயணித்து வருகின்றன.

இந்நிலையில், இந்தியச் சந்தையில், முதலீட்டாளர்கள் ஒரு பாதுகாப்பான உணர்வோடு செயல்பட்டதால் பங்குகள் பெரிய ஆதரவைப் பெற இயலவில்லை.

மேலும், கச்சா எண்ணையின் தொடர்ந்த விலையுணர்வினால், பணவீக்கம் அதிகமாகக் கூடிய நிலை உருவாகியிருப்பது மட்டுமன்றி, ரூபாயின் மதிப்பு குறைவதாலும் நடப்புக் கணக்கில் பெரிய துண்டு விழும் அபாயம் இருப்பதாலும், சந்தையில் முதலீட்டாளர்கள் மனநிலை சற்று தொய்வுடனேயே இருந்தது.

மெட்டல், ரியல் எஸ்டேட், மருத்துவம், பவர் மற்றும் கேப்பிடல் கூட்ஸ் துறைப் பங்குகள் பெரும்பாலும் இறக்கத்திலேயே முடிந்தன.

ஆட்டோமொபைல் மற்றும் எப்.எம்.சி.ஜி துறைகளில் ஒரு கலப்படமான நிலை காணப்பட்டது. சில தகவல் தொழில் நுட்பம் மற்றும் ஆயில் துறை பங்குகள் மேலேறின.

ஃபெடரல் பேங்க் மற்றும் இந்தியன் பேங்க் பங்குகள், அவ்வங்கிகளின் ஜனவரி - மார்ச் மாதத்திய வருமான அறிக்கைகள் ஏமாற்றமளிக்கக்கூடியதாக இருந்ததால், முறையே 11 சதவிகிதம், எட்டு சதவிகிதம் சரிந்தன.

இன்று மும்பை பங்குச்சந்தையில் 775 பங்குகள் விலை உயர்ந்தும், 1891 பங்குகள் விலை குறைந்தும், 121 பங்குகள் முந்தைய விலைகளிலிருந்து மாற்றமில்லாமலும் முடிந்தன.

இன்று விலை அதிகரித்த பங்குகள் :

ஓ.என்.ஜி.சி  2.75%
பார்தி ஏர்டெல்  2%
எய்ச்சேர் மோட்டார்ஸ் 1.4%
டெக் மஹிந்திரா  1.3%
பாரத் பெட்ரோலியம்  1.2%
ஹிண்டால்க்கோ  1%
இமாமி 2.4%
எஸ்.பி.ஐ. லைஃப் இன்சூரன்ஸ் 2.3%

விலை குறைந்த பங்குகள் :

Dr ரெட்டி'ஸ் லபோரட்டரிஸ் 3.4%
இந்தியாபுல்ஸ் ஹௌசிங் பைனான்ஸ் 2.5%
டாடா மோட்டார்ஸ் 2.4%
சிப்லா 2.3%
பவர் கிரிட் 1.8%
சன் பார்மா 1.7%