வெளியிடப்பட்ட நேரம்: 09:30 (11/05/2018)

கடைசி தொடர்பு:09:30 (11/05/2018)

நீதிபதி கே.எம்.ஜோசப் நியமன விவகாரம் - இன்று கூடுகிறது உச்ச நீதிமன்ற கொலிஜியம்

நீதிபதி கே.எம். ஜோசப் நியமனம் தொடர்பான விவகாரம் பற்றி ஆலோசிக்க, இன்று கூடுகிறது உச்ச நீதிமன்ற கொலிஜியம்.

உச்சநீதிமன்றம்

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் உள்ள கொலிஜியம் குழுவில் இரு நீதிபதிகள் குறைவதால், மற்ற நீதிபதிகள் இணைந்து பிற மாநிலங்களில் உள்ள இரண்டு நீதிபதிகளின் பெயரைப் பரிந்துரைசெய்தனர். ஒருவர், இந்து மல்கோத்ரா. இவர், உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராகப் பணியாற்றினார். மற்றொருவர், கே.எம்.ஜோசப். கேரளாவைச் சேர்ந்த இவர், உத்தரகாண்ட் மாநில உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாகப் பணியாற்றிவருகிறார். கொலிஜியத்தின் பரிந்துரையை மத்திய அரசு ஏற்றால் மட்டுமே இவர்கள் பதவி உயர்வு பெறமுடியும். அதன்படி, கடந்த ஜனவரி மாதம் கொலிஜியம் இந்த இருவரையும் பரிந்துரைசெய்தது. பரிந்துரை செய்து மூன்று மாதங்களுக்கு மேல் ஆகியும் அதுபற்றி மத்திய அரசு எந்தத் தகவலையும் தெரிவிக்கவில்லை. இதனால், நீதித்துறைக்கும் மத்திய அரசுக்கும் இடையே மோதல் நிலவியது.

இதைத் தொடர்ந்து, கடந்த மாதம் கொலிஜியத்தின் பரிந்துரையை ஏற்ற மத்திய அரசு, இந்து மல்கோத்ரவை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க ஒப்புதல் வழங்கியது. அதே நேரத்தில், நீதிபதி கே.எம். ஜோசப் மீதான பரிந்துரையை நிராகரித்தது. இதற்கு விளக்கமளித்த மத்திய அரசு, ‘ஜோசப்பின் பதவி உயர்வு உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளில் நிர்ணயிக்கப்பட்ட அம்சங்களின் கீழ் வரவில்லை. மேலும், உயர் பதவிகளில் கேரள மாநிலத்துக்கு உரிய பிரதிநிதித்துவம் முன்னரே உள்ளதாகவும் தெரிவித்தது. ’இந்த நிராகரிப்பு, நீதித்துறையில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இந்த விவகாரம்குறித்து விவாதிக்க, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய கொலிஜியம் இன்று பிற்பகல் ஒரு மணியளவில் கூடுகிறது. அதில், மீண்டும் நீதிபதி கே.எம்.ஜோசப்பை பரிந்துரைசெய்வதா அல்லது தங்களின் பரிந்துரையைத் திரும்பப் பெறுவதா என்பதுகுறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.