உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கு - பா.ஜ.க எம்.எல்.ஏ., மீதான குற்றச்சாட்டு உறுதியானது

உன்னாவ் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சிங் மீதான குற்றத்தை உறுதி செய்துள்ளது சிபிஐ. 

உன்னாவ்

உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் என்ற பகுதியில், 17 வயது சிறுமி, பா.ஜ.க எம்.எல்.ஏ மற்றும் அவருடன் சேர்ந்தவர்கள் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கடந்த வருடம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகார் அளித்து ஒரு வருடமாகியும் குற்றவாளிகள்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், சமீபத்தில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்தயநாத் வீட்டின் முன் பாதிக்கப்பட்ட சிறுமி தற்கொலைக்கு முயன்றார். இது தொடர்பாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறுமியின் தந்தை, மர்மமான முறையில் உயிரிழந்தார். அதன்பின், இந்தப் பிரச்னை ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் அதிகமாகப் பேசப்பட்டது.

உன்னாவ் சிறுமிக்கு ஆதரவாகவும், பா.ஜ.க எம்.எல்.ஏ-வை கைதுசெய்யக் கோரியும், பல இடங்களில் போராட்டங்கள் நடந்தன. பின்னர், இந்த வழக்கை அலகாபாத் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்தது. நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு, குல்தீப் சிங் கைதுசெய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது. கடந்த சில நாள்களாக நடந்துவந்த விசாரணைக்குப் பின், குல்தீப் சிங் மீதான குற்றச்சாட்டை உறுதிசெய்துள்ளது, சிபிஐ. 

இதுகுறித்து சிபிஐ அதிகாரிகள் கூறுகையில்,  ‘ உத்தரப்பிரதேச பா.ஜ.க எம்.எல்.ஏ., குல்தீப் சிங்கை காப்பாற்றுவதற்காக அம்மாநில போலீஸார் முயன்றுள்ளனர். இதன் சான்றாக, அவரின் பெயரை முதல் தகவல் அறிக்கை மற்றும் குற்றப்பத்திரிகையில் சேர்க்கவில்லை. மேலும், அந்தச் சிறுமியின் ரத்த மாதிரி மற்றும் உடையைத் தடயவியல் துறைக்கு அனுப்பாமல் இருந்துள்ளனர்’ எனத் தெரிவித்துள்ளனர். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!