வெளியிடப்பட்ட நேரம்: 12:44 (11/05/2018)

கடைசி தொடர்பு:12:53 (11/05/2018)

ஒரே அணியில் பி.ஜே.பி - சி.பி.எம் கட்சிகள் - மேற்குவங்க பஞ்சாயத்துத் தேர்தலில் புது பஞ்சாயத்து!

ஒரே அணியில் பி.ஜே.பி - சி.பி.எம் கட்சிகள் - மேற்குவங்க பஞ்சாயத்துத் தேர்தலில் புது பஞ்சாயத்து!

அப்படியா என அதிர்ச்சியடையச் செய்திருக்கிறார்கள், மேற்குவங்க பி.ஜே.பி - சி.பி.எம் கட்சியினரில் ஒரு பிரிவினர். ஆம், பி.ஜே.பி-யினரும் சி.பி.எம் கட்சியினரும் ஒரே அணியாகச் சேர்ந்து பஞ்சாயத்துத் தேர்தலில் செயல்படுகின்றனர்.

மேற்குவங்கத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 1, 3 மற்றும் 5 ஆகிய தேதிகளில் தேர்தல் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் பயங்கர வன்முறையில் ஈடுபட்டனர் என்று பிரச்னை ஏற்பட்டது. எதிர்க்கட்சியினர் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் முறையிட்டதை அடுத்து, மே 14-ம் தேதியன்று ஒரே கட்டமாகத் தேர்தலை நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கிடையில், மொத்தமுள்ள 58,692 பதவிகளில் 20,076 இடங்களில் (34.2 சதவிகிதம்) திரிணாமூல் காங்கிரஸ் கட்சியானது போட்டியில்லாமல் வெற்றிபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் நடவடிக்கைகளைக் கண்டித்தே, எதிரெதிர்த் தரப்புகளான சி.பி.எம், பி.ஜே.பி கட்சியினர் ஒன்றுசேர வேண்டியதாகிவிட்டது என இரு தரப்புமே ஞாயப்படுத்துகிறார்கள். 

பி ஜே பி

ஆளும் கட்சியின் தேர்தல் வன்முறைகளுக்குக் கண்டனம் தெரிவித்து நாடியா மாவட்டத்தின் கரிம்பூர்-ரனகட் பகுதியில் கடந்த மாதக் கடைசியில் பெரிய ஊர்வலம் நடந்தது. அதில் சி.பி.எம் கட்சியினரும் பி.ஜே.பி-யினரும் கூட்டாகப் பங்கேற்றுள்ளனர். இரு கட்சிகளின் கொடிகளையும் ஏந்தியபடி ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுள்ள காட்சி ஊடகங்களில் பதிவாகியுள்ளது. 

``கட்சியின் அடிமட்ட அளவில் தேர்தல் தொடர்பாக பரஸ்பரப் புரிந்துகொள்ளல் ஏற்பட்டுள்ளது; நிறைய இடங்களில் கிராமத்தில் ஒருவருக்கொருவர் போட்டியிட விரும்புகின்றனர்; அதை மதித்தாக வேண்டும். ஆனால், இதற்கும் கட்சியின் கொள்கைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை" என நாடியா மாவட்ட சி.பி.எம் கட்சியின் மாவட்டச்செயலாளர் சுமித் டே கூறியுள்ளார். 

இரு கட்சியினரும் இணைந்து பங்கேற்ற பேரணி பற்றி அதில் பங்கேற்ற சிபிஎம் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினரும் சட்டமன்ற உறுப்பினருமான ராமா பிஸ்வாஸ் கூறுகையில்,``திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் வன்முறைக்கு எதிராக கிராமத்தினரே அந்தப் பேரணியை நடத்தினர்” என்று விளக்கம் அளித்தார். மேற்குவங்க பி.ஜே.பி தலைவர் திலிப் கோஷ்,” ஆமாம். திரிணாமூல் கட்சியின் வன்முறையை எதிர்த்து எங்கள் கட்சியினர் அழைப்புவிடுத்த பேரணியில் சி.பி.எம் கட்சியினர் பங்கேற்றனர் ” என்று கூறினார்.  
கிராமப் பஞ்சாயத்துகள் அளவில் சி.பி.எம் கட்சியினர் சுயேச்சைகளாக நிற்கும் இடங்களில், பி.ஜே.பி சார்பில் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை; இதைப்போலவே பி.ஜே.பி-க்காக சி.பி.எம் கட்சியும் வேட்பாளர்களை நிறுத்தவில்லை என்பதே நாடியா மாவட்டத்தில் ‘கமுக்கக் கூட்டணி’அரசியலை உறுதிப்படுத்தியது. ஆனால் சி.பி.எம் கட்சியின் தரப்பில் தெளிவாகவும் தெளிவில்லாமலுமாக ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கப்பட்டது. 

சி.பி.எம் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் சுஜன் சக்ரவர்த்தி,” எங்கள் கட்சியின் கொள்கை தெளிவானது. திரிணாமூல் மற்றும் பி.ஜே.பிதிலிப் கோஷ் இரு கட்சிகளிடமிருந்தும் சமதொலைவிலேயே விலகிநிற்கிறோம். ஆனால், சில இடங்களில், எங்கள் தரப்பினர் மற்றவர்களுடன் கைகோர்த்துச் செயல்படுகின்றனர். அவர்களிடம் தொடர்ச்சியாகப் பேசிக்கொண்டும் புரியவைத்துக்கொண்டும் இருக்கிறோம். ஏன் இப்படி என்றால் ஆளும் கட்சியின் வரலாறுகாணாத வன்முறையும் பயங்கர ஆட்சியுமே காரணம் ஆகும். எங்களுக்கு வேட்பாளர் இல்லாத இடங்களில் நாங்கள் சுயேச்சைகளுக்கு ஆதரவளிக்கிறோம். ஒட்டுமொத்தமாக, பி.ஜே.பி-யும் திரிணாமூல் கட்சியும் ஒன்றுக்கொன்று இடத்தை உருவாக்கிக்கொள்வதற்காக ஆட்டம் காட்டுகின்றன” என்றார். 

ஆனால், திரிணாமூல் கட்சியின் பொதுச்செயலாளர் பர்த்தா சட்டர்ஜியோ, “ பல மாவட்டங்களில் இப்படியான நிலைமையைப் பார்த்துக்கொண்டுதான் வருகிறோம்; இதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை. பி.ஜே.பி-யை எதிர்த்து நாங்கள் மட்டுமே உறுதியாகப் போராடிக்கொண்டிருக்கிறோம்” என்று கூறினார். 

இந்த விவகாரம் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, சி.பி.எம் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, 'இப்படியான தகவல்கள் முழுக்கமுழுக்கப் பொய்' என ஒரேயடியாக மறுத்து, ட்விட்டர் தளத்தில் கருத்துவெளியிட்டார். 

அதற்கடுத்தும் சி.பி.எம் கட்சி மீதான விமர்சனங்கள் ஓயாததால், மேற்கு வங்க மாநில சி.பி.எம் கட்சியின் செயலாளர் சூர்யகாந்த் மிஸ்ரா, தனியாக ஒரு விளக்க அறிக்கையை வெளியிட்டார். 

அதில், "கடந்த நான்கு ஆண்டுகளாக நாங்கள் வலியுறுத்தும் முழக்கமே, ’பி.ஜே.பி-யை அகற்றுவோம்; இந்தியாவைக் காப்பாற்றுவோம்; திரிணாமூலை அகற்றுவோம்; மேற்குவங்கத்தைக் காப்போம்’ என்பதுதான். எனவே, அந்தக் கட்சிகளில் ஒன்றை ஆதரிக்க மற்றொன்றுடன் கூட்டுவைப்பது எனும் பேச்சுக்கே இடமில்லை. பி.ஜே.பி-வுடனோ எதிர்முகாமுடனோ தொடர்புவைக்கும் யாரும் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்கள். இதன்படி இரண்டு பேரை அண்மையில் நீக்கியிருக்கிறோம். இதில் சமரசத்துக்கு இடமே இல்லை. கட்சியின் ஆதரவுபெற்ற ஆனால், கட்சியின் உறுப்பினர் அல்லாதவர்கள் பி.ஜே.பி-வுடன் அரசியல் உறவு வைத்திருப்பது தெரியவந்தால் ஒருவேளை அவர்கள் வெற்றிபெற்றாலும்கூட அவருடனான உறவை நாங்கள் முறித்துக்கொள்வோம்” என்று சூர்யகாந்த் மிஸ்ரா கூறியுள்ளார். 


டிரெண்டிங் @ விகடன்