`ஸ்ரீதேவி மரணம் எதிர்பாராத ஒன்று' - இயக்குநரின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம் | Supreme Court dismissed the petition seeking a probe into death of actor Sridevi

வெளியிடப்பட்ட நேரம்: 12:38 (11/05/2018)

கடைசி தொடர்பு:12:51 (11/05/2018)

`ஸ்ரீதேவி மரணம் எதிர்பாராத ஒன்று' - இயக்குநரின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

நடிகை ஸ்ரீதேவி எதிர்பாராத விதமாகக் கடந்த பிப்ரவரி மாதம் உயிரிழந்தார். இவரின் மரணம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 

ஸ்ரீதேவி

ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் சகோதரி மகனும் நடிகருமான மோகித் மார்வா திருமணம், கடந்த பிப்ரவரி மாதம் துபாயில் நடந்தது. அதில் பங்கேற்க தனது குடும்பத்துடன் ஸ்ரீதேவி சென்றிருந்தார். அங்குள்ள எமிரேட்ஸ் டவர் ஹோட்டலில் தங்கியிருந்தார். வெளியில் செல்வதற்கு ரெடியாகி வருவதாகச் சொல்லிவிட்டு, ஸ்ரீதேவி பாத்ரூமுக்குச் சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. சந்தேகமடைந்த போனி கபூர், கதவைத் தட்டியுள்ளார். உள்ளே இருந்து சத்தம் வரவில்லை. பின்னர், ஹோட்டல் உதவியாளர்களுடன் கதவை உடைத்துப் பார்த்தபோது, கழிவறையில் மயக்கமடைந்த நிலையில் அவர் கிடந்துள்ளார். மருத்துவமனையில் அவரை சோதித்த மருத்துவர்கள், முன்னரே அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
 
அதன் பின் துபாய் அரசு நீண்ட நடைமுறைகளை முடித்த பிறகு ஸ்ரீதேவியின் உடல் இந்தியா கொண்டு வரப்பட்டு தகனம் செய்யப்பட்டது. இவரது மறைவில் சந்தேகம் இருப்பதாக இயக்குநர் சுனில் சிங் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இன்று நடைபெற்ற வழக்கின் விசாரணையில், ஸ்ரீதேவி மரணம் எதிர்பாராத விதமாகவே நடைபெற்றது என்று கூறி இந்த வழக்கை தள்ளுபடி செய்தனர் நீதிபதிகள்.