வெளியிடப்பட்ட நேரம்: 14:00 (11/05/2018)

கடைசி தொடர்பு:14:00 (11/05/2018)

தன் கண்முன்னாலேயே பா.ஜ.க-வினர்மீது தாக்குதல்! தெலுங்கு தேச கட்சியினரால் அதிர்ந்துபோன அமித்ஷா

திருப்பதி சென்றுள்ள அமித்ஷாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தெலுகு தேசம் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். மேலும், அங்கிருந்த பா.ஜ.க-வினரையும் தாக்கியுள்ளனர்.  

அமித்ஷா

நாளை, கர்நாடகாவில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷா, திருப்பதி கோயிலுக்குச் சென்றிருந்தார். அங்கு அவருக்குச் சிறப்பு மரியாதைகள் வழங்கப்பட்டன. அமித் ஷா திருப்பதி வந்திருப்பதை அறிந்துகொண்ட தெலுங்கு தேசம் கட்சியினர், அங்குள்ள அலிப்பிரியில் வந்து குவிந்தனர். பிறகு ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்று கோஷமிடத் தொடங்கினர். 

அமித் ஷாவின் கார் திருப்பதி கேட்டை தாண்டியதும், அங்கிருந்த தெலுங்கு தேசம் கட்சியினரும், பக்தர்களும் அவருக்கு எதிரான கோஷங்களை எழுப்பி, போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், அமித் ஷாவின் காரை பின் தொடர்ந்த பா.ஜ.க-வினர் மீது தெலுங்கு தேசம் கட்சியினர் தாக்குதல் நடத்தினர். உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர், போராட்டக்காரர்களைக் கலைத்தனர்.  நீண்ட நாள்களுக்குப் பிறகு திருப்பதி வந்த அமித் ஷா, மிகவும் கசப்பான அனுபவங்களுடன் ஆந்திராவை விட்டு வெளியேறினார்.