வெளியிடப்பட்ட நேரம்: 18:42 (11/05/2018)

கடைசி தொடர்பு:18:42 (11/05/2018)

சந்தையில் இன்று நல்ல முன்னேற்றம்

ஒரு நல்ல தொடக்கத்திற்குப் பிறகு வெகுநேரம் குறுகிய பாதையிலேயே பயணித்துக் கொண்டிருந்த இந்திய பங்குச் சந்தை கடைசி ஒரு மணி நேரத்தில் நன்கு முன்னேறி நல்ல லாபத்துடன் சிறப்பான முறையில் முடிவுற்றது. 

மும்பை பங்குச் சந்தையின் முக்கிய குறியீடான சென்செக்ஸ் 289.52 புள்ளிகள் அதாவது 0.82 சதவிகிதம் உயர்ந்து 35,535.79 என முடிவுற்றது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்ட்டி 89.95 புள்ளிகள் அதாவது 0.84 சதவிகிதம் உயர்ந்து 10,806.50-ல் முடிந்தது.

அமெரிக்காவில் பணவீக்கம் எதிர்பார்த்ததை விட குறைவான அளவே உயர்ந்திருப்பது அந்நாட்டில் வட்டிவிகித உயர்வினை துரிதப்படுத்த வாய்ப்பில்லை என்பதனால் நேற்றைய வர்த்தகத்தில் அமெரிக்கச் சந்தையில் பங்குகள் முன்னேற்றம் கண்டன. மேலும், அமெரிக்கஅதிபர் டொனால்டு டிரம்ப்  - வட கொரியா அதிபர் கிம் ஜோங் ஊன் இவர்களின் பேச்சு வார்த்தை கூடிய விரைவில் நடக்கவிருப்பதும் அங்கு ஒரு பாசிட்டிவான முடிவுக்கு வழி வகுத்தது.

இதை தொடர்ந்து ஆசியச் சந்தைகளில் இன்று பெரும்பாலும் உற்சாகமான மனநிலை இருந்தது.

இருப்பினும், சில முக்கிய கரென்சிகளுக்கெதிராக அமெரிக்க டாலரின் மதிப்பு வலுவிழந்ததாலும், கச்சா எண்ணெய் விலை சற்று இறங்கியதாலும், ஐரோப்பியச் சந்தைகளில் ஒரு தொய்வு காணப்பட்டது.

இந்நிலையில், கச்சா எண்ணெய் சிறிது விலையிறங்கியதாலும், ரூபாயின் மதிப்பு சற்று உயர்ந்ததாலும் இந்தியச் சந்தையில் இன்று பங்குகளை வாங்க முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டினர். சில சிறப்பான காலாண்டு நிதி அறிக்கைகளும் சந்தையின் இன்றைய உயர்வுக்கு வழி வகுத்தன.

நடக்கவிருக்கும் கர்நாடக சட்ட சபைக்கான தேர்தல் குறித்தும், இன்று வெளிவரவிருக்கும் பணவீக்கம் பற்றிய அறிக்கை குறித்தும் ஒரு பாதுகாப்பான உணர்வு இருந்தாலும், சந்தையில் இன்று ஒரு ஸ்திரமான தன்மை இருந்ததைக் காணமுடிந்தது.

மெட்டல், ஆயில், வங்கி மற்றும் கேப்பிடல் கூட்ஸ் துறைப் பங்குகள் முன்னேற்றம் கண்டன. தகவல் தொழில் நுட்பம் மற்றும் எப்.எம்.சி.ஜி துறைகள் சேர்ந்த சில பங்குகள் முன்னேறின. மருத்துவம், ஆட்டோமொபைல் மற்றும் ரியல் எஸ்டேட் துறை பங்குகள் வணிகத்தில் பெரும்பாலும் ஒரு கலப்படமான நிலை இருந்தது. 

ரிலையன்ஸ் ஜியோ சந்தாதார்களுக்கு மிகக் குறைந்த கட்டணத்தை அந்நிறுவனம் அறிவித்ததையடுத்து, ஏனைய டெலிகாம் நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்தன.

இன்று விலை அதிகரித்த பங்குகள் :

ஏசியன் பெயின்ட்ஸ் 5.5%
ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் 3.5%
பாரத் பெட்ரோலியம் 2.5%
வேதாந்தா 2.6%
இந்தியாபுல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் 2.4%
டாடா ஸ்டீல் 2.1%
அல்ட்ராடெக் சிமென்ட் 2%
லார்சென் & டூப்ரோ 1.7%
கண்டைனர் கார்பொரேஷன் 3.4%
சன் டீ.வி  2.8%
பேங்க் ஆஃப் பரோடா 2.7%
அரபிந்தோ பார்மா 2.65

விலை இறங்கிய பங்குகள் :

பார்தி ஏர்டெல் 6.3%
ஐடியா செல்லுலார்  11:6%
பிராக்டர் & காம்பிள் 5.4%
பஞ்சாப் நேஷனல் பேங்க் 2.8%
சன் பார்மா 5.3%

இன்று மும்பை பங்குச் சந்தையில் 1123 பங்குகள் விலை உயர்ந்தும், 1542 பங்குகள் விலை குறைந்தும், 140 பங்குகள் முந்தைய விலைகளிலிருந்து மாற்றமில்லாமலும் முடிந்தன.