வெளியிடப்பட்ட நேரம்: 14:02 (12/05/2018)

கடைசி தொடர்பு:14:02 (12/05/2018)

அன்று பெப்சி, கோக்... இன்று வால்மார்ட்... பதறும் வணிகர்கள்!

இந்திய ஆன்லைன் வர்த்தகச் சந்தையில் ஃப்ளிப்கார்ட் - வால்மார்ட் இடையேயான ஒப்பந்தம் பரபரப்பாகப் பேசப்படும் நிலையில், வால்மார்ட்டின் வருகையால் இந்தியாவின் சில்லறை வர்த்தகம் மிகக் கடுமையாக பாதிக்கப்படும் என்றும், 'பெப்சி, கோக் பாணியில் தங்களை வால்மார்ட் ஒழித்துக் கட்டிவிடும் என்றும் இந்திய சில்லறை வணிகர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

ந்திய ஆன்லைன் வர்த்தகச் சந்தையில் ஃப்ளிப்கார்ட் - வால்மார்ட் இடையேயான ஒப்பந்தம் பரபரப்பாகப் பேசப்படும் நிலையில், வால்மார்ட்டின் வருகையால் இந்தியாவின் சில்லறை வர்த்தகம் மிகக் கடுமையாகப் பாதிக்கப்படும் என்றும், `பெப்சி, கோக் பாணியில் தங்களை வால்மார்ட் ஒழித்துக் கட்டிவிடும் என்றும் இந்தியச் சில்லறை வணிகர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

ஃப்ளிப்கார்ட்

எனவே, இந்த ஒப்பந்தத்தைச் செயல்படுத்த தடை விதிக்குமாறும் மத்திய அரசை இந்திய சில்லறை வணிகர்கள் ஒருபுறம் வலியுறுத்தி வரும் நிலையில், விவசாயிகள், பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் ஆர்எஸ்எஸ்ஸின் இணை அமைப்பான ஸ்வதேஷி ஜக்ரான் மஞ்ச் உள்ளிட்டவையும் இந்த ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது இந்த விவகாரத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

வால்மார்ட் - ஃப்ளிப்கார்ட் ஒப்பந்தம்

நுகர்வோர்கள் சமீபகாலமாக ஆன்லைன் வர்த்தகத்துக்கு மாறிவருவதால், அதில் கோலோச்சும் அமேசான் நிறுவனத்துடன் போட்டி போட முடியாமல் உலகின் மிகப்பெரிய சில்லறை வர்த்தக நிறுவனமான வால்மார்ட் திணறி வருகிறது. அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாதான் மிகப்பெரிய சில்லறை வர்த்தகத்துக்கான சந்தையைக் கொண்டுள்ளது.

இந்த நிலையில், இந்தியாவின் ஆன்லைன் வர்த்தகத்தில் சுமார் 40 சதவிகித சந்தை பங்களிப்பைக் கொண்டுள்ள ஃப்ளிப்கார்ட் நிறுவனம், தனது பங்குகளை விற்கத் திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கியது. இதனையடுத்து இந்தியாவில் ஃப்ளிப்கார்ட்டுக்குக் கடும் போட்டியாக விளங்கி வந்த அமேசான் நிறுவனம், அந்த நிறுவனத்தின் 60 சதவிகிதத்திற்கும் அதிகமான பங்குகளை வாங்கி அதனை முடக்க முடிவு செய்ததாகத் தகவல் வெளியானது. இந்தச் சூழ்நிலையில்தான் வால்மார்ட், இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு இந்தியச் சந்தையில் தடம் பதிக்கத் திட்டமிட்டது. ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் மொத்தச் சந்தை மதிப்பு சுமார் 20 பில்லியன் டாலர் என அந்த நிறுவனம் நிலையில், ஃப்ளிப்கார்ட்டின் பெரும் பகுதி பங்குகளை வாங்கி, அதனைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர வால்மார்ட் முடிவு செய்தது.

இதற்கான பேச்சுவார்த்தை இருதரப்புக்கும் இடையே மாதக் கணக்கில் நீடித்து, இறுதியில் ஒருவழியாகப் பேரம் முடிவடைந்து, ஒப்பந்தம் கையெழுத்தானதாக கடந்த புதன்கிழமையன்று இரவில் அறிவிக்கப்பட்டது. அதன்படி ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் 77 சதவிகித பங்குகளைச் சுமார் ஒரு லட்சத்து 7 ஆயிரம் கோடி ரூபாயை (16 பில்லியன் டாலர்) கொடுத்து அந்த நிறுவனத்தை வால்மார்ட் கையகப்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து ஃப்ளிப்கார்ட் நிறுவனர்களில் ஒருவரான சச்சின் பன்சால், தன்னிடமுள்ள 5.96 சதவிகித ஃப்ளிப்கார்ட் பங்குகளை 1.23 பில்லியன் டாலருக்கு விற்றுவிட்டு அந்த நிறுவனத்திலிருந்து வெளியேறினார்.

வால்மார்ட் சிஇஓ மெக்மில்லன் உடன் ஃப்ளிப்கார்ட் நிறுவனர் பின்னிபன்சால்

இந்தியாவில் அடியெடுத்து வைக்கும் வால்மார்ட்

வால்மார்ட் - ஃப்ளிப்கார்ட் இடையேயான தற்போதைய ஒப்பந்தம், கடந்த 20 ஆண்டுகளில் வால்மார்ட் செய்துகொண்ட ஒப்பந்தங்களில் மிகப் பெரிய ஒப்பந்தமாகப் பார்க்கப்படுகிறது. மேலும், அடுத்த பத்தாண்டுகளில் சுமார் 200 பில்லியன் டாலர் சந்தை மதிப்பைக் கொண்டதாக இருக்கும் இந்திய ஆன்லைன் வர்த்தகச் சந்தையில், இதன் மூலம் வால்மார்ட் அடியெடுத்து வைத்துள்ளது.

எதிர்கால அடிப்படையில் பார்க்கும்போது வால்மார்ட்டுக்கு இது ஓர் அருமையான வாய்ப்பாக உள்ள நிலையில், இந்திய தொழில் வர்த்தகக் கூட்டமைப்பும் ( அசோசெம்) இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளது. ஆனால், விவசாயிகள், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் ஆர்எஸ்எஸ்ஸின் இணை அமைப்பான ஸ்வதேஷி ஜக்ரான் மஞ்ச் உள்ளிட்டவை இந்த ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

அசோசெம் தலைவர் கிரண் மஜும்தார், இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் வெற்றியாகவே இதை தாம் பார்ப்பதாகக் கூறியுள்ள நிலையில், அகில இந்திய வணிகர்கள் கூட்டமைப்போ (The Confederation of All India Traders - CAIT) " ஆன்லைன் வர்த்தகம் மூலம் இந்தியாவின் சில்லறை வர்த்தகத்தில் வால்மார்ட் ஆதிக்கம் செலுத்தி, அதைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சிதான் இது" என்று குற்றம் சாட்டியுள்ளது.

இந்த ஒப்பந்தத்தை விரிவாக ஆராய்ந்த பின்னர் மத்திய அரசிடமோ அல்லது போட்டி ஒழுங்குமுறை ஆணையத்திடமோ முறையிடுவோம். அல்லது நீதிமன்றத்துக்கும் செல்வோம். ஏற்கெனவே ஜிஎஸ்டி-யால் இந்தியாவில் சில்லறை வர்த்தகர்கள் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டு வரும் நிலையில், இந்த ஒப்பந்தம் எங்களுக்கு மேலும் கடும் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

'இந்திய வர்த்தகர்களுக்குப் பாதிப்பு'

இந்திய ஆன்லைன் வர்த்தகச் சந்தையில் வால்மார்ட் நுழைந்தால், அது நிச்சயம் மற்ற இந்திய ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களையும், அவர்களின் சில்லறை வர்த்தகச் சந்தையையும் முடக்கிவிடும். சம நிலையற்ற களத்தில் சந்திக்கும் இந்தப் போட்டி இந்தியச் சில்லறை வர்த்தகர்களுக்குக் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். இதில் ஆதாயமடையபோவது தொழில் முதலீட்டாளர்கள், புரொமோட்டர்கள் மற்றும் பங்குகளில் முதலீடு செய்பவர்கள்தானே தவிர நாட்டுக்கு எவ்வித ஆதாயமும் ஏற்படப்போவதில்லை.

வால்மார்ட்

இது தொடர்பாக ஓர் ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கப்படும் வரை இந்த ஒப்பந்தத்தைச் செயல்படுத்துவதை தற்காலிகமாக அரசு ஒத்தி வைக்க வேண்டும். அத்துடன் இந்த ஒப்பந்தத்தையும் முழுமையாக ஆராய வேண்டும்" என்று அகில இந்திய வணிகர்கள் கூட்டமைப்பின் செயலாளர் பிரவீன் கண்டேல்வால் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கும் ஆர்எஸ்எஸ்

இந்த நிலையில், இந்த ஒப்பந்தத்துக்கு எதிராக வியாழக்கிழமையன்று டெல்லியில் போராட்டம் நடத்திய ஆர்எஸ்எஸ்ஸின் இணை அமைப்பான ஸ்வதேஷி ஜக்ரான், ``வால்மார்ட் நிறுவனம் பின்வாசல் வழியாக இந்தியாவுக்குள் நுழைகிறது. பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக தலையிட்டு, தேசத்தின் நலனைப் பாதுகாக்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பு மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், ``வால்மார்ட்டின் வருகை இந்தியாவில் உள்ள சிறு மற்றும் நடுத்தர வர்த்தகத் தொழில் நிறுவனங்களையும், சிறிய கடைகளையும் அழித்துவிடும். ஏற்கெனவே இந்தச் சிறிய நிறுவனங்களும் கடைகளும் தங்களது இருப்பைத் தக்கவைக்க போராடிக் கொண்டிருக்கும் நிலையில், வால்மார்ட்டின் வருகை மேலும் பிரச்னைகளை உருவாக்கி விடும்" எனக் கூறியுள்ளது.

ஒரு கோடி பேருக்கு வேலை வாய்ப்பா?

இந்த நிலையில் வால்மார்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டக் மேக்மில்லன், டெல்லியில் வியாழக்கிழமையன்று குறிப்பிட்ட சில பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவரிடம், வால்மார்ட் வேலை வாய்ப்பைப் பெருக்கும் என்று கூறுவது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ``இணையவழி வர்த்தக வெளியில் எவ்வளவு வேலை வாய்ப்புகள் உருவாகும் எனத் துல்லியமாக கணித்துக் கூறுவது கடினம். ஆனாலும் பல லட்சக்கணக்கான நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகள் உருவாகும் என மூன்றாம் தரப்பு ஆய்வு தெரிவிக்கிறது.

மேலும், இனி வரும் ஆண்டுகளில் இந்தியாவில் 1 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில் இவ்வளவு காலத்துக்குள் இந்த வாய்ப்பு உருவாகும் எனக் காலநிர்ணயம் செய்து கூற முடியாது. அதற்கான ஆய்வு எங்களிடம் உள்ளது. வேலை வாய்ப்பு என்பது கம்பெனியில் மட்டுமல்லாது, ஃப்ளிப்கார்ட் தளத்தில் தங்கள் பொருள்களை விற்பனை செய்கிற வினியோகஸ்தர்களிடமும் பெருகும். வால்மார்ட் 90 சதவிகிதத்துக்கும் மேலான பொருள்களை உள்நாட்டில், உள்ளூரில் வாங்குகிறது" என்று தெரிவித்தார்.

சங்கடத்தில் பா.ஜனதா

இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக கருத்து எதுவும் தெரிவிக்க வேண்டாம் என அதிகாரிகளை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. பா.ஜனதாவுக்கு வெற்றி வாய்ப்புள்ள முக்கியமான தொகுதிகளில் சிறு வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் கணிசமாக இருப்பதால், அவர்களையும் பகைத்துக் கொள்ள முடியாது. அதே சமயம் `அந்நிய முதலீட்டை வரவேற்கிறோம்' என்ற இந்தியாவின் இமேஜை தூக்கிப்பிடிக்க வேண்டிய கட்டாயமும் மோடிக்கு இருக்கிறது. எனவேதான் இந்த விவகாரத்தில் மத்திய அரசு தரப்பில் மௌனம் காக்கப்படுகிறது. ஆனாலும், இந்த ஒப்பந்தம் அரசியல் ரீதியாக பா.ஜனதாவுக்குச் சங்கடத்தைத்தான் ஏற்படுத்தும் எனலாம்.

போராட்டம்

`மேக் இன் இந்தியாவா... மேக் இன் இந்தியாவா? 

அதற்கான ஆரம்பம் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூலம் தொடங்கி விட்டது. இது தொடர்பாக மோடி அரசைக் கடுமையாகச் சாடியுள்ள அக்கட்சி, ``எதிர்க்கட்சியாக இருந்தபோது இதுபோன்ற முதலீடுகளுக்கு எதிராகக் கூக்குரலிட்ட பா.ஜனதா, தற்போதுதான் அளித்த வாக்குறுதிக்கு எதிராகச் செயல்படுகிறது. இந்திய சில்லறை வர்த்தகத் துறையால் சுமார் 4 கோடி பேர் நேரடி வேலை வாய்ப்பு பெறுகின்றனர். ஆனால், வால்மார்ட்டின் வருகை அந்த வேலை வாய்ப்பை அழித்து விடும். மோடியின் `மேக் இன் இந்தியா' ( இந்தியாவில் உற்பத்தி செய்யும்) திட்டம் தற்போது `மேக் ஃபார் இந்தியா' ( இந்தியாவுக்காக உற்பத்தி செய்யும்) திட்டமாக மாறிவிட்டது. எனவே, இந்திய சில்லறை வர்த்தகத் துறையில் நேரடி அந்நிய முதலீட்டைக் கடுமையாக எதிர்க்கிறோம்" " எனக் கூறியுள்ளது.

=============================================================

`பெப்சி, கோக் பாணியில் வால்மார்ட் ஆதிக்கம் செலுத்தும்'

இதனிடையே தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜாவிடம் இது தொடர்பாக நாம்விக்கிரமராஜா பேசியபோது, ``சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்க வேண்டாம் என ஏற்கெனவே மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் வேண்டுகோள் விடுத்திருந்தோம். ஆனால், மத்திய அரசு எங்களின் வேண்டுகோளைக் கண்டுகொள்ளவில்லை. தற்போது ஃப்ளிப்கார்ட்டின் 77 சதவிகித பங்குகளை வாங்கியதன் மூலம் இந்தியாவில் பின்வாசல் வழியாக வால்மார்ட் நுழைந்துள்ளது. இதனால், அந்நிய சக்திகளின் ஆதிக்கம் ஏற்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்துக்குப் பின்னரும் 8,000 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக ஃப்ளிப்கார்ட் கூறும் நிலையில், சுமார் 1 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான விலை கொடுத்து அதன் பங்குகளை வாங்கி இந்தியாவில் நுழையும் வால்மார்ட், லாபம் பார்க்க முயலுமா அல்லது நஷ்டத்தை விரும்புமா? நிச்சயம் லாபம் பார்க்கத்தான் நினைக்கும். எனவே, இது சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிக்கும் யுக்திதான். கோக், பெப்சி போன்ற நிறுவனங்கள் எப்படி இந்தியச் சந்தையில் நுழையும்போது, குறைந்த விலையில் குளிர்பானங்களை விற்று, இந்திய குளிர்பான நிறுவனங்களை அழித்துவிட்டு, பின்னர் குளிர்பானத்தின் விலையையும் ஏற்றி, விற்பனையில் ஏகபோகமாக ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியதோ அதேபோன்றுதான் வால்மார்ட்டும் செய்யும். ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு என்பதெல்லாம் இந்த விவகாரத்தைத் திசை திருப்பும் செயல்.

மத்திய அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்காவிட்டால், விரைவிலேயே வணிகர்கள் சார்பில் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுப்போம்" என எச்சரித்தார்.

================================================================

நீங்க எப்படி பீல் பண்றீங்க