வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (12/05/2018)

கடைசி தொடர்பு:16:20 (12/05/2018)

மாணவனின் உயிரைப் பறித்த 300 ரூபாய்

ரூ.300 க்காக மாணவனை கல்லூரி நிர்வாகம் தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. இந்த அதிர்ச்சியில் மாணவன் உயிரிழந்தார்.

போராட்டம்

மத்திய பிரதேச மாநிலம் சாத்னா பகுதியைச் சேர்ந்தவர் மோகன்லால் இவர், அங்குள்ள தனியார் கல்லூரியில் கணினி அறிவியல் துறையில் படித்து வந்தார். இந்த நிலையில், நேற்று திடீரென அவர் உயிரிழந்தார். 

இதுகுறித்து அவரது உறவினர்கள் கூறுகையில், மோகன்லால் தேர்வுக் கட்டணமாக ரூ.25,700 செலுத்தியிருக்கிறார். ரூ. 300 குறைவாகச் செலுத்தியதாகக் கூறி அவரைக் கல்லூரி நிர்வாகம் தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. இதனால் மன வேதனையில் காணப்பட்டார். மிகவும் பதற்றமாகவும் இருந்தார். தேர்வெழுத முடியாததால் தனது எதிர்கால வாழ்க்கை பாழாகி விட்டது என்று நினைத்துப் புலம்பிக் கொண்டிருந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த மோகன்லால், மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார் என்றனர். 

போராட்டம்

இதுகுறித்து கல்லூரி நிர்வாகத் தரப்பினர் கூறுகையில், `மாணவர் மோகன்லால் மரணம் எங்களுக்கு அதிர்ச்சியளிக்கிறது. அவரது மரணத்துக்குத் தேர்வுக் கட்டணம் காரணமில்லை. தேர்வுக் கட்டணத்தை முழுமையாகத்தான் வசூல் செய்வோம். அப்படியிருக்கையில் 300 ரூபாய்க்காக தேர்வு எழுத அனுமதிக்கவில்லை' என்று சொல்வது உண்மைக்குப் புறம்பானது என்றனர். 

இந்தச் சம்பவம் தொடர்பாக மத்திய பிரதேச மாநில போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். இதற்கிடையில் மோகன்லால் மரணத்துக்கு நீதி கேட்டு  கல்லூரி நிர்வாகத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் இறங்கியுள்ளனர் பொதுமக்கள். போராட்டத்தில் குதித்தவர்களுடன் போலீஸார் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பிறகு மக்கள், போராட்டத்தைக் கைவிட்டுவிட்டு கலைந்து  சென்றனர்.