Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

தமிழக விவசாயிகளை அரவணைத்த கன்னட மக்கள்! - கர்நாடகத் தேர்தல் பிரசாரத்தில் நடந்த ருசிகரம்

கர்நாடகத் தேர்தல்

Tiruppur: 

ர்நாடக சட்டசபைத் தேர்தலில் விவசாயக் கட்சியைச் சேர்ந்த வேட்பாளருக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்த தமிழக விவசாயிகளை கன்னட மக்கள், ஆரத்தழுவி அரவணைத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மாண்டியா மாவட்டத்தில் இந்த ருசிகர சம்பவம் நடந்தேறியது.

காவிரி விவகாரம் வெடிக்கும்போதெல்லாம் கர்நாடகாவில் முதலில் வரிந்துகட்டிக்கொண்டு போராட்டக்களத்தில் இறங்குவது மாண்டியா மாவட்ட அரசியல்வாதிகள்தாம். காவிரிப் பிரச்னையில் ஆக்ரோஷமாகவும், அதிரடியாகவும் போராட்டத்தை முன்னெடுக்கும் மாண்டியா மாவட்டத்தின் மேலக்கோட்டை தொகுதியில், 2013- ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் கே.எஸ் புத்தன்னையா. விவசாயியான இவர், சர்வோதயா கர்நாடக பக்‌ஷா என்ற கட்சிச் சார்பில் போட்டியிட்டார். அந்தத் தொகுதியில் மிகுந்த செல்வாக்குப் பெற்ற கே.எஸ் புத்தன்னையா, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மாரடைப்பால் காலமானார். அவர் மீது தொகுதி மக்கள் வைத்திருந்த மரியாதையும், தொகுதியில் அவருக்கு இருந்த செல்வாக்கும் இப்போது அவரது மகன் தர்ஷன் புத்தன்னையாவை இந்தச் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வைத்துவிட்டது.

கர்நாடகத் தேர்தல்

அரசியலில் துளியும் அனுபவமில்லாமல், அமெரிக்காவில் பணியாற்றிக்கொண்டிருந்த தர்ஷன், தன் தந்தை மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கைக்காகவும், விவசாயிகள் கொடுத்த அழுத்தம் காரணமாகவும் இந்தத் தேர்தலில் அதே மேலக்கோட்டை தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டுள்ளார். புத்தன்னையா பல்வேறு மாநில விவசாயச் சங்கங்களோடு நெருக்கமாக இருந்ததால், அவரது மகன் தர்ஷனுக்கு ஆதரவாக வெளிமாநில விவசாயச் சங்கத்தினர் பலரும் மேலக்கோட்டை தொகுதியில் பிரசாரம் செய்தனர். அந்த வகையில், தமிழகத்திலிருந்தும் விவசாயச் சங்கத்தினர், அங்கு சென்று தர்ஷனுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்ய நேரிட்டது. 

அப்படிச் சென்ற தமிழ்நாட்டு விவசாயிகளுக்குக் கன்னட மக்கள் கொடுத்த ஆத்மார்த்தமான வரவேற்பு தங்களை மெய்சிலிர்க்க வைத்துவிட்டதாகப் பூரிப்புடன் தெரிவிக்கிறார் உழவர் உழைப்பாளர் கட்சியின் தலைவர் செல்லமுத்து.

கர்நாடகத் தேர்தல்

இது தொடர்பாக நம்மிடம் பேசிய அவர், ``மொழி, இன வேறுபாடுகள் கடந்து, விவசாயிகள் என்ற அடிப்படையில் புத்தன்னையா எங்களுடன் மிகவும் நெருக்கமாகப் பழகி வந்தார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற விவசாயம் தொடர்பான நிகழ்வுகளில் ஆர்வமுடன் அவர் பங்கேற்றுள்ளார். இந்தத் தேர்தலில் மேலக்கோட்டை தொகுதியில் போட்டியிடும் அவருடைய மகன் தர்ஷனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யச் சென்றோம். காவிரி விவகாரம் உச்சத்தில் இருக்கும் இந்த வேளையில், நாங்கள் கர்நாடகாவுக்குச் சென்று அரசியல் பிரசாரம் செய்வது சிரமமாக இருக்கும் என்றுதான் நினைத்தோம். ஆனால், கர்நாடக மக்கள் எங்களுக்கு அளித்த வரவேற்பு எங்களை ஆச்சர்யப்பட வைத்தது.

தேர்தல்

எந்தவொரு வேற்றுமையும் அவர்களிடத்தில் இல்லை. குறிப்பாக காவிரிப் பிரச்னை குறித்து அவர்களே எங்களிடம் பேசினார்கள். ``விவசாயிகள் நமக்குள் என்ன வேறுபாடு? எங்கள் பயிர் கருகினாலும் ஒன்றுதான், உங்களின் பயிர் கருகினாலும் ஒன்றுதான். நிச்சயமாக நாங்கள் காவிரி நீரை தமிழகத்துக்கு வழங்குவோம். அரசியல்வாதிகளின் தலையீடு இல்லாமல், இரு மாநில விவசாயிகள் அமர்ந்து பேசினாலே காவிரி நதிநீர்ப் பிரச்னைக்குத் தீர்வு கண்டு விடலாம். ஆனால், இரண்டு மாநில அரசியல்வாதிகளும் தங்களின் சுய லாபத்துக்காக இத்தனை ஆண்டுகாலமாக காவிரிப் பிரச்னையை இழுத்தடித்துக்கொண்டு இருக்கிறார்கள் எனக் கர்நாடக விவசாயிகள் தங்களின் வேதனையைப் பகிர்ந்துகொண்டார்கள்.

கர்நாடகத் தேர்தல்

பலர் அவர்களின் வீடுகளுக்கே எங்களை அழைத்துச் சென்று, பாரம்பர்ய உணவுகளான ராகி களி, கோழிச்சாறு போன்ற உணவுகளை எங்களுக்குப் பரிமாறி மகிழ்ந்தனர்" என்றார்.

காவிரி விவகாரத்தில் தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தால்தான் கர்நாடகத்தில் நம்முடைய அஸ்திவாரம் வலுப்பெறும் என கணக்குப் போட்டு காய் நகர்த்துகிறார்கள் பி.ஜே.பியும், காங்கிரஸும். தங்களின் வாக்கு வங்கி அரசியலுக்காக இரு மாநில மக்களுக்கிடையே பகைமையை உண்டாக்கத் துடிக்கும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில், கர்நாடகத்திற்கே சென்று, அங்கு போட்டியிடும் ஒரு வேட்பாளருக்காக நம் விவசாயிகள் பிரசாரம் மேற்கொண்டதும், அங்கு நம் விவசாயிகளுக்குத் தரப்பட்ட வரவேற்பும் மனிதம் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதை வெளிப்படுத்துவதாக உள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
Advertisement