வெளியிடப்பட்ட நேரம்: 09:35 (13/05/2018)

கடைசி தொடர்பு:09:37 (13/05/2018)

மூன்றாவது அணி உருவாகுமா... தி.மு.க. வெற்றிபெறும் என மம்தா சொல்வதன் பின்னணி...!

மூன்றாவது அணி உருவாகுமா... தி.மு.க. வெற்றிபெறும் என மம்தா சொல்வதன் பின்னணி...!

மம்தா பானர்ஜி - நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி

நாடாளுமன்றத் தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ள சூழலில், அதற்கான கூட்டணி அமைப்பதில் தேசியக் கட்சிகளும், மாநிலக் கட்சிகளும் இப்போதே தீவிரம் காட்டத் தொடங்கி விட்டன. நாடாளுமன்ற மக்களவையின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு (2019) மே மாதம் முடிவடைய உள்ள நிலையில், அதற்கு முன்னதாக பொதுத்தேர்தல் நடைபெறும்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மீண்டும் வெற்றிபெறும் என்று பி.ஜே.பி-யின் முக்கியத் தலைவர்களும், மத்திய அமைச்சர்களும் இப்போதே ஆரூடம் கூறத் தொடங்கியுள்ளனர். நாடு முழுவதும் கடந்த 4 ஆண்டுகளில் நடைபெற்ற பல்வேறு மாநில சட்டசபைத் தேர்தல்களில் ஒன்றிரண்டு தவிர்த்து, பெரும்பாலான மாநிலங்களில் பி.ஜே.பி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளே ஆட்சியைப் பிடித்துள்ளன.

கர்நாடகத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், தற்போது பி.ஜே.பி. 21 மாநிலங்களில் ஆட்சியில் உள்ளது. இந்தச் சூழலில் அடுத்தாண்டு மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணி வியூகம் அமைப்பதில் காங்கிரஸ் மற்றும் மாநிலக்கட்சிகள் ஒருபுறம் தீவிரம் காட்டி வருகின்றன. தேசியக் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சிகளும் நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசனை நடத்தத் தொடங்கியுள்ளன. பி.ஜே.பி-க்கு எதிராக அனைத்துக் கட்சிகளையும் ஒன்று திரட்டும் முயற்சியில் காங்கிரஸ் இப்போதே தீவிரமாக இறங்கியுள்ளது.

இந்நிலையில் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, அடுத்தாண்டு நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி கிடையாது என்றும், வேறு எந்தக்கூட்டணியிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இணையாது என்றும் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத் தேர்தலை பொறுத்தவரை, தேர்தலுக்குப் பின்னர்தான் முரண்பாடுகள் ஏற்படுவதாகவும், தேர்தலுக்கு முன் எந்தவிதக் குழப்பமும் ஏற்படுவதில்லை என்றும் அவர் கூறினார். என்றாலும், பி.ஜே.பி-யை வீழ்த்துவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி ஆராய்ந்து வருவதாகத் தெரிவித்த அவர், மத்தியில் அதிகாரத்தில் இருந்து பி.ஜே.பி-யை இறக்குவதுதான் நம் பிரதான குறிக்கோள் என்றார். 

சந்திரசேகர ராவ் - ஸ்டாலின் - கருணாநிதி

இதற்கிடையே, தமிழகத்தில் காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தொடருமா என்ற கேள்வி இப்போதே எழுந்துள்ளது. காங்கிரஸ் கட்சியை விட்டு தி.மு.க. வெளியேறும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படும் சூழ்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியைச் சந்தித்துப் பேசியுள்ளார். இது தி.மு.க. தலைமைக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கெனவே, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முதல் ஆட்சிக்காலத்தில் (2004-2009) திருமாவளவன், அந்தக் கூட்டணியில் இருந்தார். அண்மைக்காலமாக தமிழகத்தில் நீட், காவிரிப் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் தி.மு.க. தலைமையில், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒன்றாகச் சேர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.

சோனியா காந்திஎனவே, தமிழ்நாட்டில் அடுத்து வரும் தேர்தலிலும் இந்தக் கூட்டணிக் கட்சிகள் ஒன்றிணையுமா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்தச் சூழ்நிலையில், பிரபல தமிழ் நாளிதழின் பவள விழாவில் கலந்து கொள்ள வருகை தந்த பிரதமர் மோடி, உடல் நலக்குறைவால் வீட்டில் ஓய்வில் இருக்கும் தி.மு.க. தலைவர் கருணாநிதியை அவரின் கோபாலபுரம் இல்லத்திற்கே சென்று சந்தித்தார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை அப்போது ஏற்படுத்தியது. என்றாலும், காவிரி விவகாரத்தில் மத்திய அரசையும், தமிழக அரசையும் தி.மு.க. செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் கடுமையாக விமர்சித்து வருகிறார். தொடர் போராட்டங்களையும் நடத்தி வருகிறார்.

பி.ஜே.பி. மற்றும் காங்கிரஸ் அல்லாது மூன்றாவது அணியை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தெலங்கானா முதல்வரும், டி.ஆர்.எஸ். கட்சித் தலைவருமான சந்திரசேகர ராவ், சென்னை வந்து மு.க. ஸ்டாலின் மற்றும் கருணாநிதியைச் சந்தித்தார். இதனால், மூன்றாவது அணி முயற்சியில் ஸ்டாலின் ஈடுபடுகிறாரா என்ற சந்தேகமும் எழுந்தது.

இதற்கிடையே மாநிலக்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் மேற்கு வங்க முதல்வரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி தீவிரமாக ஈடுபட்டார். தி.மு.க. செயல்தலைவர் மு.க. ஸ்டாலினுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். ஸ்டாலினும் மூன்றாவது அணி தீவிரத்தில் இருந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்துப் பேசியது அரசியல் பரபரப்பை அதிகப்படுத்தியது. தமிழகத்தில் காங்கிரஸ் - தி.மு.க கூட்டணி இடையே சமீபகாலமாக விரிசல் இருப்பதாகக் கூறப்பட்டு வந்த நிலையில், மூன்றாவது அணி அமைக்கும் ஸ்டாலினின் முயற்சி எடுபடுமா என்று அரசியல் நோக்கர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ராகுல் காந்திமூன்றாவது அணி என்ற கோஷம் நாடு முழுவதும் எதிரொலித்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், கொல்கத்தாவில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித் மம்தா பானர்ஜி, "நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. உள்ளிட்ட மாநிலக் கட்சிகள் வெற்றிபெறும். ராஷ்டிரிய ஜனதா தளம், தெலுங்குதேசம், தெலங்கானா ராஷ்டிர சமிதி போன்ற கட்சிகளும் அளப்பரிய வெற்றியைப் பெறும். எனினும் காங்கிரஸ் கட்சி, நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை வெற்றிபெற்று தனித்து ஆட்சியமைப்பது கடினம். 'பிரதமர் பொறுப்பேற்கத் தயார்' என்று ராகுல் காந்தி கூறியிருப்பது அவரின் சொந்தக் கருத்து. அவ்வாறு கருத்துக் கூற அவருக்கு உரிமை உண்டு" என்றார்.

மேலும், "அரசியல் ஆதாயத்துக்காக என்னைக் கொலை செய்ய ஒரு கட்சி முயற்சி மேற்கொண்டது. அதற்காக, கூலிப்படைக்கு பணமும் கொடுக்கப்பட்டது. இறப்புக்கு நான் ஒருபோதும் அஞ்ச மாட்டேன். என்னை அழித்து விட்டால், என்னுடைய கட்சியை ஒழித்து விடலாம் என்று எண்ணுவது மடத்தனம்" என்றார் மம்தா பானர்ஜி.

மத்திய பி.ஜே.பி. கூட்டணியில் இருந்து சிவசேனா, தெலுங்குதேசம் போன்ற கட்சிகள் வெளியேறிவிட்ட நிலையில், காங்கிரஸ் கட்சி, மாநிலக் கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுமா அல்லது தேசிய அளவில் காங்கிரஸ் தலைமையில் கூட்டணி அமைக்குமா என்ற எதிர்பார்ப்பு இப்போதே உருவாகியுள்ளது. கர்நாடகத் தேர்தல் முடிவுக்குப் பின்னர், பி.ஜே.பி-யின் பலம் என்னவென்பது வெளிப்படையாகத் தெரிய வரும். தென் மாநிலம் ஒன்றில் பலம்வாய்ந்த கட்சியாக உருவெடுத்து விட்டால், நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்று விடலாம் என்பது அக்கட்சியின் கருத்தாக உள்ளது. 

நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்பே, கூட்டணி குறித்த பேச்சுகள் எழுவதுடன், கட்சிகளின் வியூகங்களும் அமையத் தொடங்கி இருப்பது வரவேற்கத்தக்க விஷயமே. என்றாலும் நாட்டு மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்...!

நீங்க எப்படி பீல் பண்றீங்க