வெளியிடப்பட்ட நேரம்: 10:15 (13/05/2018)

கடைசி தொடர்பு:10:15 (13/05/2018)

பெற்றோரை கைவிட்டால் இனி 6 மாதம் சிறை..! 

வயது மூத்த பெற்றோரை புறக்கணிக்கும் பிள்ளைகளுக்கு இனி ஆறு மாதம் சிறை தண்டனை. மத்திய அரசின் ஒப்புதலுக்குப்பின் விரைவில் அமலுக்கு வருகிறது புதிய சட்டம். 

பெற்றோர்

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் சார்பில் டெல்லியில் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், பெற்றோரின் வயது மூப்பு காரணமாக, அவர்களைச் சரிவர கவனிக்காமல் கைவிடும் பிள்ளைகளுக்கு விதிக்கப்படும் மூன்று மாத சிறைத் தண்டனையை, ஆறு மாதமாக அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 

அதிகமாகச் சம்பாதிக்கும் பிள்ளைகள், அதற்கேற்ப தங்களின் பெற்றோருக்குப் பராமரிப்பு தொகை வழங்க வேண்டும் என்றும் மூத்த குடிமக்களின் நேரடி வாரிசுகள் மற்றும் பேரக் குழந்தைகள் மட்டுமல்லாமல் வளர்ப்பு மகன்கள், அவர்கள் வழி பேரக் குழந்தைகள் என பதினெட்டு வயதுக்குட்பட்டவர்களையும், அவர்களது காப்பாளராக அறிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. முன்னதாக, பெற்றோருக்கு அவரின் பிள்ளைகள் மாதம் தோறும் ரூபாய் பத்து ஆயிரம் பராமரிப்பு தொகையாக வழங்க வேண்டும் என்ற சட்டம் நடைமுறையில் இருந்தது. இந்தச் சட்டத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

மேலும், வயது மூப்பைக் காரணம் காட்டி, தங்களைப் பராமரிக்க மறுத்தாலோ, பராமரிப்பு தொகை வழங்க மறுத்தாலோ பெற்றோர்கள் பராமரிப்பு தீர்ப்பாயத்தை அணுகலாம் எனவும் தெரிவித்துள்ளது. நடைமுறையில் உள்ள `பராமரிப்பு,பெற்றோர் நலன் மற்றும் மூத்த குடிமக்கள் சட்டத்தில்' திருத்தம் செய்யும் வகையில், சட்ட வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஒப்புதலுக்குப்பின் விரைவில் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.