வெளியிடப்பட்ட நேரம்: 12:17 (13/05/2018)

கடைசி தொடர்பு:12:17 (13/05/2018)

கவனிக்க ஆள் வேண்டும் -13 வயது சிறுவனுக்கு திருமணம் செய்து வைத்த தாய்

13 வயது மகனை கவனிக்க ஆள் வேண்டும் என்பதுக்காக அந்த சிறுவனுக்கு  23 வயது பெண்ணை திருமணம் செய்து வைத்துள்ளார் ஆந்திராவைச் சேர்ந்த தாய். 

திருமணம்

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள உப்பாராஹல் கிரமத்தைச் சேர்ந்தவர் ரேணுகா. இவரின் கணவர் ராமைய்யா.  இருவரும் அதே கிராமத்தில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்கள். ராமைய்யாவுக்கு குடிப்பழக்கம் இருப்பதினால் வீட்டுக்குச் சரியாக பணம் தராமல், சம்பாதிக்கும் பணத்தை குடிக்காக செலவழித்து வந்துள்ளார். அன்றாட குடும்பத் தேவைகளை சமாளிக்க முடியாமல் ரேணுகா மிகவும் கஷ்டப்பட்டுள்ளார். இதனால்,அவரின் உடல் நலமும் வெகுவாக பாதிக்கப்பட்டது. 

ஆந்திர

மிகவும் மனமுடைந்த அவர், தனக்குப்பிறகு தனது குடும்பத்தை கவனிக்க பொறுப்பானவர் வேண்டும் என நினைத்து  அதற்காக, தனது மூத்த மகனுக்குத் திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளார். 13 வயதாகும் மகனுக்காகத் தீவிரமாக பெண் தேடியுள்ளார். அதன்பின், கர்நாடக மாநிலம், பெல்லாரி மாவட்டத்தில், 23 வயது உறவுக்காரப் பெண்ணை தன் மகனுக்குப் பேசி முடித்துள்ளார். இதனையடுத்து, கடந்த மாதம் 27-ம் தேதியில் இவர்களின் திருமணம் நடந்துள்ளது. இந்த நிலையில், திருமண நிகழ்வில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவிவருகிறது. 

பத்திரிக்கை

இந்நிலையில், கர்னூல் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அதிகாரி, சாரதா தலைமையிலான  குழு, அந்தக் கிராமத்துக்கு சென்று விசாரணை நடத்தியது. அப்போது,ரேணுகாவின் வீடு பூட்டப்பட்டு இருந்தது. இந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்தி வரும் போலீஸார் கூறுகையில், `திருமண புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் வெளியான பின் தான் எங்களுக்கு தகவல் தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து, சிறுவன், அவனது பெற்றோர், திருமண பெண் ஆகியோரைத் தேடி வருகிறோம்' என்றனர்.